பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அவ்வளவு அழகான நிறத்துடன் ரோஜப்பூவின் உருவம் பூண்டு திகழ்ந்தாள் அப்பெண்மணி.

அவள் பெயர் : ஸ்டெல்லா ஜான்ஸன் !

அவள் ஞானபண்டிதனை நெருங்கி, ஆதரவுடன் அவன் கரங்களைப் பற்றினாள். “தென்...ஷல் ஐ டேக் லீவ் ஆப்ஃ யூ, மிஸ்டர் ஞானபண்டித் ?...” என்றாள். அவளது முறுவலுக்கென்று அப்படி ஒரு காந்தியா ?...அமெரிக்க அழகு என்றால், சாதாரணமா, எனன ? .

தன்னுடன் தன் பங்களாவுக்கு வந்து, சாயா அருந்திச் செல்லும்படி அன்புடன் வேண்டுகோள் விடுத்தான் அவன்.

அவள் அந்த அன்பின் அழைப்பினை மனபூர்வமாக ஏற்றாள்.

அவள் காட்டிய இணக்கம் ஞானபண்டிதனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. “ஐ ஆம் ஸின்ஸியர்லி இன்டெட்டட் டு யூ, மிஸ் ஸ்டெல்லா ஜான்ஸன்” என்று நன்றி பாராட்டினான் அவன்.

இரு ஜோடிக் கண்களும் ஒருமனத்துடன் சந்தித்தன ; பிரிந்தன.

இப்படிப்பட்ட காட்சியைக் கண்ட சோமசேகர் முகம் ஏனோ கலவரம் காட்டியது. அவர் ஒரு சம்பவத்தை பசுமை திகழ நினைவுகூர்ந்தார்.

அந்த ஒரு சம்பவம் :

அன்று ஞானபண்டிதன் அமெரிக்காவுக்கு அரசாங்கத்தின் ஆதரவுடன் பயணப்பட்டான். அப்போது, ஞானபண்டிதனைத் தனியே அழைத்து, “தம்பி! காதலுக்கும் கற்புக்கும் நம் நாட்டிலே இருக்கிற மதிப்புப் போல—மரியாதையைப் போல—மேலை நாடுகளிலே இருப்பதில்லை. ஆனதாலே, நீ அயல் நாட்டுப் பெண்களின் விஷயத்திலே ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமப்பா!...” என்று நாசூக்காக எச்சரித்தார்.

அவனும் அவரது இதயத்தைப் புரிந்துகொண்டு, “உங்க மகன் உங்களைப் போலவே நல்ல பெயர் சம்பாதிப்பான் அப்பா ! துளியும் கவலைப்படாதீங்க, அப்பா!... தந்தைக்குத் தந்தையாவும், தாயாகவும் இருந்து என்னை வளர்த்து ஆளாக்கிவருகிற உங்க மனசுப்படியே நான் நடப்பேன் அப்பா !” என்று உறுதி மொழிந்தான் அவன்.