பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சயங்கொண்டார்

145


கின்றன. இவை பற்றியே பிற்காலத்தராகிய பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பார் இவரது கவித்திறமையை ஏனைய சிலருடைய கவித்திறமையுடன் ஒப்ப வைத்து,

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர்
        சயங்கொண்டான்; விருத்த மென்னும்
ஒண்பாவில் உயர்கம்பன்; கோவைஉலா
        அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
        வசைபாடக் காளமேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காச
        லாலொருவர் பகரொ ணாதே [1]

என்று சிறப்பித்து ஓதியுள்ளார்,

இவர் பாடிய மற்றொரு நூல்

இப்புலவர் பிரான் கலிங்கத்துப் பரணியைத் தவிர புகார் நகரத்து வணிகரைச் சிறப்பித்து 'இசையாயிரம்’ என்ற மற்றொரு நூலும் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையால் அறியக் கிடக்கின்றது. அந்நூலில் "செட்டிகள் மேல் இசையாயிரம் பாடிய போது செக்கார் 'புகார் தங்கட்கு ஊர்' என்று பாடச் சொல்லச் சயங்கொண்டார் பாடியது” என்ற தலைக்குறிப்புடன் காணப்படும்,

        ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணெயே
        கூடுவதும் சக்கிலியக் கோதையே-நீடுபுகழ்க்
        கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார்தாம்
        உச்சிக்குப் பின்புகார் ஊர் [2]

என்ற வெண்பாவால் இதனை அறியலாம்.


  1. தனிப்பாடல்
  2. 10. தமிழ் நாவலர் சரிதை செய். 119