உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

41


தான் இராமாயண காலக் குரங்குகள் கடலை அணைப்பதற்கு மலைகளைத் தூக்கி வருந்தின.

அணி கொண்ட குரங்கினங்கள்
     அலைகடலுக் (கு) அப்பாலை
மனலொன்று காணாமல்
     வரைஎடுத்து மயங்கினவே.[1]

[அணிகொண்ட-போர் செய்ய எழுந்த; வரை- மலை; மயங்கின-வருந்தின.]

என்று கூறுகிறார் கவிஞர். அக்காட்டில் கதிரவன் வெம்மையால் பொரிப் பொரியாய்ப்போனகாரை மரங்களும், கரிந்துபோன சூரை மரங்களும், பிற மரங்களும், செடிகளும் காட்சியளிக்கின்றன. மரங்கள் தண்ணீரின்றி வாடுதலால், தங்கள் நிழலைத் தாமே உட்கொள்ளக்கூடுமெனக் கருதி அவற்றின் நிழல் இல்லாது மறைந்து போயிற்றாம்.

பருந்துகளும், புறாக்களும், மான்களும் ஆங்காங்குச் சிற்சில இடங்களில் காணப்படுகின்றன. சிவந்த நெருப்பைத் தகடாக அடித்துப் பரப்பியது போல் பாலைநிலப் பரப்பு அமைந்திருக்கின்றது. அந்நெருப்பிலிருந்து திரண்ட புகைக் கூட்டத்தை யொப்ப ஒரு சில இடங்களில் புறாக்கள் தென்படுகின்றன. பருக நீரின்மையால் செந்நாயின் வாயில் ஒழுகும் நீரைத் தண்ணீர் என்று உவந்து மகிழ்ந்து மான்கள் நக்கி நிற்கின்றன. அக்காட்டின் வெம்மையைத் தாங்கமாட்டாமல் கருமுகிலும் வெண்மதியும் ஓடுகையில் அவற்றின் உடலில் தோன்றிய வேர்வையே பனிநீராகப் பெய்கின்றது.


  1. தாழிசை-96.