உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும்
     வெண்மதியும் கடக்க அப்பால்
ஓடியிளைத் துடல் வியர்த்த வியர்வன்றே
     உருபுனலும் பனியும் ஐயோ. [1]

[கடத்தும் கடப்போம்; முகில் மேகம்; மதி- நிலா; புனல்-மழைநீர்.]

என்பது கவிஞன் கூற்று. இந்நிலத்தின் வெம்மைக்குப் பயந்துதான் தேவர்களும் நிலத்தில் கால் வைத்து நடப்பதில்லை. அவர்கள் விண் முகட்டிவிருந்துகொண்டே கார்மேகங்களாகிய திரைச் சீலையிட்டுச் சந்திரனாகிய ஆலவட்டத்தால் விசிறிக் கொள்ளுகிறார்கள். அந்த வெம்மை நிலத்திலிருந்து வீசும் காற்று தம்மிடம் வராதிருக்கும் பொருட்டே கடல்கள் ஓயாது தம் அலைகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. திக்கு யானைகளும் தம் காதுகளை விடாது அடித்துக் கொண்டிருப்பதும் அதற்காகத்தான்.

நிலத்தில் பல வெடிப்புக்கள் காணப்படும். கதிரவன் தன் மனைவி சாயாதேவியின் பிரிவைப் பொறுக்கமாட்டாது அவ்வெடிப்புக்களில் தன் கதிர்களாகிய கைகளை விட்டு அவளைத் தேடுகிறான். பசிப் பிணியால் வாயுலர்ந்த பேய்கள் தம் வறண்ட நாக்குகளை நீட்டுவனபோல், மரப் பொந்துகளிலிருந்து பெரியபாம்புகள் வெளிக் கிளம்பும். நிலத்தில் கானலில் நீர் மிதந்து வருவதுபோல் தோன்றும்; அந்நீரில் சுழன்று வரும் சுழிகள் போல் சூறாவளி சுழன்று சுழன்று அடிக்கும். அக்காட்டில் சுடலையிலுள்ள சாம்பலில் இரத்தினங்கள் மறைந்து கிடக்கும்;


  1. தாழிசை -86.