பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வரலாற்றுக் கருவூலம்

59


பாட்டுடைத்தலைவன்) ஆகியவர்களைப்பற்றிய குறிப்புக்களும் காணப்பெறுகின்றன. கரிகாலனுக்கு முற்பட்டவர்கள் யாவரும் இதிகாச உலகைச் சேர்ந்தவர்கள்; அவனுக்குப் பின் வந்தவர்கள் வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் செய்த போர்கள், அடைந்த வெற்றிகள், கொடைத்திறன் போன்ற செய்திகள் நூலில் குறிக்கப்பெற்றுள்ளன.

இந்நூல் குறிக்கும் போர்கள்

முதல் இராசராசன் சேர நாட்டில் சதய விழாவை ஏற்படுத்தி அந்த நாட்டிலுள்ள உதகை என்னும் நகரை வென்றவன். கலிங்கத்துப்பரணி இவனை 'உதகை வென்ற கோன்' என்று குறிப்பிடுகின்றது. இவன் மகன் இராசேந்திரன் கங்கைக்கரையில் களிறுகளுக்கு நீரூட்டினான்; பர்மா தேசத்தைச் சார்ந்த கடாரத்தை வென்றான். இச் செய்தியை,

களிறு கங்கைநீர் உண்ண மண்ணையிற்
     காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமும்
     கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்.[1]

என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. முதல் இராசாதி ராசன் மேலைச் சளுக்கியர்களுடன் போர்புரிந்து துங்கபத்திரை நதிக்கரையிலுள்ள கம்பிலி என்னும் நகரத்தையும் அதிலிருந்த அரண்மனையையும் அழித்தொழித்த செய்தி 'கம்பிலிச்சயத் தம்ப நட்டதும்’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவனும்


  1. தாழிசை-202