பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வரலாற்றுக் கருவூலம்

71


ஒப்பிடலாம். இறந்தார் வீட்டு முன் நீண்ட தாரையை வைத்து ஊதும் வழக்கம் பூண்டவர்கள் 'நோக்கர் ’ என்று வழங்கப்பெற்றனர். நீண்ட குழாய் வடிவமான நீரைச் சொரியும் துருத்தி என்னும் கருவியைத் தோளில் சுமந்து தொழில் புரிவோர் 'துருத்தியாளர்' எனப்பட்டனர்.[1]

காட்டில் வேட்டையாடிப் பிடித்துக்கொணர்ந்த காட்டுப் பன்றியை தொழுவில் அடைத்துக்காத்து நிற்கும் வழக்கம் இருந்தது. இதனைக் கவிஞர்,

தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி

தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார் போல[2]

என்று சுட்டுகிருர்.

அணிகள்

மகளிர் மிக மென்மையான ஆடைகளையணிந் திருந்தனர். இது,

கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்(று) எடுத்துடுப்பீர்.[3]

என்ற தாழிசையில் புலனுகின்றது.

வளை, பாடகம், விடுகம்பி, இரட்டைவாளி என்னும் காதணி, தோளில் அணியும் வாகுவலயம், ஒற்றைச்சரடு, வன்னசரம், மணிமாலை, முத்து மாலை, பதக்கம், மகரக்குழை என்னும் காதணி, நெற்றிப்பட்டம் முதலியவை மகளிரின் அணிகளாக


  1. தாழிசை-435, 568, 573.
  2. தாழிசை-464.
  3. தாழிசை-34.