பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

பேரரசைக் கட்டிக் காக்கும் பெரும் பணியை எளிதில் தாங்கத் துணை புரிந்தது. அறிவும் அன்பும் நிறைந்தவர்களையே அரசியல் அதிகாரிகளாக ஆங்காங்கு நியமித்தான்; ஆற்றலும், ஆண்மையும் அஞ்சாமையும் கொண்டவர்களையே தண்டத் தலைவர்களாகக் கொண்டான். சோணாடு முழுவதையும் அளந்து, நிலங்களின் பரப்பையும் நிலையையும் உணர்ந்து நில வரியை ஒழுங்குபடுத்தினான்; இம்முறையால், ஓர் ஊர் இன்ன நாட்டில் உளது; அந்நாடு இன்ன வளநாட்டில் அடங்கி உளது: அவ்வளநாடு இன்ன மண்டலத்தின் உட்பிரிவு என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றும் வகையில் ஒவ்வொரு மண்டலத்தையும் பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாட்டையும் பல நாடுகளாகவும் பிரித்து வகை செய்தான். “சோழ மண்டலத்து, உய்யக் கொண்டார் வளநாட்டு, வெண்நாட்டு அமண் குடி” என்ற தொடரைக் காண்க.

இராசராசன் இறந்துவிட்டான்; அவன் அமைத்த சோழர் பேரரசு அழிந்துவிட்டது. ஆனால் அவன் பெயர் மட்டும் இன்றுவரை மறைந்திலது. இனி அது எக்காலமும் மறையாது. அவ்வாறு அவன் பெயரை என்றும் நிலை நிற்கப்பண்ணுவது, அவன் தஞ்சைமாநகரின் நடுவண் எடுத்துள்ள, ஈடும் எடுப்பும் இல்லாப் பெரியகோயிலே. இராசராசன் பெருமைக்கும் புகழுக்கும் கலங்கரை விளக்காக நிற்பது அது ஒன்றே. இராசராசேச்சுரம் எனத்தன் பெயர் இட்டு எடுத்த அக்கற்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையது; அதன்கண் வானளாவ அமைந்துள்ள நடுவிமானம் மட்டும் 216 அடி உயரம் உடையது. அதன் உச்சியில் போடப் பெற்றிருப்பது, எண்பது டன் எடையுள்ள ஒரே, கருங்கல், விமானத்தின் மேல் அமைத்திருக்கும் செப்புக் கலசம் 3083 பலம் நிறையுடையது; அக்கலசத்தை மூடியிருக்கும் பசும்பொன் 926½ கழஞ்சு. கோயிலின் வெளிச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள