பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44



அவனை வென்று, பாண்டி நாட்டில் மீண்டும் அமைதியை நிலை நாட்டினான். பின்னர்க் கேரள நாடு புகுந்து ஆங்கு அமைதி குலையக் காரணமாயிருந்த மூவருள் வேணாட்டரசனைக் கொன்றான்; கூபகநாட்டு வேந்தனை வென்று நாட்டை விட்டுத் துரத்தினான்; எலிமலைக் கண்மையில் உள்ள இராமகுட நாட்டனை வென்று அடிமைகொண்டான். இவ்வெற்றிகளால் சோழர் ஆட்சி, சேர நாட்டில் மேலும் வலுப்பெற்றது.

சோணாட்டின் தலைமையைச், சேர பாண்டியர் களைப் போலவே ஈழர்களும் வெறுத்தனர்; அதிலும் கடல் கடந்த நாட்டார், தம் நாட்டில் வந்து தம்மை அடிமை கொள்வதா என்ற வெறுப்புணர்வு வேறு, அவர்கள் உள்ளத்தை வாட்டி வதைத்தது; அதனால் சோழர்களின் ஆட்சித் தலைமையை அழிப்பதில், சேர பாண்டியர்களைக் காட்டிலும் பெரிதும் விரைவு காட்டினர். ஈழநாடு முழுவதும் சோழர் ஆட்சியே நடைபெற்றது என்றாலும், அந்நாட்டின் தென் கிழக்குப் பகுதியாகிய ரோகண நாடு மட்டும் சோழர் ஆணைக்கு அடங்காமலே இருந்தது; சோழர் படை புகமாட்டா மலையரணும், காட்டரனணும் சூழ்ந்து கிடந்த அந்நாட்டையே, ஈழநாட்டுக் கலகத் தலைவர்கள் தலைமை நிலையமாகக் கொண்டு வாழ்ந்தனர்; இராசாதிராசன் ஆட்சிக் காலத்தில் மட்டும், சோழர் படை ஐந்து முறை தாக்கப்பட்டது; அவற்றை முறையே, விக்கிரமபாகு, கித்தி, விக்கம பண்டு, வீரசலாமேகன், பராக்கிரம பண்டு எனும்பெயர் பூண்ட, அந்நாட்டு அரசர் மரபில் வந்தோர் தலைமை தாங்கிநடத்தினார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையிலும் தோல்வியே கண்டார்கள். விக்கிரமபாகு போரில் மாண்டான். முடி முதலாம் அவன் அரசச் சின்னங்கள் இராசா திராசனால் கைப்பற்றப்பட்டன. கித்தி, போரில் தோற்றுப் புறப் புண் பெற்று மானம் பொறாது தற்கொலை புரிந்து கொண்டான். பாண்டிய மன்னன் ஒருவனுக்கும், ஈழ