உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கலிங்க

யாகப் பிரியும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு இல்லை. என் செய்வது. என் மகன்போல் இன்று நீ இருக்கிறாய். நீயே இனி என் வரலாற்றுக்கு வாரிசு!" என்று கூறிவிட்டு வயோதிகன் களைத்துச் சாய்ந்து விட்டான். குளிர்ந்த நீரை முகத்திலே தெளித்து, மேலங்கியால் மெதுவாக வீசினான் வீரமணி. இரண்டொரு நிமிடங்களில், வயோதிகன் கண்களைத் திறந்தான். அணையப் போகும் தீபத்தின் நிலையிலிருந்தன அவன் கண்கள். வீரமணி விசனித்தான்.

"தாய்! அவளைத் தேடுவானேன்! அவள் நிம்மதியாக ஆண்டு கொண்டு இருக்கிறாள். வீரனே! என் மகளின் தாய், ஒரு அரசி" என்றான் வயோதிகன்.

வீரமணி ஆச்சரியப்பட்டான். "அரசியா! எங்கே? யார்? நீர் ஒரு மன்னரா!" என்று பரபரப்புடன் கேட்டான்.

"நான் மன்னனல்ல! ஆனால் என் மனதை கொள்ளை கொண்டவள், எனக்கு காதல் மதுரத்தை ஊட்டியவள், மகளை ஈந்தவள், சாதாரணக் குடியல்ல, என்போல் சாமானியமானவளுமல்ல; ஆம்! அவள் ஒரு அரசி! அன்பினால் நாங்கள் பிணைக்கப்பட்டோம், வஞ்சத்தால் வெட்டப்பட்டது எமது அன்புச் சங்கிலி! எங்கள் காதலின் கனியும் எம்மை விட்டுப் பிரிக்கப்பட்டது. என் வரலாறு மிகமிகச் சோகமுடையது" என்றான் வயோதிகன்.

"எந்தநாட்டு அரசியைப் பற்றி நீர் பேசுகிறீர்" என்று வீரமணி கேட்டான்.

"சோழ மண்டலத்துக்கும் ஆந்திர மண்டலத்துக்கும் இடையே உள்ள மலர்புரி எனும் சிற்றரசு உனக்குத் தெரியுமோ! சோழனிடமே மலர்புரி கப்பம் கட்டுவது" என்று துவக்கினான் வயோதிகன்.

"ஆமாம்! மலர்புரிக்கு விதவை மருதவல்லி அம்மையார் அரசி!" என்றான் வீரமணி.