உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராணி

67



10



"ண்மை! அந்த மருதமே, என் மனதை மகிழ்வித்தவள்! அவளுடைய விதவைக்கோலம் வெளி உலகுக்கு; எனக்கு அல்ல! வீரனே! மலர்புரி அரசிக்கு நான் ஆசை நாயகனாக இருந்தேன்! வஞ்சனைக்கல்ல, அதிகாரம் பெற அல்ல! அன்பால் நாங்கள் இருவரும் சேர்க்கப்பட்டோம். ஆடிப்பாடி களித்தோம். அரண்மனை என்பதை மறந்தோம். சோலையிலும் சாலையிலும் சுந்தரமாகச் சரசமாடினோம். அந்த நாளை எண்ணிக் கொண்டால் என் மனம் கரையும். நான் கலிங்கநாட்டிலிருந்து கிளம்பி, பல மண்டலங்களைக் கண்டு மகிழ்ந்து ஒரு நாள் மலர்புரி வந்தேன். மலர்புரி மருங்கேயுள்ள ஒரு சோலையிலே உலவிக் கொண்டு இருக்கையில், கம்பீரமான உருவுடன் ஒரு ஆரியன், என்னை அணுகினான். அவனுடைய நடையும் உடையும் என் மனதைக் கவர்ந்தது. அவன் என்னை அன்போடு ஏற இறங்கப் பார்த்தான். நான் ஆச்சரியத்துடன் அவனெதிர் நின்றிருந்தேன். "பொருத்தமான பாத்திரம்! அரண்மனைக்கேற்ற பண்டம்! என் யோகத்திற்கு ஏற்ற தண்டம்!" என்று மெல்ல சொன்னான். நான், "ஆரியரே! ஏதேதோ கூறுகிறீர். என்னை ஏற இறங்க பார்க்கிறீர். என்ன விஷயம்?" என்று கேட்டேன்.

"குரலிலே ஒரு குளிர்ச்சியுமிருக்கிறது. குமரிபாடு கொண்டாட்டந்தான். எனக்கு மட்டுமென்ன?" என்று தன்னை மறந்து பேசினான். எனக்கு கோபமும் வந்தது! அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினேன். மரத்தைப் பிடித்தாட்டினால் கனி உதிர்வதுபோல் அவன் கலகலவெனச் சிரித்துவிட்டு, "குழந்தாய்! உன்னை அதிர்ஷ்டதேவி அணைத்துக் கொள்ள வருகிறாள். உனக்கு யோகம் பிறக்கிறது" என்று கூறினான். என்னை உற்று நோக்கியபடியே.