பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல் எழுந்த காலம்

சங்கத்தொகை நூலாகிய எட்டுத் தொகையில் ஒன்று பரிபாடல் பதிற்றுப்பத்திற்கு அடுத்தாற்போல இடம் பெறுவது. இதன் நயங்கருதிப் போலும் ஒங்கு பரிபாடல் என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பித்தனர். இருபத்தைந்தடிச் சிற்றெல்லையும் நானூறு அடிப் பேரெல்லையும் உடையதாகி இன்னபாட்டு என்னும் வரையறை இன்றி ஆசிரியம், வெண்பா, கவி முதலியனவற்றை தன்பாற் பிரித்து ஏற்றுக்கொண்டு நிகழும் ஒருவகை இசைப் பாட்டிற்கு பரிபாடல் என்று பெயர்.

ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு இப்பரிபாடல் என்னும் வகையைச் சார்ந்த பாடலே வழக்கு விழுந்து போனது. பிற்காலத்து யாப்பிலக்கண நூல்களாகிய, யாப்பருங்கலம், காரிகை முதலியன இதற்கு யாப்பிலக்கணங் கூறத்தவறிவிட்டன. இதனால் பரிபாடலின் பழமை ஒருவாறு வெளிப்பட முடிகிறது.

பாடல்களின் தொகை

இந்நூலில் எழுபது பரிபாடல்கள் இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிவதற்குச் சில சான்றுகள் துணை செய்கின்றன. இறையானராகப் பொருளுரையாலும் செய்யுளியலுக்குப்பேராசிரியர் செய்த உரையாலும் அம்முடிபு நமக்குக் கிடைக்கிறது. இந்த எழுபது பாடல்களுள் திருமாலைப்பற்றிய பாடல்கள் எட்டு என்றும், முருகக் கடவுளைப்பற்றிய பாட்டு முப்பத்தொன்று என்றும், காடுகிழாளாகிய காளிதேவிக்கு ஒரு பாட்டு என்றும், வையைக்கு இருபத்தாறு பாட்டென்றும் மதுரைக்கு நான்கு பாட்டென்றும் அறியப் பழைய வெண்பா ஒன்று நமக்கு உறுதுணை செய்கின்றது. -