உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

99


'செந்தழல் போன்ற செந்நிறப் பூக்களை இலவம் பூக்கவும், நெற்பொரி போன்ற வெண்ணிறப் பூக்களைப் புன்கமரங்கள் பூத்து உதிர்க்கவும், பொன்னாலான பொடிகளைத் தூவுவது போல் கோங்கின் புதிய மலர்கள் மகரந்தங்களை உதிர்க்கவும் வந்த இவ்வேனிற் காலம், கணவரைப் பிரிந்து தனித்துக்கிடக்கும் மகளிரை, வெளியே தள்ளி எள்ளி நகைக்கும் போலும்! அம்மகளிர் அழகு அதனால் அழிந்து விடாதபடி காக்கக் கருதிய பசலை, அவ்வழகை மூடி மறைத்துவிடும் போலும்!'

'தமக்குப் போட்டியாக வந்து விட்டனரே என மனம் நொந்து அவரை எள்ளி நகைத்தற்குரிய காலத்தை எதிர்நோக்கி இருந்து, அக்காலம் வரவே, அம்மகளிரை எள்ளி நகைப்பது போல், மலர்க் கொம்புகள் மலர்களால் நிறைந்து மாண்புற்றன. அந்நிலை கண்டு வருந்தி, வாராத காதலரை நினைந்து நினைந்து, அழிந்துவிடும் போலும் என்நெஞ்சம்! பண்டு, சாயலால் தம்மை வென்ற என்னை எள்ளி நகைப்பதுபோல், மயில்கள், என் கண்முன் நின்று ஆடத்தொடங்கிவிட்டன போலும்! என் கைவளைகளும் கழன்றுவிடும் போலும்! இந்நிலை வரவும், துளித்துளியாக நீர் சொரியும் என் கண்போல், அருவிகள் நீர் ஒழுகும் இப்பருவத்திலும் காதலர் வாரார் போலும்! அதனால், என் காதல் நோயும் மேலும் மேலும் மிகும் போலும்!'

'ஒரு பக்கத்தில் யாழ் நரம்பிலிருந்து எழும் இனிய இசையைத், தாளங்கெடாதவாறு நிறுத்த உதவும் குழலோசை போல், ஓசை எழுப்பும் தேனீக்களோடு தும்பிக் கூட்டமும் ஒன்று கூடி ஒலித்தபடியே மலர்த் தேனை மாந்த, ஒரு பக்கத்தில் கருநிறக் குயில்கள், குரல் எடுத்துக் கூவுகின்றன. இந்நிலையில் தாம் வாராது போயினும், விரைவில் வந்து விடுகிறேன் எனக் கூறி ஒரு தூதுவனையும் விடுக்கவில்லை. தோழி! அவர் நம்மைக் கைவிட்டு விடுவாரோ?'

-எனப் பலப்பல கூறிக் குயிலையும், காதலரையும் சின வாதே; காதலர், நாள் எல்லை குறித்து வாக்களித்துச் சென்றதை நெஞ்சிலே நிறுத்தி, அது பொய்த்துப் போகாதபடி காற்றுப் போல் கடுக ஓடும் திண்ணிய தேர் ஏறி, வரும் அவரை வரவேற்கும் ஆர்வ மிகுதியால் பின்னல் பின்னத் தொடங்கியதையும் கைவிட்டு நாம் விரைந்து எழும்படி, விரைந்து வந்து சேர்ந்தார்!

வீறுசால்-தனிப்பெருமை. ஞாலம்-உலகம். நந்தி-நிறைந்து. மணி-பளிங்கு. வயங்கல்-கண்ணாடி. துப்பு-பவளம். பிணி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/100&oldid=1754286" இலிருந்து மீள்விக்கப்பட்டது