உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

101


தளையவிழ்பூஞ் சினைச்சுரும்பு யாழ்போல இசைப்பவும்,
கொளைதளரா தவர்தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்
கிளைஅழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல்லென்று
வளையானா நெகிழ்போடும் தோளாயின், எவன்செய்கோ?
எனவாங்கு, 20

நின்உள்நோய் நீஉரைத்து அலமரல், எல்லா! நாம்,
எண்ணிய நாள்வரை இறவாது, காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண்ணுறு பூசல் கைகளைத் தாங்கே."

பெருவெள்ளம் பாயும் காலத்தில், அவ்வெள்ள நீரைப் பல கால்வாய்கள் வழியாக எங்கும் பரப்பி உயிர்கள் நல்வாழ்வு வாழும்படி, பரந்த இவ்வுலகைப் பாதுகாத்து, வெள்ளம் வற்றிய காலத்தில், சிறிதே நீரோடு சின்னம் சிறு கால்வாய்களில் நீர் அறல்பட்டு ஓடிப், பேராறு அழகு பெறவும், முன்னொரு காலத்தில் தமக்கு ஓர் உதவியைச் செய்த ஒருவர், அவ்வாறு உதவி செய்யும் தொண்டையே முழுக்க முழுக்க மேற்கொண்டமையால், வளம் இழந்து கெட்டுப்போன காலத்தில், அவர்க்குத் தம்மால் செய்யக்கூடிய ஓர் உதவியைச் செய்பவர் போல், ஆற்றங்கரை மரங்கள், நீரூட்டி வளர்த்த ஆற்று மணல் மீது பன்னிற மலர்களை உதிர்த்துத் தூவவும், தேன் உண்ணும் ஈக்களும் வண்டுகளும் ஆரவாரம் செய்யவும், இளவேனிற் காலம் வந்துவிட்ட இக்காலத்தில்-

காஞ்சி மலரில் படிந்து, மகரந்தங்களைக் குடைந்து உண்ட குயில்கள் குரல் எடுத்துக்கூவவும்; பிரிந்து வாழ்தலால் வரும் பழிக்கு அஞ்சாக் காதலர் செய்த கொடுமையை மறைக்கவே நான் முயலுகின்றேன். ஆனால் மறைந்து வைக்க நான் எண்ணினும், பொய்ச் சான்று கூறிய ஒருவன் கொடுமையால், அவன் நின்ற மரமும் தீ பற்றி அழிந்து விடுவதுபோல், உடலோடு, உடல் அழகும் அழியும் வண்ணம் காமத்தீயை மூட்டி என் நெஞ்சு என்னைச் சுட்டுப் பொசுக்கக் கருதுமானால், நான் யாது செய்வேன்?

மலர்களின் பாரம் தாங்கமாட்டாது தளர்ந்த கொம்புகள் மீது வண்டுக் கூட்டம், மேலும் வந்து அமர்தற்கேற்ற வேனிற்காலம் வரவும், ஆசைகளை அடக்கி நிறுத்தவல்ல நம் காதலர் நம்மைப் பிரிந்து செய்த கொடுமையை மறைக்கவே நான் முயலுகின்றேன்; ஆனால், நான் மறைத்து வைக்க முயலினும், ஆளும் முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/102&oldid=1754444" இலிருந்து மீள்விக்கப்பட்டது