உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


ஆட்சியாலும் பல்லவர் நுழைவாலும் கி.பி.4 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை அல்லற்பட்டது; யாண்டும குழப்பம்; யாண்டும் போர். களப்பிரரும் பல்லவரும் வடமொழியையும் சமண சமயத்தையும் நாடெங்கும் பரப்பினர்; ஆரியர் கொள்கைகளும் மொழியும் நாட்டில் நன்கு வேரூன்றிய காலம் இதுவேயாகும். கி.பி.6 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் அப்பர், சம்பந்தர் முதலிய சைவ வைணவ சமயங்களைப் பரப்ப முனைந்துவிட்டனர்; புராணக் கதைகளும் ஆரியமதக் கோட்பாடுகளும் மிகுதியாக இப்பிற் காலத்தில் இடம் பெற்றன. இப்பிற்கால மதக்கொள்கைகள் தோன்றிய பின்பு தொகை நூல்கள் செய்யப்பட்டிரா. என்னை? அது, சமயத்தொடர்பான நூல்கள் தோன்றி ஆதரிக்கப் பெற்ற காலமாதலின் என்க.

எனவே, இதுகாறுங் கூறிய பற்பல பொருத்தமான காரணங்களால், கலித்தொகைச் செய்யுட்களின் காலம் ஏறத்தாழக் கி.மு.2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முடியவாகும் எனக் கோடல் ஒருவாறு பொருந்தும். அஃதாவது, கலித்தொகைச் செய்யுட்களும் ஏனைய தொகை நூல் செய்யுட்கள் போலப் பல நூற்றாண்டுகளில் பாடப்பட்டவையாகும். ஆயின், பிற தொகை நூற் செய்யுட்களின் கடைப்பட்ட காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டாயின், கலித்தொகைச் செய்யுட்களின் கடைப்பட்ட காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டாகும். கலித்தொகையின் காலம் கி.பி.6 ஆம் நூற்றாண்டென்பர் திரு.பி.டி.சீனிவாச ஐயங்கார். இதுகாறும் இப்பகுதியில் கூறிவந்த பற்பல அகச் சான்றுகளாலும் புறச்சான்றுகளாலும் இரண்டு செய்திகள் நன்கு வெளியாம். அவை: 1. கலித்தொகைச் செய்யுட்களின் ஆசிரியர் ஒருவர் அல்லர்; ஐவரும் அல்லர்; 'பலர்' ஆவர். 2. கலித்தொகைச் செய்யுட்களுட் பெரும் பகுதியின் காலம் கடைச்சங்கத்துக்குப் பிற்பட்டது என்பன.

இவை முடிந்த முடிவுகள் அல்ல. ஆராய்ச்சியே முடிவற்றது. ஆதலின், 'இம்முடிவுகள் பொருந்துவனவா?' என்பதைத் தமிழ் அறிஞர் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்வாராக!” -டாக்டர் மா. இராசமாணிக்கனார்


1. Dr.S.K.Iyengar's Introduction to 'The Pallava's of Kanchi' by R.Gopalan.
2. Vide his "History of the Tamils' P.582
3. இது 9,10-3-4-0 இல் சென்னையில் திரு.பண்டித ந.மு.வேங்கட சாமி நாட்டார் அவர்கள் தலைமையில் நடந்த கலித்தொகை மாநாட்டில் 'குறிஞ்சிக் கலி' என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் முற்பகுதியாகும். 'கால ஆராய்ச்சி' என்ற எமது நூலிலும் வெளியாகியுள்ளது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/15&oldid=1681586" இலிருந்து மீள்விக்கப்பட்டது