உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மா. இராசமாணிக்கனார்


நடுங்கும் அவ்வளவு மென்மையுடையவளாகிய உன் மனைவியைக் கைவிட்டுப் பொருள் மேல் விருப்பம் கொண்டு கொலைத் தொழில் வல்ல ஆறலைகள்வர், தம் கைவில்லால் கொன்று குவித்த, வழிப்போவாரின் உடல்கள்மீது இட்டு மறைத்த இலைக்குவியல்கள் முள்ளால் இட்ட நீண்ட வேலிபோல் வழி நெடுக வரிசை வரிசையாகக் காட்சி அளிக்கும் கொடிய காட்டு வழியில் தண்ணீர் வற்றிப்போன சுனையைச் சூழ்ந்து கொண்ட யானைகள், அச்சுனையடியில் சிறிதளவே நீர்தேங்கி நிற்கக்கண்டு, அதை அவை அனைத்தும் ஒருசேர உண்ண விரும்பித்தத்தம் துதிக்கைகளை அந்நீர் அருகே கொண்டு செல்ல, கோடை வெம்மையால் கொதிக்கும் அந்நீர் அக்கைகளைச் சுட்டுவிடவே, யானைகள் கலங்கிக் கைகளைத் திடுமென இழுத்துக்கொண்டு மலைச்சாரலை நோக்கி மூலைக்கு ஒன்றாய்க் கலைந்து ஓடுவதால், பழைய வழிகள் பாழ்பட்டுப் போகும் பெரிய காட்டைக் கடந்து செல்லக்கருதியுள்ளவனே! உண்மையில் நீ உறுதியான உள்ளம் உடையவனே யாவாய்!

தேடிப் பெற வேண்டிய செல்வத்தைத் தேடிப் பெறுவதால் உண்டாகும் செல்வத்தால் வருவதே பேரின்பமாம் என்று கருதுகின்றவனே! நான் கூறுவதைக் கேள்; நீ அச்செல்வத்தைத் தேடிப் பெற்றுவரும் காலம் வரை இளமையும் இன்பம் நுகர் உணர்வும் உனக்காகக் காத்திருக்க மாட்டா. அவை நாள்தோறும் குறைந்து கொண்டேயிருக்கும். காதலுணர்வு மேலிட்டு, மனைவியின் மார்பில் கிடந்து மணக்கும் மாலை கசங்கும் வண்ணம் அவளை ஆரத்தழுவி இன்புறும் நாட்கள் வீணே கழிந்து போகாதிருப்பதை உன் கருத்தில் கொள்வாயாக! ஒருவர் இவ்வுலகை விட்டு மறைந்து போகும் இறுதி நாள் இந்நாள்தான் என அறிந்தவர் ஒருவரும் உலகில் இல்லை. அது எந்தநாளிலும் நிகழ்ந்துவிடும். இவ்வுண்மைகளை நீ உன் உள்ளத்தில் கொள்வாயாக!

காதல், தன் பயன் இழந்து கெடும்படி அக்காதலோடு மாறுபட்டுப் பொருள் மேல் விருப்பம்கொண்டு போகின்றவனே! இறப்பும் மூப்பும் உண்டு என்பதை மறுந்துபோன அறிவிலிகள் கூட்டத்தோடு ஒருசேர நின்று, உலகியலுக்கு ஒவ்வாத வழியில் செல்வதை, நீ பின்பற்றாதிருப்பாயாக!

கொடுமரம்-வில். தேய்த்தார்-கொல்லப்பட்டவர். பதுக்கை-பிணக்குவியல் மறையுமாறு போட்ட இலைக்குவியல். கடுநவை-கொடிய குற்றம். அறு சுனை-நீர் அற்ற சுனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/53&oldid=1697576" இலிருந்து மீள்விக்கப்பட்டது