உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மா. இராசமாணிக்கனார்


மகன் அல்லை மன்ற; இனி;
செல்; இனிச்சென்று, நீ செய்யும் வினைமுற்றி
'அன்புஅற மாறி யாம்உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ?' என்று, வருவோரை
என்திறம் யாதும் வினவல், வினவின், 10

பகலின் விளங்கும் நின்செம்மல் சிதையத்,
தவலரும் செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு."

தலைவ! என்னை முதன் முதலாகக் கண்டு காதல் கொண்ட அன்று, வஞ்சனை கலவாத இனிய மொழிகளை மெல்ல மெல்லக் கூறி என்னை உன் வயப்படுத்திக்கொண்ட போது, நீ கூறிய அவையெல்லாம் உண்மையோடு படாத பொய்யுரைகளே என்பதை, பேதையேனாகிய நான் எவ்வாறு அறிவேன்; பரந்த இப்பேரூரில் வாழும் மகளிர் உன்னைக் குறித்தும்; என்னைக் குறித்தும் பற்பல கூறிப் பழி தூற்றும்வண்ணம் என்னைப் பிரிந்து, ஞாயிறு காயும் கொடிய காட்டு வழியில் போகத் துணிந்ததைக் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உறுதியாகக் கூறுகிறேன். உண்மையில் நீ நற்குணம் உடையவன் அல்லை!

தலைவ! நீ செல்லவிரும்பிய வினைகுறித்துச் செல். ஆனால் சென்று உன் தொழிலை முடித்துக்கொண்ட பின்னர், இங்கிருந்து ஆங்கு வருவார் யாரையேனும் காண நேர்ந்தால், 'ஊர்ப் பெரியோர்களே! என்பால் அவள் கொண்ட அன்பு நீங்குமாறு, வேறுபட்டு நான் கைவிட்டு வந்த என் மனைவி நிலைகுறித்து யாதேனும் அறிவீரோ?' என்று என்னைப்பற்றி ஏதும் வினவாதே; வினவினால் அவர்கள் என் இறப்புச் செய்தியையே கூறநேரிடும்; அது கேட்டால், ஞாயிறுபோல் உலகெலாம் சென்று பரவும் புகழுடையோனாகிய உன் சிறப்பெல்லாம் கெடுமாறு, நீ எடுத்துக்கொண்ட செயல் கெட்டுஅழிய, உனக்கோர் அவலநிலை உண்டாதலும் கூடும்!

செவ்விய-நடுவுநிலைமையில் திரியாத. தீவிய-இனிய. அஞ்ஞான்று-களவுக் காலத்தில். அகனகர்-பெரிய ஊர். பகல்-ஞாயிறு. முனிதல்-காய்தல். உள்ளல்-கருதுதல். மன்ற-உறுதியாக. அற-நீங்கும்படி. மாறி-மனம் வேறுபட்டு. என்திறம்-என்னைப் பற்றிய செய்தி. பகலின்-ஞாயிறுபோல். செம்மல்-தலைமை. தவல்-கேடு. அவலம்-துன்பச் செய்தி.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/69&oldid=1737236" இலிருந்து மீள்விக்கப்பட்டது