உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

67


உன்னைப் போல் பொருள் தேடிச் செல்லாது, மனைவி மகிழ மனையிலேயே மடிந்திருப்பவர், உண்ண வாய்ப்பின்றி உயிரிழந்து விடவுமில்லை!

இளமை நலத்தையும், இருவர் உள்ளமும் ஒன்று கலந்த வழிப் பெறலாகும் உயர்ந்த காதல் இன்பத்தையும் ஒருசேரப் பெற்றவர், அவ்வின்பத்தை வெறுத்துச், செல்வத்தை விரும்புமளவு அச்செல்வத்திற்கு எவ்விதச் சிறப்பும் இல்லை. இல்வாழ்க்கையில் உள்ள இன்பம் பொருளில் இல்லை; அது பிரிவு அறியா வாழ்க்கை உடையவர்க்கே உண்டு; வாழ்நாள் எல்லாம் தம் உடலின் ஒர பாதியை ஒரு கையால் மறைத்து, மறுபாதியை ஒரு கையால் பற்றிய சிற்றாடையால் மறைத்து வாழும் வறுமை வாழ்வினராயினும், பிரிவறியா வாழ்வைப் பெற்றவர் வாழ்க்கையே பேரின்ப வாழ்க்கையாம். அந்தோ! இளமை அழிந்து விட்டால் கழிந்த அவ்விளமையை மீட்டுப் பெறுவது அரிதினும் அரிதாகும்!

துரப்ப-வலிந்து துரத்த. பிரிந்துறை-பிரிந்து வாழும் வாழ்க்கை. சூழாதி-எண்ணற்க. சுணங்கு-தேமல். முகப்ப-வாரிக்கொள்ள. வளமை விழைதக்கது-செல்வத்திடத்து விரும்பத் தக்கதொரு சிறப்பு. ஒன்றன் கூறாடை-ஓர் ஆடையை இரண்டாக்கிப் பெற்ற ஒரு பகுதி. ஒன்றினார்-உள்ளத்தால் ஒன்றுபட்டவர்.


18. மகன் அல்லை!

ல்வி, பொருள், கடமை இவற்றுள் யாதோ ஒன்று குறித்து வெளிநாடு செல்ல விரும்பினான் ஓர் இளைஞன். அது அறிந்த அவன் மனைவி, இப்போது வேண்டாம் எனக்கூறி மறுத்தாள். அவன் அதை ஏற்றுக்கொள்ளாது போக்கிலேயே முனைந்திருந்தான். அது கண்ட அவள், பிரிந்தால் நான் உயிரிழப்பது உறுதி என்பதை உள்ளத்தில் உணர்ந்து கொள்வாயாக எனக் கூறி அவனைத் தடுத்து நிறுத்தியது இது:

"செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பையமுயங்கிய அஞ்ஞான்று அவைஎல்லாம்
பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய!
அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்; 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/68&oldid=1737233" இலிருந்து மீள்விக்கப்பட்டது