66
மா. இராசமாணிக்கனார்
17. அரிதரோ இளமை!
வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற விரிந்த உள்ளம் வாய்க்கப் பெற்ற ஓர் இளைஞன், ஒரு பெண்ணை மணந்து, இன்புற்றிருந்தான். அவ்வின்ப வாழ்க்கையால் ஆகும் முழுப் பயனையும் பெறுவதற்குள்ளாகவே, அவன் பொருள் ஈட்டிவரக் கருதினான். அஃதறிந்து, அவன் இளம் மனைவி பெரிதும் வருந்தினாள். அவளுக்கு ஒரு தோழிதானே அவள்; அவளேதான் என்று கருதுபவள் அவள். அவளுக்கு வரும் இன்ப துன்பங்கள் தனக்கு வந்தனவாகவே மதிப்பவள். அவள் அவ்விளைஞனைக் கண்டு, அவனுக்கு, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை முதலிய பல்வேறு அறவுரைகளை உரைத்து அவன் போக்கைத் தடை செய்தது இது:
"அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்
பிரிந்துறை சூழாதி ஐய! விரும்பி, நீ
என்தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும் நினைத்துக்காண்;
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;
5
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உளநாள்
ஒரோஒகை தம்முள் தழீஇ, ஒரோஒகை
ஒன்றன்கூறாடை உடுப்பவரே ஆயினும்,
10
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதரோ!
சென்ற இளமை தரற்கு."
தலைவ! பெறுதற்கரிய பொருளின்பால் உன் உள்ளம் ஆசை கொண்டதால், இவளைப் பிரிந்துபோக எண்ணாதே; என் தலைவியின் தோளில், தொய்யிற்குழம்பு கொண்டு நீ விரும்பித் தீட்டிய ஓவிய அழகினையும், நீ பிரியாதிருக்கின்றாய் என்ற உறுதியான உள்ளம் உடைமையால், இவள் மார்பிற்கு அழகு செய்து கிடக்கும் தேமலின் அழகையும் ஒருமுறை பார்த்து, இவற்றை மறந்து போவது உன்னால் இயலுமா என்பதை எண்ணிப் பார்ப்பாயாக! மேலும், நீ விரும்பிச் செல்லும் செல்வமும், விரும்புவார், விரும்பும் அளவு, அவர் விரும்பும் காலத்திலேயே கிடைக்குமாறு எங்கும் குவிந்து கிடக்கவில்லை!