உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மா. இராசமாணிக்கனார்


தாதொடும் தளிரொடும் தண்ணறல் தகைபெறப்,
பேதையோன் வினைவாங்கப் பீடிலா அரசன்நாட்டு
ஏதிலான் படைபோல இறுத்தந்தது இளவேனில்;
நிலம்பூத்த மரமிசை நிமிர்புஆலும் குயில்எள்ள
நலம்பூத்த நிறம்சாய நம்மையோ மறந்தைக்க; 10

கலம்பூத்த அணியவர் காரிகை மகிழ்செய்யப்
புலம்பூத்துப் புகழ்புஆனாக் கூடலும் உள்ளார்கொல்?
கல்மிசை மயில்ஆலக் கறங்கிஊர் அலர்தூற்றத்
தொன்னலம் நனிசாய நம்மையோ மறந்தைக்க;
ஒன்னாதார்க் கடந்தடூஉம் உரவுநீர் மாகொன்ற 15

வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும்
                                                                                 விரும்பர்கொல்?

மையெழில் மலர்உண்கண் மருவூட்டி மகிழ்கொள்ளப்
பொய்யினாற் பரிவுண்ட நம்மையோ மறந்தைக்க;
தைஇய மகளிர்தம் ஆயமோ டமர்ந்தாடும்
வையைவார் உயர்எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்? 20

எனவாங்கு,
நோய்மலி நெஞ்சமொடு இனையல், தோழி!
'நாமில்லாப் புலம்பாயின், நடுக்கம்செய் பொழுதாயின்,
காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிது' என
ஏம்உறு கடுந்திண்தேர் கடவி 25

நாம்அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே."

குறையாமல் கொடுத்து, வாழும் முறை அறிந்து வாழ்ந்த நல்வினையாளன் செல்வம் நாள்தோறும் பெருகுவது போல், ஆற்றங்கரை மரங்கள் தளிர்விட்டுத் தழைக்கவும், கேட்டாரை மயக்கச் செய்யும் மொழியும் மான் போன்ற விழியும் உடைய மகளிரின் பற்கள் போல் மணம் வீசும் முல்லை அரும்புகள் மலரவும், ஆற்றுநீர் அரித்து ஓடுவதால் அறல் பட்டுக் குளிர்ந்த மணல், கரையில் நிற்கும் மரத்திலிருந்து உதிர்ந்த மலர்களும் மாந்தளிர்களும் படிய, காதலனைக் கூடிக் களித்த காரிகையரின் கலைந்த கூந்தல் போல் காட்சி அளிக்கவும், அறிவற்ற அமைச்சன் அரசாள, படைவலி இல்லாத அரசன் நாட்டில் பகைவன் படை வந்து தங்கிவிட்டது போல், இளவேனிற் பருவம் வந்து தங்கிவிட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/85&oldid=1735483" இலிருந்து மீள்விக்கப்பட்டது