கலித்தொகை - பாலைக் கலி
85
நிலம் அழகு பெறுவதற்குக் காரணமான மரங்கள்மீது அமர்ந்து மனம் செருக்கும் குயில்கள், கூவி நகைக்கவும், நலம்மிக்க நம் மேனி பொன்னிறம் இழந்து பசலை பாயவும் காதலர் நம்மை மறந்தாலும் மறக்கட்டும்! அணிகளால் அழகு பெற்ற பரத்தையர் மகிழ்ச்சியூட்ட, அறிவு விளக்கம் பெற்று அவரை ஓயாது புகழ்வதற்கு இடமாகிய கூடல் விழாவையும் அவர் நினையாரோ? அதை நினைந்தும் அவர் வரவில்லையே!
மயில்கள் மலையில் மகிழ்ந்து ஆட, அதைக்கண்டு நாம் கலங்க, நம் கலக்கத்தைக் காணும் ஊர்ப் பெண்கள், அலர் தூற்றவும், நம் இயற்கை அழகு அவ்வளவும் அழிந்து போகவும் அவர் நம்மை மறந்தாலும் மறக்கட்டும்! பகைவரை வஞ்சித்து அழிக்காது வென்று அழிப்பவனும், கடலிடையே நின்ற மாமரத்தை அழித்தவனும் ஆன முருகன் கோயில் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றில் நிகழும் வேனில் விழா விளையாட்டையும் அவர் விரும்பமாட்டாரோ? விரும்பி இருந்தால் வந்து விடுவாரே!
கருமையால் கவின் பெற்ற, மலர் போன்ற மைதீட்டிய என் கண்கள் காதல் வெறியூட்டிக் களிக்கும்படி, பொய்யான பாராட்டுரைகளால் தன் வலையில் வீழ்த்திக் கொண்ட நம்மை மறந்தாலும் மறக்கட்டும்! ஆடை அணிகளால் அழகு செய்து கொண்ட பரத்தையரோடு மனம் கலந்து வையை ஆற்று மணல் மேட்டில் இன்பம் நுகர்வதையும் அவர் நினையாரோ? நினைப்பாராயின் இந்நேரம் வந்திருப்பாரே!
என்று எண்ணித் துயர்கொள்ளும் உள்ளத்தோடு கிடந்து வருந்தாதே. தோழி! 'நாம் இல்லாமையால் தனிமை வந்து அவளை வருத்தும். பிரிந்திருப்பவர்க்குத் துயர்தரும் வேனிற் காலமும் வந்துவிட்டது. காமவேள் விழாவும் தொடங்கிவிட்டது. காதலி பெரிதும் கலங்குவாள்' என்று எண்ணி பகைவர் அஞ்சிக் கலங்குவதற்குக் காரணமாகிய பெரிய தேர் ஏறிக் காதலர் வந்து சேர்ந்தார். நீ வருத்தத்தை விட்டொழி!
தீங்கரை-இனிய நீரோடும் ஆற்றங்கரை. நந்த-தழைக்க. பேதுறு-மயக்கும். ஊழ்ப்ப-மலர. கதுப்பு-கூந்தல். பேதையோன்-அறிவில்லாதவன். பீடு-பெருமை. ஏதிலான்-பகைவன். இறுத்தந்தது-வந்து தங்கிற்று. நிமிர்பு-மகிழ்ந்து. ஆலும்-ஆரவாரிக்கும். மறந்தைக்க-மறக்குக. கலம்பூத்த-அணிகளால் அழகு பெற்ற. புலம்பூத்து-அறிவில் சிறந்து. உள்ளார்-நினையார். கல்-மலை. ஒன்னாதார்-பகைவர். அடூஉம்-அழிக்கும். உரவுநீர்-கடல்.