உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மா. இராசமாணிக்கனார்


நயத்தார்க்கோ நல்லைமன், இளவேனில் எம்போலப்
பசந்தவர் பைதல்நோய், பகைஎனத் தணித்துநம்
இன்னுயிர் செய்யும் மருந்தாகிப், பின்னிய 15

காதலர், 'எயிறு எய்க்கும் தண்அருவி நறுமுல்லைப்
போதுஆரக் கொள்ளும் கமழ்குரற்கு' என்னும்
தூது வந்தன்றே, தோழி!
துயர்அறு கிளவியொடு அயர்ந்தீகம் விருந்தே."

கத்தரிக்கப்பட்டு, கார்மேகத்தின் நிறத்தைப் பெற்று, ஐந்து வகையாகப் பின்னி விடப்பட்ட மயிர் போன்ற கருமணல், மழை பெறாமையால் நொய்ம்மணலாய் மாற, பிடித்து விட்டாற் போல் பின்னி விடப்பட்டு, அழகு பெற நீண்ட கூந்தலின் நடுவே சூட்டிய பொன்னாலான கண்ணி போல், அக்கருமணல் மீது, வேங்கையின் பொன்னிறப் பூக்கள் உதிர்ந்து படியவும், தெளிந்த நீராலும் தூய முழுமதி நாளாலும் அழகு பெறவும், மகவீன்ற மகளிர் மேனியிற் காணப்படும் தேமல் போன்ற நெய்ப்பசையோடு கூடிய மாந்தளிரோடும், அறிவால் நிறைந்த பெரியோர் தாம் முடிக்கக் கருதிய ஒரு காரியத்தை, ஏற்ற காலம் வரும்வரையும் வெளிப்படுத்தாது தமக்குள்ளே அடக்கி வைப்பதுபோல், மலரும் பருவம் வரும்வரை, அரும்புகளை வெளியிடாது அடக்கி வைக்கும் கிளைகளோடும் வண்டுகள் யாழ் ஒலிபோல் ஆரவாரிக்கும் புதர்களோடும் மகளிர் நடிக்கும் கூத்து, காணக்காண நயம் தருதல்போல் ஆடி அசையும் மலர்க்கொடிகளோடும், ஈகையால் உன்டாவதே இறவாப் புகழாம் என உணர்ந்தவர் கொடுக்கும் கொடைப் பொருள் போல், மலர்க் கொத்துக்களை மகிழ்ந்தளிக்கும் மரங்களோடும், காதலனும் காதலியும் தழுவிக் கிடப்பதுபோல் பின்னிக்கிடக்கும் கொடிகளோடும் கூடிவரும் இளவேனிற் காலமே! எம்மை விரும்பும் எம் காதலர்க்கு, யாங்கள் இன்பப் பொருளாவது போல், உன்னை விரும்புவார்க்கு நீயும் இன்பப் பொருளாவாய்! உன்னை விரும்பாதவர்க்குத் துன்பப் பொருளாவாய்!

பெண்ணே! இவ்வேனிற் பருவம், காதலரைப் பிரிந்து ஒளி இழக்கும் மகளிரின் காதல் நோயைத் தானும் பகையெனக் கொண்டு, அதைத் தணிவித்து, இனிய அவர் உயிரை இறவாமல் செய்யும் சிறந்த மருந்தாகி, விரைவில் வந்து விடுவேன்; ஆகவே, இனி வருந்தியிருப்பதை விடுத்து அருவிக் கரையில் மலர்ந்து மகளிர் இளம்பற்களை நிகர்க்கும் முல்லை மலர்களைத் தலைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/97&oldid=1752305" இலிருந்து மீள்விக்கப்பட்டது