பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்துவன் கீரனைக் காவட்டனார்

93

அப்பாசியா

பாடப் பெற்றவன் (புறம். 359). காவட்டனாரைக் காநட்டனார் என்றும் சில பிரதிகள் குறிக்கின்றன.

அந்துவன் கீரனைக் காவட்டனார் சங்ககாலப் புலவர் (புறம். 359).

அந்துவஞ்சாத்தன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனால் பாராட்டப்பட்ட நண்பன் (புறம். 71).

அப்சல்கான் பிற்கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் தக்காணத்திலிருந்த II-ம் அலியென்னும் பீஜப்பூர் சுல்தானுடைய சேனைத் தலைவர்களில் ஒருவன். இவனுக்கு அப்துல்லா பட்டாரி என்பது பெயர். பீஜப்பூர் சுல்தானுக்கு அடங்காமல், சுயேச்சையான ஆட்சி நிறுவுவதில் முனைந்திருந்த மகாராஷ்டிரத் தலைவனான சிவாஜியை எவ்வாறேனும் அடக்கவேண்டும் என்று கருதிய அலி அப்சல்கானைச் சேனையோடு அனுப்பினான்; அப்சல்கான் போகும் வழியில் ஷோலாப்பூர் அருகிலிருந்த பவானி கோவிலை இடித்துத் தகர்த்தான். அப்சல்கான் படையோடு வருவதும், இந்துக்கோவிலை யிடித்ததும் சிவாஜிக்கு எட்டின. அப்சல்கானை எதிர்ப்பதென்று சிவாஜி தீர்மானித்துவிட்டான். தன்மீது வஞ்சம் வைத்திருக்கும் அப்சல்கான் தன்னை எவ்வாறேனும் கொல்லக் காத்திருக்கிறான் என்று எண்ணிய சிவாஜி, பிரதாபகார் என்னுமிடத்தில் தன்னைத் தனியே சந்திக்குமாறு அவனுக்குத் தூதனுப்பினான். சிவாஜியை நம்பிய அப்சல்கான் குறிப்பிட்ட இடத்திற்கு ஒரே ஒரு துணையோடு வந்து சேர்ந்தான். இருவரும் வெளிப்படையாக நண்பர்களைப் போலச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சிவாஜி அப்சல்கானைத் தழுவிக் கொண்டான். சிவாஜியின் எண்ணத்தில் ஐயம்கொண்ட அப்சல்கான் அவனை இறுகப் பிடித்துக்கொண்டான். சிவாஜி தன் கையில் வைத்திருந்த வியாக்ர நகம் (புலி நகம்) என்னும் படைக்கலத்தால் அப்சல்கானைக் கொன்றுவிட்டான் (1659). பிறகு அவன் சேனையைச் சிவாஜி எளிதில் வென்றுவிட்டான். அப்சல்கானுடைய அரண்மனை அப்சல்புரி என்னுமிடத்தில் இருந்தது. அவன் சிவாஜியோடு போர் புரியப் புறப்படுமுன் தன் இருநூறு அழகிய மனைவியர்களையும் கொன்றுவிட்டான் என்பது கூறப்படுகிறது. இது உண்மையாயின், அவனைக் கொடியவன் என்று ஐயமின்றிக் கூறலாம். தே. வெ. ம.

அப்துர் ரசாக் விஜயநகர இராச்சியத்தை இரண்டாம் தேவராயர் ஆண்ட காலத்தில், பாரசீகத்திலிருந்து இந்தியாவுக்கு அரச தூதராகக் கி.பி. 1442-ல் வந்தவர்; கள்ளிக்கோட்டையில் 1442-43-ல் ஆறு மாத காலம் அந்நாட்டுத் தலைவரான ஜாமொரினின் ஆதரவில் தங்கி இருந்தார். பிறகு தேவராயர் வேண்டுகோளுக்கிணங்கி, ஜாமொரின் இவரை விஜயநகரத்திற்கு அனுப்பினார்.

இவர் விஜயநகரத்தில் 1443-ல் சுமார் ஏழு மாதம் இருந்தார்; அதைப் பற்றிப் பல அரிய குறிப்புக்கள் எழுதியுள்ளார். அவற்றிலிருந்து அந்த இராச்சியம் கிருஷ்ணா நதியிலிருந்து குமரி வரையில் பரவி யிருந்ததெனவும், அந்நாட்டு மன்னரிடம் ஆயிரத்துக்கு மேற்பட்ட யானைகளும், பதினொரு லட்சம் வீரர்களும் கொண்ட பெரும்படை இருந்ததென்றும் தெரிகிறது. “தலை நகரம் இணையற்றது. மிகுந்த புகழையும் பெருமையையும் இந்நகர் பெற்றுள்ளது ; ஏழு அரண்களை உடையது. ஏழாவது கோட்டைக்குள் அரசனுடைய அரண்மனை அமைந்திருக்கிறது. அதை அடுத்து நான்கு பெரிய கடை வீதிகளும், பல மாளிகைளும் விளங்குகின்றன. ஊரெங்கும் ரோஜாப்பூ விற்கப்படுகிறது. இப்பூவின் மீது இவ்வூர் மக்களுக்கு மிகுந்த ஆசையுண்டு” என்று இவர் குறிப்பிட்டிருக்கிறார். எஸ். ஆர். பா.


அப்துல் காதிர் ஷாஹல் ஹமீது: பார்க்க: நாகூர் ஆண்டவர்.

அப்துல் ரஹீம்கான் கானா (ரஹீம்) (பி. 1553) ஜஹாங்கீரின் தளபதிகளில் ஒருவர். இவர் இந்தியில் நூல்கள் இயற்றியுள்ளார்; சமஸ்கிருதம், பார்சி, அரபு ஆகிய மொழிகளில் சிறந்த புலமை வாய்ந்தவர்; இலக்கியத் திறனாய்விலும் வல்லுநர். பாரவை நாயக பேத், மதனாஸ்தக முதலியவை இவர் எழுதிய நூல்கள் இவர் எழுதிய தோஹாஸ் என்னும் கண்ணிகள் பெரிதும் போற்றப்படுகின்றன. பி. வெ.

அப்துல் ஹமீது II (1842-1918) துருக்கிப் பேரரசின் 43-வது சுல்தான்; 1876-1909 வரையில் அதை ஆண்டவன்; 1839-1861 வரை அங்குச் சுல்தானாயிருந்த அப்துல் மஜீதின் மகன். இவன் தனது அண்ணனான V-ம் மூரட் என்பவனைப் பட்டத்தினின்றும் நீக்கிவிட்டுத் தானே சுல்தானானான். இவன் தன்னுடைய முதல் மந்திரியான மித்தது பாஷாவை வேலையினின்றும் நீக்கி நாடுகடத்திவிட்டான்; சட்ட சபையையும் கலைத்துவிட்டு, அரசியல் அமைப்பையே ஸ்தம்பிக்கச் செய்தான்; பிறகு தன் ஆட்சி முடியும்வரை எதேச்சாதிகாரம் செலுத்தினான். இவன் பாஸ்பரஸ் அருகிலுள்ள இல்டிஸ்கியோஸ்க் என்னும் அரண்மனையில் தனது நெருங்கிய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் வசித்து வந்தான்; இரகசியப் போலீசாரின் உதவியைக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தான். இவனுடைய மந்திரிகள்கூட இவனை நெருங்க முடியாது. நடுவர் என்னும் சில ஆலோசனையாளர் வழியாகவே இவனது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இவன் காலத்தில் நிருவாகம் மாற்றியமைக்கப்பட்டது. ஹீஜாஸ் ரெயில்வே போடப்பட்டது. 1896-ல் கான்ஸ்டான்டினோபிலில் நடந்த படுகொலையும், அர்மீனிய நாட்டவரை இவனுடைய குதிரைப் படைவீரர்கள் துன்புறுத்தியதும் இவனைக் கொடியவென்ன உலகறியச்செய்தன. 1897-ல் இவன் கிரீசோடு ஒரு சிறு போர் புரிந்தான். 1908-ல் ஏற்பட்ட இளந்துருக்கியர் இயக்கம் வலிவடைந்ததும், இவன் சட்ட சபையை மறுபடியும் கூட்டினான். ஆயினும், 1909-ல் இவன் படையுதவிகொண்டு பிற்போக்கில் ஈடுபடவே, முடிதுறந்து, நாட்டை வீட்டு கலேனிகாவிற்கு ஓடும்படியாயிற்று. 1912-ல் இவன் கான்ஸ்டான்டினோபிலுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டான். 1915-ல் அனட்டோலியாவின் தென் மேற்கில் உள்ள மானிகா என்னும் இடத்திற்குக் கடத்தப்பட்டு, அங்கு 1918-ல் இறந்தான்.

அப்பர் : பார்க்க : திருநாவுக்கரசு நாயனார்.

அப்பலேச்சியன் மலைகள் வட அமெரிக்காவின் கிழக்குப் பாகத்திலுள்ள முக்கியமான மலைத்தொடர்; 1,300 மைலுக்கு மேல் நீளமானவை. செயின்ட்லாரன்ஸ் ஆற்றிலிருந்து, அலபாமா வரையில் இந்த மலைகள் பரவியிருக்கின்றன. இவற்றிடையே உள்ள பள்ளத்தாக்குகள் மிகவும் செழிப்புள்ளவை. இம்மலைகளில் இரும்பு, கரி, நாகம், பெட்ரோலியம் முதலியவை கிடைக்கின்றன. மிச்செல் உச்சி மிக உயரமானது (6711 அடி). பார்க்க: அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

அப்பாசியா (Abbasia) இத்தாலியிலுள்ள ட்ரீஸ்ட் நகரத்திற்கு 56 மைல் தென்கிழக்கேயுள்ள நகரம். மக்: சு. 6,000. இந்நகரின் கிழக்கு தெற்குப் பகுதிகளிலுள்ள கடற்கரை மிக அழகானது. ஆண்டுதோறும் 5,000க்கு மேற்பட்ட பிரயாணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

.