பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பொலோனியஸ்

95

அப்ரடைட்டி

எனக் காட்டுகின்றன என்பது இவர் கருத்து. இவர் ஒரு சிறந்த புலவருமாவர்.

அப்பொலோனியஸ், பெர்காநாட்டு (Apollonius of Perga) கிரேக்கக்கணித அறிஞர். இவர்கி.மு. 262-ல் பிறந்தவர் எனக் கருதப்படுகிறார். இவரும், யூக்ளிடும், ஆர்க்கிமிட்ஸும் பழங்காலக் கிரேக்கக் கணித நூலின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர்கள் என்னலாம். இவர் பல நூல்களை எழுதினார் என்பது தெரிகிறது. ஆனால் அவற்றுள் கூம்பின் வெட்டு முகங்களைப் பற்றிய பெருநூல்மட்டும் கிடைத்துள்ளது. இன்றும் இவரது புகழ் மங்காதிருக்க இந்நூல் காரணமாக உள்ளது. வானியங்கு பொருள்களின் இயக்கத்தைப்பற்றி டாலமி வெளியிட்ட கருத்துக்களுக்கு இவரே காரணமாவார் என்று அவ்வறிஞரே இவரைப் புகழ்கிறார்.

அப்போசைனேசீ (Apocynaceae) அலரிக்குடும்பம். இது மிகப் பெரிய குடும்பம். இதில் முக்கியமானவை கொடிகள். மரங்களும், குற்றுச் செடிகளும், பல பருவச் சிறு செடிகளும்உண்டு. இவை பெரும்பாலும் அயனமண்டலத்தில் வளர்பவை. இவை யெல்லாவற்றிலும் பால் உண்டு. அது நஞ்சானது. இலைகள் அநேகமாக எதிர் அல்லது வட்ட அடுக்கு உள்ளவை. சிலவற்றில் ஒன்றுவிட்ட அடுக்கும் உண்டு. அவை தனித்தவை; முழு விளிம்புள்ளவை. இவைகளுக்கு இலையடிச் செதில் இருப்பதில்லை. பூக்கள் தனியாக அல்லது இருகைக் கிளைக்கும் மஞ்சரியாக அல்லது கலப்பு மஞ்சரியாக இருக்கும்; இரு

நித்தியகல்யாணி

1. கிளை. 2. பூ. 3. அல்லிவட்டமும் கேசரங்களும், 4. சூலகம். 5. ஒரு பூவிலிருந்துண்டாகும் இரண்டு ஒருபுற வெடிகனிகள். 6, 7.விதைகள்.

பால் உள்ளவை. பூவின் உறுப்புக்கள் வட்டத்திற்கு ஐந்தாக அல்லது நான்காக அமைந்திருக்கும். இதழ்கள் இணைந்திருக்கும்; ஆரைச்சீர் உள்ளவை. புல்லி 5-4 தழுவு தளை; அல்லி பெரும்பாலும் முறுக்குத் தளை; சூலறைக் கீழ் உள்ளது; சக்கர வடிவம் உள்ளது. அல்லது அடியில் குழாய் போலவும், மேலே கிண்ணம் போலவும் இருப்பதுமுண்டு. கேசரம் 5-4, அல்லியொட்டியவை. தாள் குறுகியது. பை அம்பு வடிவம்; கூர் நுனியுள்ளது; தனித்தனியாக அல்லது அல்லிக் குழாய் வாயில் கூம்பாகச் சேர்ந்து, சூலக முடியைச் சுற்றிச் சார்ந்திருக்கும். தூள்கள் பசையுள்ளவையாக ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும்.

சூலகம் இரண்டு சூலிலையுள்ளது. சூலறைப் பகுதி தனித்தனியாகவும், சூல்தண்டு, சூல்முடிகள் மட்டும் ஒன்றாகச் சேர்ந்தும் இருக்கும். சிலவற்றில் சூலறைப் பகுதியும் ஒன்றாகச் சேர்ந்திருக்கலாம். சூல்கள் பல. கனி சிலவற்றில் ஓட்டுச்சதைக் கனி (Drupe); பலவற்றில் இரண்டு ஒரு புற வெடி கனிகள் (Follicles) உண்டாகும். விதையில் மயிர்க்குச்சம் (Coma) அல்லது சிறகு (Wings) இருக்கலாம். அவற்றின் உதவியால் விதை காற்றில் பறந்து நெடுந்தூரம் பரவும்.

இந்தக் குடும்பத்தில் 180 சாதிகளும் 1,400 இனங்களும் உண்டு. அலரி, பூவுக்காகவும் செடியின் அழகுக்காகவும் வளர்ப்பது. சிவப்புப் பூக்கள் ஓரடுக்கு அல்லது பல அடுக்குள்ள ரோஜாப் பூப்போலத் தோன்றும். வெள்ளைப் பூக்களும் உண்டு. நந்தியாவட்டையில் தனிப் பூவும் அடுக்குப் பூவும் உண்டு. கள்ளிமந்தாரையின் (கப்பல் அலரி, புளுமீரியா) பூ மிகுந்த வாசனையுள்ளது. பொன்னலரி (தெவிஷியா) வேலியாக நடுவது. அலமாண்டா பெரிய மஞ்சட்பூக்களுள்ள அழகான கொடி. நித்தியகல்யாணி அல்லது குப்பைவேளை (Vinca) எங்கெங்கும் கூட்டமாக முளைத்திருக்கும் சிறு செடி ; சிவப்பு அல்லது வெள்ளைப் பூவுள்ளது. மிளகாய்ப் பூண்டு (லாக்னெரா) வயல்களிலுள்ள ஒரு களை. சிறு களா, பெருங் களா முட்செடிகள் தின்னக்கூடிய பழங்கள் உள்ளவை. இவற்றின் காயை ஊறுகாய் போடலாம். இவற்றின் பூ மல்லிகைப் பூப்போலத் தோற்றமும் மணமும் உள்ளது. துண்டம்பாலை மரத்தில் (Wrightia) பூக்கள் இருகைக் கிளைக்கும் பெருங்கொத்துக்களாக வளரும்; மணமுள்ளவை ; ஒரு பூவின் இரண்டு வெடிகனிகளும் குலறை நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கும். விதை குச்சமுள்ளது. ஏழிலைப்பாலையின் (Alstonia scholaris) பட்டை மலேரியாவுக்கு மருந்து. சில வகைகளிலிருந்து ரப்பர் எடுக்கிறார்கள். சதுப்பு நிலத்திலும் ஆற்றோரத்திலும் வளரும் உடலை மரத்தின் (Cerbera odallum) காய் மாங்காய்போலத் தோன்றும். மேலுள்ள பச்சைத்தோல் நீங்கினால் உள்ளே நார் இருக்கும். இந்தக்காய், ஆற்றிலும் கடலிலும் மிதந்து நெடுந்தூரம் பரவும். ஸ்ட்ரோபாந்தஸ் கொம்பே (Strophanthus kombe) என்னும் அயன ஆப்பிரிக்கச் செடியின் விதையிலிருந்து ஸ்ட்ரோபாந்தின் என்னும் இருதய நோய் மருந்து எடுக்கிறார்கள். அப்போசைனம் கன்னாபினம் (Apocynum cannabinum) என்னும் செடியின் வேரை உலர்த்தித் தூள் செய்து, அதிலிருந்து எடுத்த மருந்தும் இருதய நோய்க்கு நல்லது; டிஜிடாலிஸ் போன்றது.

அப்போஸ்தலர் நடபடிகள் கிறிஸ்தவ வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள ஐந்தாவது நூல்; இருபத்தெட்டு அதிகாரங்கள் கொண்டது. இயேசுவின் வாழ்க்கை வரலாறுகளாகிய சுவிசேஷங்களில் ஒன்றை இயற்றிய லூக்கா என்பவரே இதையும் எழுதினவர் என்று கருதுகிறார்கள். கிறிஸ்தவ சமயம் அதன் தொடக்கக் காலத்திலே, இயேசுவிற்குப்பின் எவ்வாறு வளர்ந்தது என்னும் வரலாற்றைச் சொல்லுகிறது. இதன் முற்பகுதியில் எருசலேமிலும், யூதேயாவிலும் திருச்சபை வளர்ந்ததையும் பேதுரு அப்போஸ்தலரையும் பற்றித் தெரிவிக்கிறது. பிற்பகுதி பவுல் அப்போஸ்தலரையும் அவர் ஆசியாமைனர், கிரீசு, ரோம் முதலிய இடங்களில் இந்தச் சமயத்தைப் பரப்பிய வரலாற்றையும் சொல்லுகிறது.

அப்ரடைட்டி (Aphrodite) கிரேக்கக் காதல் தேவதை ; கடல் நுரையில் பிறந்ததால் இந்தப் பெயர்