பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்லீசியா

96

அபிதான சிந்தாமணி

பெற்றாள். இவளை ரோமானியர் வீனஸ் என்பர். இவளுடைய ஒட்டியாணத்தை அணிபவர் காதலிக்கப் படுவர். ரோம மன்னன் ஹேட்ரியன் இவளுக்குக் கோவில் எடுத்தான். சிறந்த சிற்பிகள் இவளுக்குச் சிலை பல செய்துளர். அவற்றில் பாரிஸில் லூவர் பொருட்காட்சி யிலுள்ளது உலகப் புகழ் வாய்ந்தது.

அப்லீசியா கடல் முயல்; நத்தை வகுப்பைச் சேர்ந்த கடற்பிராணி.

அப்லீசியா

இது கடற்பாசிகளிடை மெல்ல ஊர்ந்து சென்று அவற்றை மேயும். இதன் கிளிஞ்சில் சிறியது; உடம்பினுள்ளே இருக்கிறது. இதற்கு மூச்சுச் செவுள் ஒன்றே உண்டு. அது செவுள் அறைக்குள் இருக்கும். அப்லீசியாவில் ஒருவித அருவருக்கத்தக்க மையுண்டு. அது ஊதா நிறமாக இருக்கும். கே. வீ.

அபயன் : இவன் அபய குலசேகரன் எனவும் பெறுவான். திருமுறை கண்ட புராணம் பாடிய உமாபதி சிவாசாரியர் ‘அலகில் புகழ்பெறு ராசராச மன்னன் அபயகுல சேகரன்' எனக்கூறுவர். இதனை ஆதரித்தே, கா. சுப்பிரமணிய பிள்ளை திருமுறை கண்ட சோழன் முதல் இராசராசன் என்பர். ஆனால் கலிங்கத்துப் பரணி, முதற்குலோத்துங்கனே அபயன் என்னும். தேவாரப் பதிகங்கள் சிதம்பரத்தில் இருப்பதை நம்பியாண்டார் நம்பியால் அறிந்த சோழ மன்னன், அவரைக் கொண்டே அவற்றைத் திருமுறைகளாக அடைவுபடுத்தினான் என்பர். நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியார் சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன்னால் வேய்ந்த முதல் ஆதித்தன் காலத்தின் இறுதியில் இருந்தாரெனச் சதாசிவ பண்டாரத்தார் பிற்காலச் சோழர்கள் சரித்திரத்தில் கூறுவர். அவர் கருத்தின்படி அபயன் என்பவன் முதல் ஆதித்தன் அல்லது அவன் மகன் முதற்பராந்தகன் ஆதல் வேண்டும். முதல் ஆதித்தன் காலம் கி. பி. 871-907; முதற் பராந்தகன் காலம் 907-953; முதல் இராசராசன் காலம் 985-1014; முதற் குலோத்துங்கன் காலம் 1070-1120

அபனேந்திரநாத தாகூர், டாக்டர் (1871-1951) கல்கத்தாவில் பிறந்து. முதலில் சமஸ்கிருத கல்லூரியிலும், பின்னர் சேவியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார்; சிறு வயதிலேயே சித்திரங்கள் வரைந்தார்; சிறு குழந்தைகட்குக் கதைகள் புனைவதில் விருப்பம் உடையவர்; பேர்பெற்ற ஆங்கில, இத்தாலிய ஓவியர்களிடம் ஓவியப் பயிற்சி பெற்றார் ; நீரோவியம் தீட்டுவதே முக்கியத்தொழிலாகக் கொண்டார்; நாற்பதாவது வயதில் ஹேவல் என்பவருடன் சேர்ந்து இந்திய ஓவிய மறுமலர்ச்சிக்கு அடி கோலினார்; தமது சகோதரர் ககனேந்திரநாதருடன் சேர்ந்து,கீழ் நாட்டுக் கலை இந்திய சங்கத்தை நிறுவினார்; கலையைப்பற்றிப் பல நூல்கள் இயற்றியுள்ளார்; ரவீந்திரநாத தாகூர் இறந்த பின், 1942-7-ல் விசுவபார தியில் ஆசிரியராக இருந்தார்.

ரவீந்திரநாத தாகூர் கவிதையில் சிறந்திருந்தது போல் இவர் கலையில் சிறந்திருந்தார். இருவரும் இந்தியப்

அபனேந்திரநாத தாகூர்

பண்பாட்டு வரலாற்றில் முக்கிய ஸ்தானம் வகிக்கின்றனர். இவருடைய வர்ண அமைப்பு இணையற்றது. இவர் மேனாட்டு முறைகளைத் தழுவின போதிலும், இந்திய விஷயங்களை இந்திய உருவத்திலேயே சித்திரித்துளர்; சிறு ஓவியத்திலேயே பிரமாண்டமான விளைவைக் காட்டும் திறமையுடையவர் என்பதை இவருடைய பிரயாணத்தின் முடிவு என்னும் ஓவியத்தில் காணலாம். இவருடைய ஓவியங்கள் ஆன்மாவுக்கு இன்பம் அளிப்பன. தே. பி. ரா. சௌ.

அபிசித்து (Lyra, a, ξ ) : ராசிச் சக்கரத்துக்கு வடக்கே வெகு தொலைவில் சிங்காரக் கோட்டை போல் முக்கோண வடிவமாயுள்ள நட்சத்திர மண்டலம். அதிலுள்ள தலையாய நட்சத்திரம் ஆங்கிலத்தில் வேகா என்று அழைக்கப்பெறும். சூரிய மண்டலம் இதை நோக்கியே வானில் செல்வதாக விஞ்ஞானிகள் கொள்கையுண்டு. அது ஒரு முதல்தரமான நட்சத்திரம். இதையும் உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் நடுமத்தியில் ஒரு நட்சத்திரமாகச் சில சித்தாந்தங்கள் சேர்த்துக் கணக்கிடுவதுண்டு.

அபிசீனியா : பார்க்க: இத்தியோப்பியா.

அபிடாஸ் (Abydos) 1.ஆசியா மைனரில் உள்ள ஹெல்லஸ்பாண்ட் (டார்டனல்ஸ்) என்னும் ஜலசந்திக்குத் தென்புறமுள்ள ஒரு நகரம். ஜலசந்தி மிகக் குறுகலாயிருக்கும் இடம் இதுதான். சர்சிஸ் என்னும் பாரசீகப் பேரரசன் கி.மு.480-ல் கிரீசை வெல்லப் புறப்பட்டபோது இவ்வூரிலிருந்து தான் ஐரோப்பா மீது படையெடுத்தான்.

2. அபிடாஸ் வட எகிப்தில் உள்ள ஒரு மிகப்பண்டைய நகரம்; அப்து என்பது கிரேக்கப் பெயர்; ஹெல்லஸ்பாண்ட் நகரத்தின்பெயரை இதற்கும் கிரேக்கர் இட்டனர். 40 நூற்றாண்டுகளுக்கு முன்பு எகிப்தில் ஆண்டுவந்த பேரரசர்களுடைய புதைவிடங்கள் பல இங்குத் தோண்டப்பட்டுள்ளன. இங்குள்ள பண்டைய கோவில்களின் சிதைவுகளிலிருந்து அக்கால எகிப்தியநாகரிகத்தைப்பற்றிப் பலவிவரங்கள் அறிய முடிகின்றது.

அபிதான சிந்தாமணி உலகில் வழங்கும் பலவகைப் பொருள்களின் பெயர்கள், பழக்க வழக்கங்கள், இலக்கியங்களில் வரும் பாத்திரங்கள், கதைகள், மருத்துவம், சோதிடம் போன்ற நூற்பொருள்கள், பண்டை அரசர்கள், கவிஞர், வள்ளல்கள் ஆகிய இத்தகைய பொருள்கள்பற்றிச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியராயிருந்த ஆ. சிங்காரவேலு முதலியார் 1910-ல் எழுதி வெளியிட்ட பொருள் விளக்க அகராதி. மேனாட்டுக் கலைக்களஞ்சியங்களில் காணப்படும் பொருள்கள் அனைத்தும் இதில் காணப்படாவிடினும், இதுவே தமிழ்மொழியில் முதன்முதல் கலைக்களஞ்சிய முறையில் இயற்றப்பட்டதாகும்.