உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இத்தியோப்பியா

விக்கிமூலம் இலிருந்து

இத்தியோப்பியா ஆப்பிரிக்காவில் வடகிழக்குப் பகுதியிலுள்ள நாடு. 1923 வரை அபிசீனியா என வழங்கி வந்தது. பரப்பு: 3,50,000 ச. மைல். சிற்சில இடங்கள் கடல் மட்டத்துக்கு மேல் 10,000 அடி உயரமுள்ளன. பூமத்தியரேகைக்கருகிலிருப்பினும் சம தட்ப வெப்ப நிலையையுடையது. மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரை இங்கு நல்ல மழை பெய்கிறது; மற்ற மாதங்களிலும் சுமாரான மழை உண்டு. இந்நாட்டில் பிறந்து வடக்கு நோக்கியோடும் நைல் ஆற்றினை இத்தியோப்பியர் கடவுளாகக் கருதினர். இவ்யாற்றின் வெள்ளப் பெருக்கு இந்நாட்டு வேளாண்மைக்குப் பெரிதும் உதவுகிறது. பொதுவாக இத்தியோப்பிய நாடு வடக்கே சரிந்து இருப்பதாலேயே ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்கின்றன. இரும்பு மிகுதி. ரப்பர் சில இடங்களில் கிடைக்கிறது. போக்குவரத்துச் சாதனமின்மையால் வியாபாரம் மிக்ககுறைவு. யானை, சிங்கம், நீர்க் குதிரை, காண்டாமிருகம்,

இத்தியோப்பியா

முதலை, சிவிங்கி, கழுதைப் புலி, காட்டெருமை முதலிய விலங்குகள் காடுகளில் ஏராளமாய் வசிக்கின்றன. இத்தியோப்பிய மக்களிற் பெரும்பாலார் ஹாமிட்டிக் மரபினர். செமிட்டிக் மக்களும் ஹாமிட்டிக் மக்களும் இங்கு வாழ்ந்த நீக்ரோக்களைத் துரத்திவிட்டனர். இவர்களைத் தவிர அராபியர், கிரேக்கர், ஆர்மீனியர், ஐரோப்பியர் ஆகிய மக்களும் இங்கு உள்ளனர். நிலவரி அரசனுக்குச் செலுத்தப்படல் வேண்டும். நிலவரி மிகவும் அதிகம். ஆகவே உழவு முயற்சியில் மக்களுக்கு ஊக்கம் அதிகமில்லை. காப்பிச்செடி பயிரிடுவதில் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டுள்ளனர். பருத்தி, சர்க்கரை, கிச்சிலி, பேரீந்து முதலியன கிடைக்கின்றன. மேட்டு நிலங்களில் கோதுமை, பார்லி, புகையிலை பயிரிடப்படுகின்றன. அடிஸ் அபாபா (மக்: 3 இலட்சம்) இதன் தலைநகர். (த.க) அரசர் இரண்டு ஆலோசனைச் சபைகளின் உதவியால் ஆண்டு வருகிறார். மக்: சு.1,00,00,000 (1947).

வரலாறு: கலப்பினங்கள் வசிக்கும் நாடென்று அராபியர்கள் இந்நாட்டை இகழ்ந்து அபிசீனியா என அழைத்தனர். கி.மு. 11ஆம் நூற்றாண்டுவரை எகிப்தின் ஆதிக்கத்திலிருந்தது. பின்பு அசீரியர்கள் இதைக் கைப்பற்றினர். கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தியோப்பிய மக்கள் சுதந்திர மக்களானார்கள். அக்காலத்திலிருந்து இத்தியோப்பியா ஒரு சுதந்திர நாடாக இருந்து வருகிறது. சாலமோன் மன்னன் மனைவியாகிய ஷீபா இந்நாட்டினள்.

கி.பி. நான்காவது நூற்றாண்டில் அலெக்சாந்திரியா நகரத்து அதனேஷியஸ் என்னும் கிறிஸ்தவ அறிஞர் இத்தியோப்பிய மக்களைக் கிறிஸ்தவராக்கினார். இப்பொழுதும் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவைப் பங்குபோட்டுக் கொண்டிருந்தபோது, இத்தாலி இத்தியோப்பியாவைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் அபிசீனிய மன்னராகிய II-ம் மெனலிக், இத்தாலியப்படையை அடோவாச் சண்டையில் முறியடித்து நாட்டின் சுதந்திரத்தைக் காப்பாற்றினார். ஆனால் 1935-ல் இத்தாலிய சர்வாதிகாரியான முசொலீனி இத்தியோப்பியாவின் மீது போர் தொடுத்து, அதை இத்தாலியச் சாம் ராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டார். இரண்டாம் உலக யுத்தத்தில் நேச நாட்டுப்படைகள் இத்தாலியரை இத்தியோப்பியாவை விட்டு விரட்டி, நாட்டின் சுதந்திரத்தை 1941-ல் நிறுவின. முன்பு இத்தாலிக்குச் சொந்தமாயிருந்த எரிட்ரியா 1952 செப்டம்பர் 15 லிருந்து ஐ.நா.ஏற்பாட்டின்படி இத்தியோப்பியாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் எரிட்ரியாவும் இத்தியோப்பிய மன்னரின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. இந்நாட்டின் மன்னர் I- ம் ஹெய்லி சிலாசி நீகஸ் என்றழைக்கப்படுகிறார். நீகஸ் என்பதன் பொருள் அரசர் என்பதாகும். எம். வீ. சு.

அரசியல் அமைப்பு: இந்நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநிறுத்தும் பொறுப்புச் சக்கரவர்த்தியினுடையது. அரசாங்க நிருவாகம் ஒரு மந்திரி சபையால் நடத்தப்படுகிறது. செனெட்டும் பிரதிநிதிகள் சபையும் சட்டமியற்றும் ஜனநாயக உறுப்புக்கள். மேனாட்டு முறையில் மக்கள் ஆட்சி இன்னும் பெருகவில்லை. நாடு 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு கவர்னர் ஜெனரல் உண்டு. இம் மாகாணங்களின் உட்பிரிவு ஒவ்வொன்றிற்கும் ஒரு கவர்னர் உண்டு. கவர்னர் ஜெனரல் உள்நாட்டு மந்திரியின் அதிகாரத்தின்கீழ் இருப்பார். மாகாணப் பொருளாதாரம் நிதிமந்திரியின் கட்டுப்பாட்டில் இருக்கும். அடிஸ் அபாபாவிலிருக்கும் உச்ச நீதிமன்றமே நாட்டில் உயர்ந்த அப்பீல் கோர்ட்டு. குற்றச் சட்டத்தொகுப்பு ஒன்று சென்ற இருபது ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. வெளிநாட்டார் பெற்றுவந்த தனி உரிமைகளும் சலிகைகளும் சமீபகாலத்தில் நீக்கப்பட்டன. அரசியல் குற்றங்களை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் உள்ளன. இத்தியோப்பியாவிலுள்ள முக்கியமான மக்கள் இனம் அம்ஹாரர் எனப்படும். அவர்கள் தொகை சு. 20 இலட்சம். அவர்கள் மத்திய பகுதியில் உள்ளனர். அவர்களுடைய மொழியாகிய அம்ஹாலிக் என்பதே அரசாங்க மொழி. சிறுபான்மையாளரான முஸ்லிம்கள் உள்ள முக்கிய ஊர் ஹாரர். மக்:25,000 (1953). சி. எஸ். ஸ்ரீ.