பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிநந்தனர்

97

அபுகிர் விரிகுடா


அபிநந்தனர் ஜைன தீர்த்தங்கரர்களில் நாலாமவர் இட்சுவாகு மரபில் சுயம்வர மன்னரின் புதல்வர். தாய் சித்தார்த்த தேவி. (திருக்கலம்பகம் காப்பு. உரை).

அபிமன்னியு மகா பாரத வீரர்களிற் சிறந்தவன்; அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணன் தங்கை சுபத்திரைக்கும் மகன் ; பரீட்சித்து மன்னனின் தந்தை. இவன் இளைஞனாயினும், பாரதப்போரில் தனியே இவனைத் வெல்லமுடியாமற் பலர் பல பக்கமும் இருந்து தாக்கிக் கொன்றனர்.

அபிராமி பட்டர் சோழ நாட்டுத் திருக்கடவூரினர் ; புரோகிதர்; 18ஆம் நூற்றாண்டினர். தஞ்சை சரபோஜி மன்னன் காலத்தவர். அபிராமியந்தாதி பாடியவர். இந்த அந்தாதி சொல்லழகும் பொருளழகும் மிக்கது.

அபினி கசகசாச் செடியின் இளங்காயைக் கீறி, அதிலிருந்து வடியும் பாலைக் காற்றில் உலர்த்தியதாகும். இதை முக்கியமாக இந்தியா, பாரசீகம், துருக்கி, யூகோஸ்லாவியா, மாசிடோனியா, பல்கேரியா, சீனா, ஆசியா மைனர் என்னும் நாடுகளில் எடுக்கிறார்கள். பூப்பூத்து,

கசகசாச் செடி

1. பூ 2. காய் 3. காயின் குறுக்கு வெட்டு

இதழ்கள் உதிர்ந்து இரண்டு வாரமானதும், மெதுவாக இருக்கும் காயை, நீளவாட்டில் கூரிய பற்க ளுள்ள கருவியினாலே மாலை நேரத்தில் கீறிவிடுவார்கள். மறுநாள் காலையில் வடிந்து தோய்ந்த பாலைச் சுரண்டி யெடுத்துச் சாய்வான ஒரு ஏனத்தில் வைப்பார்கள். அதிலிருந்து கறுப்பான நீர் கசிந்து வழிந்து போய்விடும். மீதியிருப்பதைக் காற்றில் முதிர வைப்பார்கள். அப்பால் அதை உண்டை அல்லது சதுர வில்லையாக்கிக் கசகசா இலையில் மடித்து, எண்ணெய் தடவிய காகிதத்தில் சுருட்டி வைத்துக்கொள்ளுவார்கள்.

அபினியிலிருந்து பல ஆல்கலாயீடுகள் எடுக்கிறார்கள். அவற்றுள் சில முக்கியமான மருந்துகள். எல்லாவற்றுள்ளும் மிக முக்கியமானது மார்பீன் (Morphine) என்பது. இது அபினியில் 4-21% இருக்கிறது. கோடீன் (Codeine). பாப்பவெரீன், நார்க்கோட்டீன், தீபெயின் (Thebaine), நார்சியீன், புரோட்டோப்பீன் முதலியவையும் இருக்கின்றன.

அபினி முக்கியமாக மத்திய நரம்பு மண்டலத்தில் வேலை செய்கிறது; அதைத் தூண்டவும் செய்கிறது; சோர்வுறவும் செய்கிறது; குடைச்சல், வலி முதலியவற்றிற்கு மேலுக்குத் தடவும் மருந்தாகப் பயன்படுகிறது. கண்ணுக்கு வரும் கண் வலி முதலிய சில நோய்களுக்கும் இது மருந்து. வயிற்றுப்போக்குக்குக் கொடுத்தால் பேதியைக் கட்டும். சீதபேதிக்கும் இதைக் கொடுக்கிறார்கள். இதைத் தூளாகவும், டிங்சராகவும், கர்ப்பூர டிங்சராகவும் கையாளுகிறார்கள். டோவர் சூரணத்தில் இப்பிகாகுவானாவும் அபினியும் சேர்ந்திருக்கின்றன. இவற்றிலெல்லாம் முக்கியமாக வேலைசெய்வது மார்பீன்.

அபினியை லாகிரிப் பொருளாக உட்கொள்ளுகின்றனர். இதன் புகையைப் பிடிக்கின்றனர். இவை கொடிய பழக்கங்கள். அபினி வியாபாரம், புழங்குதல் முதலியவற்றைக் குறித்து எல்லா நாடுகளிலும் கண்டிப்பான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பார்க்க: கசகசா. கே. எஸ். ஸ்ரீ.

அபினி வர்த்தகம், சீனாவில் : சீனாவில் 9 ஆம் நூற்றாண்டில் அராபியர்களால் அபினி புகுத்தப்பட்டது. அதுமுதல் சீனாவிலும் கிழக்கிந்தியத் தீவுகளிலும் அபினிப் பழக்கம் வளர்ந்து வந்தது. அபினியைப் புகைத்து உட்கொள்ளும் பழக்கம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே சீனாவில் தொடங்கிற்று. சீனாவில். அபினிச் செடியும் மிகுதியாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவிலிருந்து சீனா மிகுதியாக அபினியை இறக்குமதி செய்துவந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பிற நாடுகளினின்றும் இதை வரவழைத்தனர். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ததால், மிகுந்த பொருளீட்டிவந்த ஆங்கிலேயர், சீனா பிற நாடுகளிலிருந்து அபினி இறக்குமதி செய்யக்கூடாதென்று 1840-ல் கூறினர். இது சீன - ஆங்கில யுத்தத்தில் வந்து முடிந்தது. இந்த யுத்தத்திற்கு 'அபினி யுத்தம்' என்பது பெயர். யுத்தத்தில் வெற்றிகொண்ட பிரிட்டன் ஹாங்காங்கை வசப்படுத்திக்கொண்டதோடு வேறு சில சலுகைகளையும் பெற்றது. 1906-ல் சீனர், அபினி விலக்குச் சட்டம் செய்தனர். ஆயினும் சீன-ஜப்பானிய யுத்தம் தொடங்கிய பிறகு, ஜப்பானியர் அபினிப் பழக்கத்தை மறுபடியும் சீனாவில் பரப்பலாயினர். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிறகு அபினிப் பழக்கம் சீனாவில் மிகவும் குறைந்துவிட்டது.

அபுகிர் விரிகுடா (Aboukir Bay) நைல்நதி முகத்துவாரத்தில் உள்ளது. 1798-ல் இங்கு நடந்த கடற்போரில் பிரிட்டிஷ் அட்மிரல் நெல்சன் பிரென்சுக் கப்பற்படையைத் தோற்கடித்தான். இதற்கு நைல் நதிப்போர் என்பதும், அபுகிர் விரிகுடாப்போர் என்பதும் பெயர்.