பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபுல் பசல்

98

அம்பர் கிழான் அருவந்தை


அபுல் பசல் (1551-1602) மொகலாயப் பேரரசனான அக்பருடைய அந்தரங்க நண்பராயிருந்த அறிஞர். இவர் ஷேக் முபாரக் என்பவரின் குமாரர். இவரும் இவர் தமையனாரான அபுல்பெய்சியும் அக்பருடைய நன்மதிப்பைப் பெற்று, அம்மன்னன் அவையில் புகழோடு விளங்கியவர்கள். இவர் 1574-ல் அக்பருடைய அவைக்கு வந்து சேர்ந்தார். பெய்சி ஒரு புலவர். ஆனால் அபுல் பசல் பல கலைகளையும் கற்ற பேரறிவாளர். அவருக்கு அக்பரிடம் மிகுந்த செல்வாக்கு இருந்தது, அபுல் பசல் 4,000 குதிரை வீரர்களுக்குத் தலைவரான மன்சப்தாராக இருந்தார். அவர் பாரசீக மொழியில் அக்பர்நாமா, அயினி அக்பரி என்னும் நூல்களை இயற்றியுள்ளார். அக்பர் நாமா என்பது இரண்டு பாகமாக உள்ள ஒரு பெரு நூல்; அக்பரைப்பற்றி விவரித்துக் கூறுவது. அயினி அக்பரி அக்பருடைய ஆட்சி முறையைப்பற்றியும், சமய இயக்கங்களைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறது. இந்நூல்களில் இவர் தமது மன்னனைப்பற்றி உண்மையின் எல்லையைக் கடந்து புகழ்ந்துள்ளார் என்று சில வரலாற்றாசிரியர் கூறுவர். ஆயினும் இந்நூல்கள் இல்லாவிடில் அக்பருடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் பல விவரங்களை நாம் அறிந்துகொள்ள இயலாது. இவருக்கு நால்வர் மனைவியர். அக்பர் ஆட்சியில் அப்பேரரசனுக்கு அடுத்தபடியாக இவரையே முதன்மையான மனிதராகக் கூறலாம். இவர் அரசாங்க நிமித்தமாக ஒரு முறை தக்காணத்திலிருந்து ஆக்ரா நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தன் தந்தை அக்பர்மீது இவருக்கிருந்த செல்வாக்கை விரும்பாத சலீம் இளவரசன் (ஜகாங்கீர்) இவரைக் கொன்றுவிட ஏற்பாடு செய்தான். 1602-ல் இவர் சலீமின் ஆளான பீர்சிங் என் பவனால் கொல்லப்பட்டார். தே. வெ. ம.

அபெர்டீன் (Aberdeen) வட ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு முக்கியமான துறைமுகப்பட்டினம், பரப்பு: 17 சதுரமைல். மக் : 3,08,055 (1951). இதைக் 'கருங்கல் நகரம்' என்றும் கூறுவர் ; 'கடலையடுத்த வெள்ளி நகரம்' என்று இதை வருணிப்பர். இங்குள்ள ஒருவகைக் கல்லால் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதாலும், அவை வெயிலில் ஒளியோடு விளங்குகின்றன ஆகையாலும், இப்பெயர்கள் பெற்றது. இந்நகரில் பல அழகிய பூங்காக்கள் இருக்கின்றன. இங்கு ஒரு பல்கலைக் கழகம் உண்டு. இதைச் சார்ந்த கல்லூரிகள் சென்ற 4 நூற்றாண்டுகளாக இருந்துவருகின்றன. மீன்பிடித்தல், காகிதம் செய்தல், கயிறு செய்தல், வேலைக்கான மரம் அறுத்தல் முதலியவை முக்கியமான தொழில்கள் : 12ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்நகரம் வரலாற்றுப் பெருமை வாய்ந்ததாக இருந்து வருகிறது. 12, 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்காட்டிஷ் மன்னர்கள் இந்நகரை இருப்பிடமாகக் கொண்டிருந்தனர். அவர்களில் ராபர்ட் புரூஸ் தான் இழந்துவிட்ட சிம்மாசனத்தைத் திரும்பவும் கைப்பற்றச் செய்த முயற்சிகளுக்கு இந்நகரினர் மிகவும் உதவினர். இப்பெயருள்ள நகர்கள் அமெரிக்காவிலுள்ள வடகிழக்கு மிசிசிபியில் ஒன்றும் (மக் : 5,000), தென் டக்கோட்டாவில் ஒன்றும் (மக்: சு. 17,000), சிரேஸ் ஹார்பரில் ஒன்றும் (மக்: சு. 19,000) இருக்கின்றன.

அம்பர் தஞ்சாவூர் ஜில்லாவில் பூந்தோட்டம் புகை வண்டி நிலையத்துக்குத் தென்கிழக்கே 2 மைல் தொலைவில் உள்ளது. இது சோமாசிமாற நாயனார் முத்திபெற்ற தலம். இங்குள்ள கோயிலுக்குப் பெருந்திருக் கோயில் என்று பெயர். இது கோச்செங்கட் சோழர் கட்டினது. இதற்கு முக்கால் மைல் தொலைவில் அம்பர் மாகாளம் என்னும் தலம் இருக்கிறது. அம்பருக்கும் அம்பர் மாகாளத்திற்கும் இடையில் சோமாசிமாற நாயனார் வேள்வி செய்த மண்டபம் இருக்கின்றது. அம்பர் திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சுவாமி பிரமபுரீசர். அம்மன் பூங்குழலம்மை. பிரம தீர்த்தம். புன்னை மரம். இதற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய தலபுராணம் உண்டு.

அம்பர் பழங்காலத்தில் ஜெய்ப்பூர் அரசின் தலைநகராக இருந்து, இப்போது சிதைந்த நிலையிலுள்ள இடம். இது ஜெய்ப்பூர் நகரிலிருந்து 5 மைல் தொலைவில் உள்ளது. இதை 1037-ல் ராஜபுத்திரர் கைப்பற்றி எழு நூற்றாண்டுகள் தலைநகராகக் கொண்டிருந்தார்கள். 1600-ல் மான்சிங்கு கட்டிய அரண்மனையும் மலையிடுக்கிலுள்ள ஏரியும் அழகு நிறைந்தவை. திவானி ஆம் என்ற அரண்மனையிலுள்ள சிற்பங்கள் தமது தலைநகரிலுள்ள சிற்பங்களை விட அழகுவாய்ந்தவை என ஜகாங்கீர் கேள்வியுற்றுக் கோபமடைந்தார். இவரது கோபத்தைத் தணிக்க, அவற்றின் மேல் காரை பூசி மறைத்து விட்டார்கள்.

அம்பர் (Ambergris) கடல்படு திரவியம் ; ஓர்க்கோலை எனவும்படும் ; திமிங்கில வகையில் ஒன்றான ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் குடலிலிருந்து வரும் மெழுகு போன்ற பொருள். இது வாசனைத் திரவியங்கள் செய்வதற்குப் பயன்படுகிறது ; அவற்றின் மணம் நெடு நாளைக்கு நிலைத்திருக்கச் செய்கிறது. சில சமயங்களில் திமிங்கிலத்தின் உடலிலிருந்து கழிவுப் பொருளாக வெளியே வந்து, நீரில் கட்டிக்கட்டியாக மிதந்து கொண்டிருக்கும்; கரையிலும் ஒதுங்கும். செத்துப்போன திமிங்கிலத்தின் உடலிலிருந்தும் இதை யெடுப்பார்கள். இது திமிங்கிலத்துக்குக் குடல் நோயினால் உண்டாவது என்கிறார்கள். குடலுக்குள் இருக்கும்போது இது கெட்ட நாற்றமுள்ளது ; காற்றுப்பட்டபிறகு நல்ல மணமுடையதாகிறது.

அம்பர் (Amber) கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிருடனிருந்த மரங்களிலிருந்து வந்த பிசின் நிலத்திற் புதைந்து, புவியின் பரப்பில் விளைந்த மாறுதல்களால் இறுகி, மஞ்சட் பழுப்பு நிறமுள்ள ஒரு பொருளாக மாறியது. இதுவே அம்பர் எனப்படும். இது தற்காலத்தில் பால்டிக் கடலோரத்தில் கிடைக்கிறது. தெளிவான அம்பர்க் கட்டிகளில் நீர்க்குமிழிகளும், காற்றுக் குமிழிகளும் இருக்கும். அம்பர்ப் பிசின் ஈரமாக இருந்தபோது, அதில் ஒட்டிக்கொண்டும் அதற்குள் சிக்கிக் கொண்டுமிருந்த பற்பல தாவரங்களும் பூச்சிகளும், அது இறுகி அம்பராகிய போதும் அதனுள்ளேயே அடைபட்டிருக்கின்றன. இவ்வாறு அவை சிறிதும் கெடாது பாதுகாக்கப்பட்டதால், அம்பர்க் கட்டிகளிலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிர் வகைகளைப் பற்றி அறிய முடிகிறது. அம்பர், நகைகள் போன்ற அலங்காரப் பொருள்கள் செய்யப் பயன்பட்டு வந்துள்ளது. சாதாரண வகை அம்பரைத் தூளாக்கிச் சாயங்களிலும், மெருகெண்ணெயிலும் பயன்படுத்துகின்றனர். இது நல்ல மின் காப்புப் பொருளாகையால் மின்சாரத் தொழிலிலும் பயன்பட வழியுண்டு.

அம்பர் கிழான் அருவந்தை அம்பர் என்னும் ஊரிலிருந்த ஒரு தலைவன். அம்பர் சோழ நாட்டில் உள்ளது. இவன், 'கற்ற நாவினன், கேட்ட செவியினன், முற்ற உணர்ந்த மூதறிவாளன், நாகரிக நாட்டத்தன்' எனவும், 'நீடிசைத்தலைவன்' எனவும் பாராட்-