பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

117

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

பெரும்பகை மூண்டது. கப்பல் வர்த்தகச் சட்டங்களை மீறி, எல்லா நாடுகளோடும் அமெரிக்கா வியாபாரம் செய்யத் தொடங்கிற்று. 1776 ஜூலை 4 ஆம் நாளில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்தன.

1775-க்குப்பின் காங்கிரசு சபை இரண்டாவது முறையாகக் கூடி, அமெரிக்கப் போர்ப்படைகளை நன்கு அமைத்து, அவற்றிற்கு வர்ஜீனியாவைச் சார்ந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்பவரைத் தலைமைத் தளபதியாக நியமித்தது. மசசூசிட்சில் கவர்னராயிருந்த கேஜ் (Gage) குடியேற்றப் படைகளை அடக்க முயன்றது பலிக்கவில்லை. இங்கிலாந்திலிருந்து போதிய அளவு படை வரவில்லை; பிரிட்டிஷ் கப்பற்படையின் தரமும் குறைந்திருந்தது. 1775-ல் பங்கர் ஹில் என்னுமிடத்தில் நடந்த சிறு சண்டையில் பிரிட்டிஷ் படைகள் பெருத்த நஷ்டத்தோடு வெற்றியடைந்தன. 1775-ல் போஸ்ட்டனைக் கைவிட்டுவிட்டு, பிரிட்டிஷ் படைகள் நியூயார்க்கைத் தங்கள் ராணுவத் தலைமையிடமாகக் கொண்டன. காரன்வாலிஸ் என்னும் பிரிட்டிஷ் தளபதி நியூஜெர்சியைக் கைப்பற்றியதும், வாஷிங்டன் தாமே பிரிட்டிஷ் படைகளைத்தாக்கி நியூஜர்சியை மறுபடியும் கைப்பற்றினார். 1777-ல் ஹோவிற்குப் பதிலாகப் பர்காயன் (Burgoyne) பிரிட்டிஷ் தளபதியானார். ஆங்கிலப்படைத் தலைவர் களான கிளின்டன், ஹோ, காரன்வாலிஸ் ஆகிய மூவரும் 1777-ல் சேர்ந்து செய்த போரில், வாஷிங்டன் பிராண்டிவைன் முதலிய இடங்களில் தோற்கடிக்கப்பட்டார்; ஆயினும் பர்காயனுடைய படையொன்று சரடோகாவில் ஜெனரல் கேட்ஸ் (Gates) என்பவரிடம் தோற்றுச் சரண்புகுந்தது.

இக்காலத்தில் தான் பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் சண்டை மூண்டது. ஹோ, காரன்வாலிஸ் இருவரும் சார்லஸ் டவுனில் குடியேற்றப் படையைத் தோற்கடித்தனர். ஆயினும் பார்க் டவுனில் காரன்வாலிஸ் வாஷிங்டனுக்குத் தோற்று, அமெரிக்கரிடம் சரணடைந்து விட்டார்.

1782 நவம்பரில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இங்கிலாந்திற்கும் சமாதானம் ஏற்பட்டது. இங்கிலாந்து அமெரிக்க சாம்ராச்சியத்தில் முக்கியமான பகுதியை இழந்தது. ஒரு புதிய வலிய இராச்சியம் எழுந்தது. குடியேற்ற நாடுகளை வலக்கட்டாயத்தால் ஆள எண்ணுவது மடமை என்பது ஆங்கிலேயருக்கு விளங்கிற்று.

சுதந்திரம் பெற்ற குடியேற்ற நாடுகள் தத்தமக்கு வேண்டிய அரசியல் முறைகளை வகுத்துக் கொள்ளத் தொடங்கின. இவற்றில் மக்களின் அடிப்படை உரிமைகள் விவரிக்கப்பட்டன. பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்த போதிலும், எல்லா இராச்சியங்களிலும் ஒரே மாதிரியான அரசியல் அமைப்பு ஏற்பட்டது என்று கூற முடியாது. இந்நாடுகள் எல்லாம் அமெரிக்க ஐக்கியம் என்னும் ஒரு பெரிய அரசியல் ஸ்பானத்திற்குட்பட்டவையாக இருக்கவில்லை. 1775 லிருந்து 1781 வரையில் 13 இராச்சியங்களே அமெரிக்க இராச்சியங்களாயிருந்தன. 1777-ல் இவ்வீராச்சியங்கள் தமக்குள் ஒரு நாட்டுக் கூட்ட (Confederation) உடன்படிக்கை செய்து கொண்டன. இதன்படி காங்கிரசு ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கூடவேண்டும்; அதற்கு இராச்சியங்கள் மீது அதிகாரம் உண்டேயன்றி, அவ்விராச்சிய மக்கள் மீது நேரடியாக அதிகாரம் இல்லை என்று ஏற்பட்டது.

1786 வெர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி, அல்லிகனி மலைகளுக்கும் மிசிசிபிக்கும் இடையே உள்ள பிரதேசம் அமெரிக்காவிற்குச் சொந்தமாயிற்று. 1787-ல் வட மேற்குப் பிரதேசச் சட்டம் ஒன்று ஏற்பட்டு, அப்பிர தேசமும் அமெரிக்க இராச்சியங்களுக்குச் சொந்தமா யிற்று. அப்பிரதேசத்தில் ஓஹியோ, இண்டியானா, இல்லினாய்ஸ், மிச்சிகன், விஸ்கான்சின் என்பவை அடங்கியிருந்தன ; இந்த இராச்சியங்களில் வடக்கே இருந்தவற்றில் கைத்தொழில் முன்னேறியதால் அடிமை நிலை நடைமுறையில் இல்லை. தெற்கே யிருந்த விவசாய இராச்சியங்களில் குறைந்த செலவில் அதிக ஆட்கள் வேண்டி யிருந்ததால் அடிமை நிலை நடைமுறையில் இருந்தது.

அமெரிக்க இராச்சியங்களின் படைத் தலைவராயிருந்த ஜார்ஜ் வாஷிங்டன் விரும்பி யிருந்தால் படை வலிமை கொண்டு அந்நாட்டு மன்னராகி யிருக்கலாம். ஒரு சிறிதும் தற்பெருமையில் விருப்பமில்லாத அப்பெரியார் அரச பதவியை வெறுத்தார். முதலில் இராச்சியங்கள் தத்தம் சுதந்திரத்திலேயே கருத்தாக இருந்ததால், ஒற்றுமைப்பட வழியில்லாமலிருந்தது. ஆனால் தனித்திருப்பதால் தங்கள் சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்படும் என்று உணர்ந்த அவ்விராச்சியங்கள் தங்களுக்குள் ஓர் ஒற்றுமையான அரசியல் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்தன. அரசியல் சட்டக் கன்வென்ஷன் 1787-ல் நிறுவப்பட்டது. கூட்டாட்சிக் கட்சி, கூட்டாட்சி எதிர்க்கட்சி என்று இரண்டு அரசியல் கட்சிகள் தோன்றின. அறிஞர்களான பெஞ்சமின் பிராங்கிளின், ஜேம்ஸ் மாடிசன், அலெக்சாந்தர் ஹாமில்ட்டன், எட்மண்டு ராண்டால்ப், வில்லியம் பேட்டர்சன் போன்றவர்கள் அந்தக் கன்வென்ஷனில் உறுப்பினரா யிருந்தனர். அவர்களுடைய நன்முயற்சியால் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சட்டம் உருவாயிற்று. இதை ஒவ்வொன்றாக எல்லா இராச்சியங்களும் ஒப்புக்கொண்டன. ஒரு பெரிய நாட்டிற்கு மன்னனில்லாத குடியரசு முறைப்படி ஜன நாயக ஆட்சித் திட்டம் முதன் முதலாக வரலாற்றிலேயே அந்நாட்டில் ஏற்பட்டது. ஜனாதிபதியாக யாரை நியமிப்பது என்பதைப் பற்றி யாருக்குமே ஐயமில்லை. அரசியல் அறிவிலும், தைரியத்திலும், பண்பாட்டிலும், பெருமையிலும் நிகரற்று விளங்கிய பெரியாராகிய வாஷிங்டன் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதியாக ஒருமுகமாக 1789-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே அடுத்த முறையும் ஜனாதிபதியானார். 1953 வரை (164) ஆண்டுகள், 33 ஜனாதிபதிகள் அந்நாட்டில் ஆட்சித் தலைவராக இருந்தனர்.

ஜெபர்சன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் லூயீசியானா பிரதேசம் பிரான்சிடமிருந்து 160 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்கப்பட்டது. 1810-12-ல் பிளாரிடா பிரிட்டிஷாரிடமிருந்து அமெரிக்காவிற்குக் கிடைத்தது. ஐரோப்பாவில் நெப்போலிய யுத்தங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில், அமெரிக்க வியாபாரத்திற்குக் கேடு விளைந்ததால், அமெரிக்கருக்கும் பிரிட்டிஷாருக்கும் போர் மூண்டது. 1814-ல் பிரிட்டிஷ் துருப்புக்கள் அமெரிக்காவின்மேற் படையெடுத்து வாஷிங்டன் என்னும் நகரைக் கைப்பற்றின. ஆயினும் ஆண்டிரூ ஜாக்சன் என்பவர் பிரிட்டிஷ் படைகளை முற்றிலும் தோற்கடித்தார். 1814-ல் கென்ட் (Ghent) உடன்படிக்கைப்படி ஆங்கிலோ-அமெரிக்க சமாதானம் ஏற்பட்டது. 1867-ல் ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா 72 இலட்சம் டாலர்களுக்குப் பெறப்பட்டது. 1898-ல் ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மேற்கிந்தியத் தீவுகளைப்பற்றி ஒரு போர் மூண்டது. அப்போரில் அமெரிக்காவே வெற்றிகண்டது. அதனால்