பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்கா

131

அமெரிக்கா

கருதுகின்றனர். ஆனால், அட்லான்டிஸ் என்ற நிலப்பரப்பு ஒன்று இருந்ததென வரலாற்று ஆராய்ச்சியாளர் நம்பவில்லை. பிளேட்டோ சில சமயங்களில் தம்முடைய கற்பனா சக்தியினால் கதைகள் புனைவதுண்டு. அட்லான்டிஸ் நிலப்பரப்பு, அந்தக் கதைகளுள் ஒன்றெனக் கொள்வாரும் உண்டு. மேலும் அட்லான்டிஸ் நிலப்பரப்பு இருந்ததென்று பிளேட்டோவுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமர், ஹெசியடு, எகிப்து வரையிலும் சுற்றுப் பிரயாணஞ் செய்த ஹெரடோட்டஸ் முதலிய கிரேக்க அறிஞர் எவரும் சொல்லவில்லை. ஆகவே, ஆசிய மக்கள் அமெரிக்காவில் குடிபுகுந்தது நாற்பது மைல் அகலமுள்ள பேரிங் ஜலசந்தி வழியாகவே இருந்திருக்க வேண்டுமென்று கொள்வதுதான் சிறப்புடையதெனத் தோன்றுகிறது.

அமெரிக்கப் பழங்கால மக்களின் நாகரிகம், அவர்கள் வசித்துவந்த பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கிரீன்லாந்திலிருந்து அலாஸ்கா வரையிலுள்ள பிரதேசத்தில் வசித்த மக்கள் கோடைக்காலத்தில் வேட்டையாடி வாழ்ந்தனர். அவர்களுடைய உடைகள் தோலினால் செய்யப்பட்டவை. அவர்கள் கல்லால் செய்த கருவிகளைக் கையாண்டனர். சக்கரமில்லாமல் மட்பாண்டஞ் செய்யவும், விலங்கினங்களின் கொம்புகளில் ஓவியந் தீட்டவும் அவர்கள் அறிந்திருந்தனர்.

வட அமெரிக்காவின் மத்தியபாகத்தில் ஆறுகள் இருப்பதால், அந்தப் பாகத்திலும், கடற்கரையோரங்களிலும் மீன் பிடித்தலை முக்கியமான தொழிலாக மக்கள் கொண்டனர். இப்பிரதேசம் காடடர்ந்தது. ஆகவே, மரத்தால் வீடுகள் கட்டப்பட்டன; படகுகள் செய்யப்பட்டன; அழகிய சிற்பப் பொருள்களும் செதுக்கப்பட்டன. இப்பிரதேசத்து மக்கள் கூடை முடைவதில் கைதேர்ந்தவர்கள். களிமண் வைத்துக் கூடையிலிருக்கும் இடைவெளிகளை அடைத்ததனால், கூடைகளைத் தண்ணீர் வைத்துக்கொள்ளும் பாத்திரங்களாகப் பயன்படுத்த முடிந்தது. இந்தப் பிரதேசத்தின் ஆற்றங்கரைகளில் சோளம் பயிரிடப்பட்டது. மண் வீடுகள் அழகாகக் கட்டப்பட்டு, மக்கள் கிராமங்களில் வசித்தனர்.

அமெரிக்கப் பழங்கால மக்கள் உபயோகித்து வந்த கருவிகள், கட்டின மண்மேடுகள், பிரமிடுகள், பல அறைகள் அடங்கிய கட்டடங்கள் அமைந்த கிராமங்கள் முதலியவற்றிலிருந்து இவர்கள் நாகரிகம் நமக்குத் தெரியவருகின்றது. எம். வீ. சு.

வட அமெரிக்க இந்தியர்: அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் இவர்களுடைய தொகை ஏறக்குறைய 45 இலட்சமாகும். இவர்களுள் 10 இலட்சம் பேர் இப்போது கானடா, ஐக்கிய நாடுகள் என்று வழங்கும் பகுதிகளிலும், பெரும்பாலோர் இப்போது மெக்சிகோ, மத்திய அமெரிக்கா என்று வழங்கும் பகுதிகளிலும்

அமெரிக்க இந்தியர்-நாட்டியம்
உதவி : அ. ஐ.நா. செய்தி இலாகா, சென்னை.

வாழ்ந்திருந்தார்கள். இப்போதும் பெரும்பாலோர் தென் பகுதிகளிலேயே காணப்படுகிறார்கள். இப்போது கானடாவிலும் ஐக்கிய நாடுகளிலும் உள்ளவர்கள் 5 இலட்சம் பேரே. ஆனால் மெக்சிகோவில் 80 இலட்சம் பேர் இருக்கிறார்கள்.

மக்கள் அமெரிக்காவில் ஏறக்குறைய 20 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருப்பதாகவும், இவர்கள் பேரிங் ஜலசந்தி வழியாக வட அமெரிக்காவுக்கு வந்த ஆசிய மக்களே என்பதாகவும் அறிஞர்கள் கருதுகிறார்-