பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்கா

133

அமேசான்

பகுக்கலாம். ஆயினும் கிழக்குப் பாகத்தில் உள்ள அட்லான்டிக் சமுத்திரத்தில்தான் முக்கியமான தீவுகள் உள்ளன. இவற்றில் பல கரிபியன் கடலில் அமைந்துள்ளன. இவைகளுள் பெரிய தீவுகளுக்குப் பெரிய ஆன்டிலீஸ் தீவுகள் என்றும், சிறிய தீவுகளுக்குச் சிறிய ஆன்டிலீஸ் தீவுக்கூட்டங்கள் என்றும் பெயர். இத்தீவுகளில் பல ஆங்கிலேய சாம்ராச்சியத்திலும், சில பிரெஞ்சு, டச்சு ஆட்சியிலும், மற்றும் சில சுதந்திரக் குடியரசு நாடுகளாகவும் இருக்கின்றன. இவைகளுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் என்ற பொதுப் பெயரும் உண்டு. இவற்றில் ஆங்கில சாம்ராச்சியத்தைச் சேர்ந்த தீவுகள் பெர்முடா, பகாமா, பார்படோஸ் (Barhados), ஜமெய்க்கா, லீவர்டு (Leeward) தீவுகள், விண்டுவர்டு (Windward) தீவுகள், டிரினிடாடு (Trinidad), டோபாகோ முதலியவை.

பெர்முடாத்தீவைப் பதினாறாம் நூற்றாண்டில் ஜுவான் பெர்முடாஸ் என்பவன் கண்டுபிடித்தான். இத்தீவைச் சார்ந்து, சுமார் 360. மிகச் சிறிய தீவுகள் உள்ளன. இத்தீவுகள் இயற்கைக் காட்சிகளும், வசிப்பதற்கு ஏற்ற தட்ப வெப்ப நிலைகளும் உள்ளவை. அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர் களுக்கும் குளிர்கால உறைவிடங்களாக விளங்குகின்றன; பிரிட்டனுக்கு அடங்கிய குடியேற்ற நாடாக இருந்தபோதிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய கடற்படைத் தளங்களும் ஆகாயவிமானத் தளங்களும் இங்கே உண்டு.

பகாமாத் தீவுகள் : இங்கு ஒரு கவர்னர் உண்டு. இவருக்கு உதவி செய்ய ஒன்பதுபேர் அடங்கிய நிருவாக சபையும், 29 பேர் அடங்கிய சட்ட சபையும் இருக்கின்றன.

பார்படோஸ் தீவு 1627-ல் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.

ஜமெய்க்காத் தீவு 1494-ல் கொலம்பஸால் கண்டு பிடிக்கப்பட்டு, ஸ்பானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1665 ல் ஆலிவர் கிராம்வெல் காலத்தில் ஸ்பெயின் அரசனிடமிருந்து ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. 1944-ல் ஏற்பட்ட புதிய அரசியல் திட்டத்தின்படி அரசாளப்படுகிறது. இந்தத் தீவில் ஒரு கவர்னர் மூலமாகப் பிரிட்டன் ஆட்சி செலுத்துகிறது. கவர்னருக்கு உதவி செய்ய 32 அங்கத்தினர்கள் அடங்கிய ஒரு சட்டசபை யுண்டு. 1941-ல் பிரிட்டன், ஜமெய்க்கா தீவில் விமானத் தளங்களை அமைப்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அனுமதி கொடுத்து, 50 யுத்தக் கப்பல்களைப் பெற்றது. ஜமெய்க்காவிற்கு வட கிழக்கிலுள்ள கேயன் தீவுகளும் குவானோ தீவுகளும் ஜமெய்க்காவோடு சேர்க்கப்பட்டுள்ளன.

விண்டுவர்டு, லீவர்டு தீவுகள் : இவை அட்லான்டிக் சமுத்திரத்தில் தெற்கு வடக்காக வியாபித்துள்ளன. இவைகளுள் சில தீவுகளுக்குத் தனித்தனி அரசியல் அமைப்பு உண்டு, வேறுபட்ட சட்டசபைகளும், சட்டங்களும், வியாபார வரிகளும் நிலைபெற்றுள்ளன. இத்தீவுகளுக்குப் பொதுவான நீதிமன்றம் ஒன்றுண்டு. ஆங்கில நாணயமாகிய பவுண்டு ஸ்டர்லிங் இங்கே வழங்குகிறது.

டிரினிடாடு தீவு தென் அமெரிக்காவிலுள்ள ஆரினாக்கோ நதியின் முகத்துவாரத்தருகில் உள்ளது. 15ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் குடியேறப்பெற்றது. பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறினர். 1797-ல் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு, 1802-ல் ஆமியன்ஸ் உடன்படிக்கையின்படி ஆங்கிலேயருக்குச் சொந்தமாயிற்று. டொபாகோ தீவும் டிரினிடாடு தீவோடு சேர்த்து ஆளப்படுகிறது.

அமெரிக்காவிற்குச் சொந்தமான தீவுகள் போர்ட்டோரிகோவும் வர்ஜின் தீவுகளுமாகும். போர்ட்டோரிகோவை ஸ்பெயின் நாட்டிடமிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் கைப்பற்றின. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடங்கியிருந்தபோதிலும் நாட்டின் பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது. இந்நாட்டில் கட்டாயக் கல்வி அமலில் உள்ளது. வர்ஜின் தீவிகளுக்கு டேனிஷ் மேற்கிந்தியத் தீவுகள் என்ற பெயர் வழங்கிவந்தது. இவை டென்மார்க் தேசத்திடமிருந்து அமெரிக்கர்களால் விலைக்கு வாங்கப் பெற்றவை.

பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகள் : குவாடலூப் (Guadaloupe), மார்ட்டினிக் (Martinique) இரண்டும் பிரெஞ்சு ஆட்சியில் அடங்கியுள்ளன.

கியூபாத் தீவு: இதை 1492-ல் கொலம்பஸ் கண்டு பிடித்தான். 1898ஆம் ஆண்டு வரையில் ஸ்பானிய ஆட்சியில் அடங்கி, ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. அ. ஐ. நாடுகளின் உதவியால் சுதந்திரமடைந்தது. 1900-ல் ஏற்பட்ட அரசியல் திட்டத்தின்படி ஒரு குடியரசு அரசியல் இங்கு நடைபெறுகிறது. பிரதிநிதிகள் சபையொன்றும், செனெட் சபையொன்றும் இருக்கின்றன. தலைவரும் உபதலைவரும் உண்டு.

ஹேட்டி : இக்குடியரசு ஹிஸ்பானியோலாத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ளது. 1677ஆம் ஆண்டிலிருந்து பிரெஞ்சுக் குடியேற்ற நாடாக இருந்தது. டெஸ்ஸாலின்ஸ் என்ற தலைவருடைய உதவியால் 1804-ல் சுதந்திரம் அடைந்தது, அவர் இரண்டு ஆண்டுகள் அரசாட்சி செலுத்தினார். பிறகு இத்தீவு ஒரு குடியரசாயிற்று.

டாமினிகன் குடியரசு: ஹிஸ்பானியோலா தீவின் பெரும்பாலான மேற்குப் பகுதிக்கு டாமினிகன் குடியரசெனப் பெயர். இப்பகுதியிலும் பிரெஞ்சுக்காரர் குடியேறி யிருந்தனர். 1808-ல் ஆங்கிலச் சேனையின் உதவியால் டாமினிகன் மக்கள் பிரெஞ்சுக்காரர்களை வெளியேற்றினர். மறுபடியும் இப்பகுதி ஸ்பானிய ஆட்சியின் கீழ் வந்து, பிறகு 1821-ல் சுதந்திரம் பெற்றது. ஹேட்டி நாட்டு மக்கள் 1822 முதல் 1844 வரை இந்நாட்டைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. பின்னர் இந்நாடு ஒரு குடியரசாகி, 1947-ல் ஏற்பட்ட அரசியல் திட்டத்தின்படி, அரசாளப்படுகிறது.

மேற்கூறிய தீவுகளன்றியும் இன்னும் பல தீவுகள் அமெரிக்கக் கடற்கரை யோரமாக இருக்கின்றன. அவற்றில் தென் அமெரிக்காவின் தெற்குப் பக்கத்தில் அட்லான்டிக் சமுத்திரத்தில் உள்ள பாக்லண்டு தீவுகள், தெற்கு ஜியார்ஜியாத் தீவு, தெற்கு ஆர்க்னீத் தீவு முதலியன பிரிட்டிஷ் ஆட்சியில் அடங்கியுள்ளன. தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் உள்ள வெல்லிங்டன் தீவு, சிலோ தீவு, ஜுவான் பர்னாண்டஸ் தீவுகள், செயின்ட்பெலிஸ் தீவு முதலியவை சிலி நாட்டைச் சேர்ந்தவையாகும். சின்சு தீவுகள் பெரு என்ற நாட்டுடன் இணைக்கப்பட்டு உள்ளன. கலாப்பகாஸ் என்ற தீவு ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தது. வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் பெவில்லாகிக்டஸ், குவாடலூப், வான்கூவர், சார்லட் முதலிய தீவுகள் உள்ளன. (முக்கியமான தீவுகளைப் பற்றிய மற்ற விபரங்களுக்குத் தனிக் கட்டுரைகள் பார்க்க.) ஏ. கி

அமேசான் : பார்க்க: ஆமெசான்.