பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

163

அரசியற் கருத்துக்கள்

றுமை, அமைதி, உலகக் குடிமை, வாழ்க்கையின் எல்லாவற்றையும் உளப்படுத்திய சட்டம் முதலிய கருத்துக்கள் தோன்றின. கிரேக்கர்களுடைய ஜனநாயக அரசியல் சுதந்திரக் கருத்துக்கள் சிறிது பின்னடைந்தன. ரோமானியர்கள் அரசியலையும் அறநிலையையும் வேறுபடுத்தினர். சமுதாயம் வேறு, இராச்சியம் வேறு என்னும் கருத்தும் அவர்களால் உருவாயிற்று. இராச்சியத்தினுள் அடங்கிய தனி மனிதர்கள் வேறு, இராச்சியம் வேறு என்பதும் அவர்களுடைய கருத்து. தனி மனிதனின் உரிமைகளைக் காப்பது இராச்சியத்தின் கடமையேயன்றி, அவ்வுரிமையில் தலையிடுவதன்று என்று அவர்கள் கண்ட முடிவிலிருந்து ரோமானிய தனிநபர்ச் சட்டம் தோன்றிற்று.

ஸ்டோயிக்குகளுடைய கருத்தான இயற்கைச் சட்டமும் இவர்கள் கருத்துக்களில் தோன்றிற்று. மனிதர்களிடையே சமத்துவத்தைப்பற்றிய கொள்கை ரோமானியர்களால் உருவாக்கப்பட்டதேயாம்.

ரோமானிய அரசியல் அறிஞர்களில் சிசரோ (கி. மு. 106-43) குறிப்பிடத்தக்கவர். இவர் பெரிய நாவலர் ; சட்ட அறிஞர் ; குடியரசு ஸ்தாபனங்களை நிலைபெறச் செய்வதில் ஊக்கம் கொண்டவர். அரிஸ்டாட்டில் கருதியது போலவே இவரும் மனிதனுடைய சமுதாய இயல்பூக்கமே இராச்சியம் அமைவதற்குக் காரணமாயிருக்கிறது என்று கூறினார். இராச்சியத்தின் கருத்துக்களை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் அலுவல் என்றார். இயற்கையறிவையும் அற நெறியையும் ஒட்டியே அரசியல் செயல்களும் சட்டங்களும் அமைய வேண்டும் என்றார். இவர் வற்புறுத்திய உலக ஐக்கியக் கொள்கையும், உலகப் பொதுச்சட்டக் கொள்கையும் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பாலிபியஸ் (சு. கி. மு. 205-சு. .122) என்னும் கிரேக்க அறிஞர் இத்தாலியில் வாழ்ந்து வந்தவர். கிரேக்கக் கருத்துக்களாகிய அரசாட்சிப் பாகுபாட்டு முறைகளையும், அரசியல் ஸ்தாபனங்கள் நிலைத்து இருக்கவேண்டியதன் அவசியத்தையும் இவர் வற்புறுத்தினார். கிரேக்க இராச்சியத்தை ரோமானியர் வென்று ஆண்டது நியாயம் என்று காட்டுவதே அவர் இயற்றிய வரலாறு என்னும் நூலின் நோக்கம்.

உலகப் பொதுமையுணர்ச்சியே (Cosmopolitanism) ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கருத்தாகும். ஸ்டோயிக்குகளின் கருத்துக்களையும் ரோமானியர்கள் ஏற்றுக்கொண்டு மேலும் வளர்த்தனர். முழுப்பலம் பொருந்திய சாம்ராச்சியக் கோட்பாடுகளும், அரசுத் தலைமைக் கோட்பாடும், சட்டத்தலைமைக் கோட்பாடும் ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கோட்பாடுகளாம். சி. எஸ். ஸ்ரீ.

ஐரோப்பிய அரசியற் கருத்துக்கள் : கி. பி. 1 ஆம் நூற்றாண்டு-கி. பி. 15 ஆம் நூற்றாண்டு : ரோமானியச் சாம்ராச்சியம் சிதைந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ மதம் பரவிற்று. கிறிஸ்தவ அறிஞர்களுடைய அரசியல் கருத்துக்கள் செனிக்கா (Seneca சு. கி. மு. 4-கி. பி. 65) என்னும் ரோமானிய அறிஞர் ஸ்டோயிக்குகளுடைய அரசியற் கருத்துக்களை மாற்றி வகுத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அரசாங்கமும் சட்டமும் வேண்டப்படுவதற்குக் காரணம் மனிதனுடைய தீக்குணமே என்றும், இயற்கைச் சட்டம் என்று ஒன்று உண்டு என்றும், மனிதனுடைய அறிவை அடிப்படை யாகக் கொண்டு இயங்கும் இச்சட்டமே அரசாங்கச் சட்டத்துக்கு அளவுகோலாகக் கொள்ளத்தக்கது என்றும் இவர் கூறினார்.

ஆயினும், கிறிஸ்தவ அறிஞர்கள் வேறொரு முக்கியமான கருத்தையும் கூறினர். அதாவது, இயற்கைச் சட்டமும் இறைவன் சட்டமும் ஒன்று; அச்சட்டத்தை மனிதனுடைய அறிவு ஒன்றைமட்டும் கொண்டு தெரிந்து கொள்ள முடியாது; அது இறைவனால் வெளிப்படுத்தப்படுவது; அவ்வெளிப்பாட்டினை ஆகமங்கள் வாயிலாக மக்கள் உணர்வர் என்பதாம். இடைக்காலம் முழுவதிலும் இயற்கைச் சட்டமும் தெய்வீகச் சட்டமும் ஒரு பொருளின் இரு முகங்களாகக் கருதப்பட்டன. கிறிஸ்தவ மதக்கோட்பாட்டின்படி மனிதன் ஆதியில் குற்றமறியாத நிலையிலிருந்து இழிந்து பாவியானான். அவ்விழிவும், அவன் பாவங்களும் அரசாங்கம் தோன்றுவதற்கும் அதன் இன்றியமையாமைக்கும் காரணங்களாயின. குற்றமில்லாத மனிதனுக்கு இலௌகிக அரசாங்கம் வேண்டுவதில்லை. மனிதன் இழிந்துவிட்டதால் அரசாங்கம் தேவையாயிற்று. இது உலகியற் சட்ட அடிப்படையில் தோன்றிய பல ஸ்தாபனங்கள் ஏற்பட்டதற்குத் தக்க காரணமாயிற்று. இவ்வீழ்ச்சிக் கொள்கையைக்கொண்டு இவர்கள், இறைவன் திருமுன்பில் எல்லா மக்களும் சமம் என்னும் மதக் கோட்பாடும், உலகில் நாம் கண்ணாற் காணும் பல வேறுபாடுகளும் ஒன்றோடொன்று முரண்படாதவாறு, தம் சித்தாந்தத்தை அமைத்துக்கொண்டனர். கிறிஸ்தவ சமயக் கருத்துக்கள் மனிதனது இயல்பிலுள்ள இருமையை எடுத்துக் கூறின ; இவ்விருமை யானது மனிதனுடைய ஆன்மாவிற்கும் உடலிற்கும் உள்ள வேறுபாடு. இவ்வேறுபாடு அரசியல் துறையிலும் புகுந்தது. தெய்விகப் பொருள்களுக்கும் இலௌகிகப் பொருள்களுக்கும் வேறுபாடு காணப்பட்டது ; தெய்விகத்துறையில் திருச்சபை தன்னைப் பிரதிநிதி என்று கருதிற்று. இலௌகிகத்துறையில் புனித ரோமானிய சாம்ராச்சியம் தன்னைப் பிரதிநிதியென்று கருதிற்று. திருச்சபைத் தலைவர்கள் தெய்விக விஷயங்களில் தங்களைவிட உயர்ந்த அதிகாரிகள் இல்லை என்று கருதினர். ஆயினும் சாம்ராச்சியத்தின் மீதும் திருச் பைக்கு அதிகாரம் உண்டு என்று யாரும் கருதவில்லை.

கிறிஸ்தவ மதக்கோட்பாடு இந்நிலையில் இருக்கும் போது செயின்ட் அகஸ்டினுடைய இறை நகர் (Civitas Dei) என்னும் நூல் வெளியாயிற்று. அவர் மண்ணகருக்கும் விண்ணகருக்கும் வேறுபாடு கண்டார். ஆயினும் அவர் கூறிய மண்ணகரும் விண்ணகரும் முறையே சாம்ராச்சியத்தையும் திருச்சபையையும் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. அவர் அவ்விரு நகர்களுக்குமிடையே எடுத்துக்காட்டிய வேறுபாடு ஸ்தாபன முறையையோ சமுதாய வாழ்க்கையையோ பின்பற்றியதன்று; அது தனியொருவருடைய அறக்கோட்பாடுகளையும் சமயக்கோட்பாடுகளையும் பற்றியது. ஆயினும் செயின்ட் அகஸ்டினுடைய கோட்பாடுகள் பிற்காலத் திருச்சபையின் கருத்துக்களை யுருவாக்கப் பெரிதும் வழி கோலின. திருச்சபை இலௌகிகர்களைவிட உயர்ந்தது என்றும், சக்கரவர்த்தி திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து தனது அதிகாரத்தைச் செலுத்தவேண்டும் என்றும் அக்காலத்திற் கூறப்பட்டதேயன்றி, இலெளகிக வைதிக அதிகாரங்கள் இரண்டும் இறைவனிடமிருந்தே பெறப்படுவன என்பதை ஒருவரும் மறுக்கவில்லை.

இடைக்காலம் முழுவதிலும் இவ் விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது. இதனின்றும் போப்பின் அதிகாரமே உயர்ந்தது என்பாரும், சக்கரவர்த்தியின் அதிகாரமே உயர்ந்தது என்பாரும், இவ்விருவகைப்-