பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

170

அரசியற் கருத்துக்கள்

தேவையினால் ஏற்படுகிறது“ என்று கூறினார். அவர், “சட்டத்திற்கு உறுதி அளிப்பது அதன் உற்பத்தியன்று, அதன் நோக்கமே“ என்றார். அரசாங்கத்தை வேறு எந்தத் தொகுதியும் கட்டுப்படுத்த முடியாது என்று கருதுபவர்கள் சர்வதேசிய வாதிகள். அக ஆதிபத்தியம் (Internal Sovereignty), புற ஆதிபத்தியம் (ExternalS) என்று இருவகையாக ஆதிபத்தியத்தைப் பிரித்துக் கூறிச் சர்வதேசிய வாதிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு குறைக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில அமெரிக்க அறிஞர்கள் கூறியவை சுதந்திரப் போருக்கு வழிகாட்டின. ஜேம்ஸ் ஓட்டிஸ் (James Otis). “மக்கள் சம்மதமின்றி வரி வசூலிக்கக்கூடாது ; அவ்விதம் வரி வசூலிக்கும் ஆட்சி நேர்மையற்றது“ என்று கூறினார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்பை நிறுவிய ஜெபர்சன், ஆதம்ஸ் முதலானோர் கூட்டாட்சி முறையைப் பற்றிய பல கருத்துக்களை வெளியிட்டனர். மேற்கூறிய இரு அறிஞர்களும், ஒப்பந்தம் செய்து கொள்ளும் மாகாணங்கள் ஒன்றுக்கொன்று சமமாக இருப்பதுமன்றி, அவை எவ்வளவு சுதந்திரம் பெறக்கூடுமோ அவ்வளவும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கருதினர். மற்றும், மக்கள் ஆட்சியின் குறைபாடுகள் நீங்க, இன்னும் அதிக மக்கள் ஆட்சியே வழி என்கிறார்கள். ஹாமில்ட்டன், மாடிசன் முதலியவர்கள், இராச்சியங்களின் சுதந்திரம் கூட்டாட்சி நாட்டின் ஐக்கியத்திற்கு முரண்படாதவாறு இருக்கவேண்டும் என்றும் வாதாடினர். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல் அமைப்பை நிறுவிய அறிஞர்கள் பிரெஞ்சு அறிஞரான மான்டெஸ்க்யூ என்பவரிடமிருந்து அதிகாரப் பிரிவினை என்னும் கொள்கையை மேற்கொண்டனர். இதன்படி நிருவாகத் தலைவரான ஜனாதிபதிக்கும், சட்டசபைப் பகுதியான காங்கிரசுக்கும், மீதிப்பகுதியான உச்ச நீதிமன்றத்திற்கும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தாத முறையில் தனி அதிகாரம் உண்டு. இக்கொள்கையை அ. ஐ.நா. அரசியலமைப்பில் காணலாம். “நியாயத்திற்குக் கட்டுப்பட்டுப் பொதுமக்கள் கருத்திற் கிசைந்து நடக்கக்கூடிய பெரும்பான்மையோர் ஆட்சியே சுதந்திர மக்களின் உண்மையான ஆதிபத்தியமாம்“ என்று அமெரிக்க ஜனாதிபதியான லின்கன் கூறினார்.

கம்யூனிசத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் கொள்கை வேறுபாடு ஒரு புறமிருக்க, இவ்விரண்டிற்கும் எதிராக இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச, நாசிசக் கொள்கைகள் உருவாயின. முசொலீனியால் விளக்கப்பட்ட பாசிசக்கொள்கை மாக்கியவெலியைப் பின்பற்றி நாட்டுத் தற்பெருமையை அடிப்படையாகக் கொண்டது. ஹேகலின் பூரண அதிகார இராச்சியக் கொள்கையும், சிண்டிகலிசக் கருத்துக்களும் கலந்து, முசொலீனியின் கார்ப்பரேடிவ் இராச்சியம்தோன்றிற்று. ஜெர்மானிய நாசிசத்தில் கார்ப்பரேடிவ் கருத்தில்லை ; ஆனால் தலைமைக் (Leadership) கொள்கை பாசிசத்தைவிட அதிகமாக நாசிசக்கொள்கையில் காணப்படும். இங்கு நாட்டுப் பெருமையைவிட இனப்பெருமை பெரிதாகக் கொண்டாடப்பட்டது. இவ்விரண்டு அரசியல் வாதங்களும் ஒரு கட்சிச் சர்வாதிகாரமே யாம். அரசியல் அதிகாரத்தை ஒரு கட்சியிடம் குவிப்பது என்னும் முறையில் இவ்விரு கொள்கைகளும் கம்யூனிசத்துக்கு ஒப்பாயினும், கம்யூனிசத்தில் மக்களிடம் பொருளாதார சக்தி ஒப்படைக்கப்படும் என்பதும், பாசிச, நாசிசக் கொள்கைகளில் கட்சியும் தலைவருமே முக்கியம் என்பதும் இவற்றுள் வேறுபாடாம்.

பார்லிமென்டு ஆட்சி, கம்யூனிசம், பாசிசம் ஆகிய மூவகைக் கோட்பாடுகளையும் எதிர்ப்பது ஆட்சிவேண்டாக் கொள்கையாம். ஆதிபத்தியக் கோட்பாட்டை எதிர்த்துப் பன்மைவாதத்தை மிகுதியும் வளர்த்து, இராச்சியமே வேண்டாம் என்னும் கொள்கைகளுடையவர்களே ஆட்சிவேண்டாக் கோட்பாடுடையவர்கள். ஜோ. அ.

இந்திய அரசியற் கருத்துக்கள் : பண்டைக் கால, இடைக்கால : ராஜ்ய,ராஷ்டிர, க்ஷத்ர முதலிய சொற்கள் ரிக்வேதத்தில் மிகப் பழமைவாய்ந்த பகுதிகளில் காணப்படுகின்றன ; ஆனால் அதில் அரசியலைச் சார்ந்த தொடர்பான கருத்துக்கள் ஒன்றும் இல்லை. பிராமணங்களில் இக்கருத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. உதாரணமாக, ஐதரேயப் பிராமணம் பகைவர்களைப் போரில் வென்று, நாட்டின் அமைதியைக் காப்பதற்காக அரசன் ஏற்பட்டானென்று கூறுகிறது; அதில் பல அரசரை வென்று, சாம்ராச்சியம் பெற்றுச் சிறப்பாக மகாபிஷேகம் நடத்திக்கொண்ட மன்னர்கள் பலருடைய பெயர்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

முதன் முதல் அரசியல் கருத்துக்கள் ஆராயப்பட்டது கி.மு.600-300-ல் எழுதப்பெற்ற பெள தாயன, கௌதம, ஆபஸ்தம்ப தரும சூத்திரங்களில் என்று சொல்லலாம். இந்நூல்களில் க்ஷத்திரியர்களுடைய தருமங்களைக் கூறுமிடத்து, அரசர்களுடைய கடமைகளும், அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் இருக்கவேண்டிய உறவுமுறைகளும் தனியே எடுத்துக் கூறப்படுகின்றன. அறிவு, கல்வி, நன்னடக்கை முதலிய நற்குணங்கள் வாய்ந்த ஓர் அந்தணனைப் புரோகிதனாகத் தேர்ந்தெடுத்துப் பிறகு அவன் வழிப்படி நடக்கவேண்டியது அரசன் கடமை என்பது இந்நூல்களின் முக்கியக் கருத்துக்களில் ஒன்று ; இது பிராமணங்களில் குறிக்கப்பட்டுள்ள பிராமம், க்ஷத்ரம் என்ற இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று ஒத்து அரசியல் நடத்த வேண்டுமென்ற கொள்கையை மேற்கொண்டு வரையப்பெற்ற ஏற்பாடாகும். ஆபஸ்தம்ப தரும சூத்திரம், ஓர் அரசன் தன் நாட்டில் தட்ப வெப்பத்தின் கொடுமையாலோ, பசி பிணி முதலிய துன்பங்களாலோ, ஒருவராவது வருந்த நேரிடாமல் காக்கவேண்டுமென்று கூறுகிறது. பூமியின் விளைவில் ஆறிலொரு பங்கு அரசனைச் சார்ந்ததென்றும், மற்ற வரிகள் குடிகளுக்குக் கேடின்றி ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் தரும நூல்களில் காண்கிறோம்.

இராமாயணத்தில் இராம ராச்சியத்தின் செம்மையும் அராஜகத்தின் கொடுமைகளும் விவரமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. மகாபாரதத்தில், அதிலும் முக்கியமாக சாந்தி பருவத்தில், அரசநீதி மிகவும் விரிவாக நூற்றுக்கணக்கான அத்தியாயங்களில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ அதேகாலத்தில் எழுதப்பெற்ற மனுஸ்மிருதி, கௌடிலிய அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்களிலும் அத்தகைய கொள்கைகள் காணப்படுகின்றன. கௌடிலியனுடைய நூலில் சிற்சில விசேஷப் பகுதிகளுண்டு. இராச நீதி அல்லது தண்ட நீதி பிரமனால் செய்யப்பட்ட ஒரு பெரு நூலாயிருந்து, பிறகு பல கடவுளராலும் முனிவராலும் பலமுறை சுருக்கப்பெற்று, மானிட உலகத்தில் வழங்கப்பட்டு வருவதாகப் பாரதம் கூறும். “முற்காலங்களில் அரசே ஏற்படவில்லை; தாமாகவே மனிதர் நன்னடக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாளடைவில் காமமும் வெகுளியும் தோன்றிச் சண்டை சச்சரவுகள் ஏற்படவே, எல்லோரும் ஒருங்கு கூடித் தங்கள் வாழ்க்கையை நியாயமாக நடத்தித் தரவேண்டி அரசன்