பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் கருத்துக்கள்

176

அரசியற் கருத்துக்கள்

தமிழ் நாட்டு அரசியலை அடைவுபடக் கூறும் நூல் திருக்குறளாகும். பொருட்பால் என்னும் பகுதியில் அரசியல், அமைச்சியல், குடியியல் ஆகிய மூன்றும் கூறப்படுகின்றன. முற்காலப் போர் முறைகள் தொல்காப்பியப் புறத்திணை இயலானும் புறப்பொருள் வெண்பா மாலையானும் புலனாகும். சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் அரசியற் கருத்துக்களைப் பரக்கக் காணலாம். ரா. பி. சே.

சீன அரசியற் கருத்துக்கள்: சீனர்களுடைய அரசியற் கருத்துக்கள் அந்நாட்டு அறிஞர் இயற்றிய நீதி நூல்களில் ஆங்காங்கு அடங்கியுள்ளவையே. மேனாட்டு அரசியல் தத்துவத்தைப்போல நன்கு உருவாக்கப்பட்ட ஒரு அறிவுத் துறையாக அக்கருத்துக்கள் அந்நாட்டில் வளரவில்லை. சீனாவில் தோன்றிய கன்பூஷியஸ் (கி.மு. 551-478) சில அறநெறிகளை உறுதி செய்துகொண்டு, அவற்றை அடிப்படையாக வைத்துச் சமூக ஸ்தாபனங்களை நிலை நிறுத்துவது நேரிது என்று கருதினார்; ஆனால் அவர் அரசியற் கோட்பாடுகள் என்று வரையறுத்துக் கூறக்கூடிய கொள்கைகள் ஒன்றையும் வெளியிடவில்லை. இது ஓரளவிற்கு உண்மையே யாயினும், சூத்திரம்போற் செய்யப்பட்ட சிறு வாக்கியங்களில் பொதிந்து கிடக்கும் சீன அறிஞர்களுடைய கருத்துக்கள் முன்பே பாகுபாடு செய்து வகைப்படுத்தப்பட்ட ஒரு தத்துவத்துடன் ஒன்றி இணைந்து நிற்பது தெளிவு. சமூகப் பிரச்சினைகளைத் திருப்திகரமாகவும், அறிவோடும் தீர்த்துவைப்பதே அரசியல் என்று கொள்வோமாயின், சீனாவில் அரசியல் தத்துவத்தைப்பற்றிய கருத்துக்கள் பல காணக்கிடைக்கின்றன.

கி.பி. 1898க்கு முன்பு, லௌட்ஸு (Lao-tse), கன்பூஷியஸ் முதலியவர்கள் சட்டம், அரசாங்கம் என்பவற்றைப்பற்றிக் கூறியுள்ளவையே சீன அரசியல் கருத்துக்கள் எனத்தக்கவையாம். லௌட்ஸுவின் முக்கியமான கொள்கைகளைத் திரட்டித் தாவோக் கொள்கை (Taoism) என்பர். அவர் கொள்கைப்படி. இராச்சியம் குடிகளுடைய விவகாரங்களில் தலையிடக் கூடாது; பலாத்காரத்திற்கு அடிப்படையான போர்ப்படைகளை அமைக்கக்கூடாது. "பெரிய யுத்தங்களுக்குப் பிறகு பஞ்சங்கள் ஏற்படுகின்றன ; நல்ல மனிதன் உறுதியாகச் செயலாற்றுவானே யன்றிப் பலாத்காரத்தால் எக்காரியத்தையும் சாதித்துக்கொள்ள முற்படமாட்டான்" என்னும் கருத்துக்களை அறிவு, ஒழுக்கவிதிகள் (Canons of Reason and Virtue) என்னும் தமது நூலில் அவர் கூறியுள்ளார். ஆயினும் அவர் அடிமைத்தனமோ அன்றி அடக்கமான பழக்கமோ உள்ளவரல்லர். சாத்துவிக எதிர்ப்பு முறையை அவர் ஆதரித்தார். போரிட மறுப்பவனைத் தோற்கடிக்க முடியாதன்றோ? ஆதலால், படைக்கலங்களைக் கொண்டு போரிடாமலிருப்பதே வெற்றிக்கு வழி. மனிதன் இயற்கையிலேயே நற்பண்புடையவன் ; நன்மை மேலோங்கி விளங்கும் ஆட்சி மூலமாகச் சமூக, அரசியல் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் அவர் கூற்றுக்களில் காணப்படுகின்றது. இதே கருத்தை கன்பூஷியசின் கூற்றுக்களிலும் காணலாம். அரசாங்கம் மக்களை அடக்கி ஒரு வழியில் செலுத்துவதை இவரும் விரும்பவில்லை. சட்டங்களால் ஆட்சி புரிவதிலும் ஒழுக்கத்தால் சீர்திருத்துவதே சிறந்தது ; 'நல்லொழுக்கமுள்ள மந்திரிகள் சொற்கேட்டு ஆளும் நல்லரசனுடைய குடிகள் உதாரணத்தால் சீர்திருந்துவர்' என்றார். லௌட்ஸுவின் கொள்கைகளை மேற்கொண்ட தை-சுங் (Tai-suhg- 627-50) என்னும் அரசர் கொள்ளைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை இயற்ற மறுத்தார் வரிகளையும் செலவையும் குறைத்து, யோக்கியமான உத்தியோகஸ்தர்களை நியமித்தால் மக்களுக்கு உணவும் உடையும் குறைவின்றிக் கிடைக்கும்; கொள்ளைக் குற்றத்தை அகற்றுவதற்குத் தண்டனைகளைவிட இம்முறையே சிறந்தது என்று அவர் கருதினார். மக்கள் வாழ்க்கையில் அரசாங்கம் தலையிடலாகாது என்ற கருத்து கன்பூஷியஸ் கூற்றுக்களில் காணப்படுகிறது. சமூகக் குறைபாடுகளை நீக்கத் தற்காலத்திலும் இவற்றினும் வேறு சிறந்த வழிகளைக் காண்டல் அரிது.

சீனர்கள் தனித்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அரசாங்கம் என்னும் ஸ்தாபனத்தில் அவர்களுக்குச் சிரத்தை இல்லை ; தேசிய அரசாங்கம் என்னும் கோட்பாட்டை அவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர். பொது மக்களின் கருத்து(Public Opinion) என்பது 1912-ல் நடந்த புரட்சிக் காலத்தில் சீனா அதுவரை கேட்டிராத ஒரு கூற்று.அவர்களுடைய தனித்துவத்தில் தனி மனிதனுடைய முயற்சியைப் பற்றிய கருத்து இல்லை; அவர்கள் அரசாங்கத்தின் தலையீட்டையும் மேற்பார்வையையும் வெறுத்தனரேயன்றித் தனி மனிதர்களின் முயற்சியைத் தனி வழிகளில் புதுமுறைகளில் செலுத்த எண்ணவில்லை. குடும்ப நிலையும், மரபும் முக்கியமாகக் கருதப்படும் நாடுகளில் ஆட்சியாளர்களின் மேற்பார்வையில் வெறுப் பேற்படுவது இயல்பு.

சீர்திருத்தக் காலத்திற்கு முன்பு அரசாங்கத்தின் வேலைகளைக் குடும்பம்போன்ற சமூக ஸ்தாபனங்களே செய்தன. குடும்பமும் பல குடும்பங்கள் சேர்ந்த குழுக்களும் சீன சமூகத்தின் அடிப்படையாயிருந்தன. குடும்பத் தலைவர்களும், குழுத் தலைவர்களும் நீதி, பாதுகாப்பு முதலிய அலுவல்களைச் செய்துவந்தனர். குடும்பம், குழு முதலியவற்றின் நன்மைக்காகத் தியாகம் செய்யும் குணம் தனி மனிதர்களிடையே மிகுந்து இருந்ததால் இவ்வித ஆட்சி சாத்தியமாயிற்று. பேச்சு, தொழில் முதலிய சுதந்திரங்கள் அவர்களுக்குமிருந்தன. ஆயினும் அவை அரசியல் அமைப்பின் மூலம் நிறுவப்படவில்லை.

1898-க்குப் பிறகு சீன அரசியற் கருத்துக்களில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. காங்க் -யூ-வேயூ (Kang-Yu- Wei 1858-1927) என்பவர் சட்டங்கள் தேவையில்லை என்னும் பண்டைய கருத்தை மாற்றி, இலவசக் கட்டாயக் கல்வி, 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கெல்லாம் வேலை தருதல், நிலம், ரெயில்வே, தொழிற்சாலை முதலியவற்றைத் தேசிய மயமாக்குதல் முதலிய சோஷலிசக் கருத்துக்களைக் கூறினார். அடுத்தபடியாக அரசியற் கருத்துலகில் முக்கியமானவர் சுன் யாட் சென் (Sun Yat Sen 1867-1925). சீர்திருத்தக்காரரா யிருந்த இவர் அரசன் சீர்திருத்தம் செய்ய மறுத்ததால் புரட்சிவாதியாக மாறினார். இவர் இயற்றிய முக்கியமான அரசியல் நூல்கள் மூன்று ஜனநாயகக் கருத்துக்கள், நாற்பகுதியாட்சி முறை என்பவையாம். பிறர் ஆதிக்கத்தினின்றும் பூரண விடுதலையடைவதும், திபெத்து மக்கள், மங்கோலியர்கள் போன்ற சிறுபான்மையோரின் நலன்களை யுணர்வதும் முதல் ஜனநாயகக் கொள்கையாம். இந்த இன ஜனநாயகம் (Racial Democracy) ஏகாதிபத்தியத்தையோ (Imperialism), குடியேற்ற முறையையோ (Colonialism) பின்பற்றியதன்று; மக்களுடைய சம்மதத்தைப் பொறுத்தது. அரசியல் ஜனநாயகம் இரண்டாவது கோட்பாடாம் ; இது குடியொப்பம், பிரதிநிதி மீட்டல் முதலிய நேர்முகமாகவுமிருக்கலாம், வாக்களிக்கும் உரிமையான மறைமுகமாகவு மிருக்கலாம். அரசியல் ஜனநாயகம் மக்களுடைய சுதந்திரத்தைப் பிற நாட்டாரோ அல்லது