பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசிலி

178

அரணிடுதலும் முற்றுகையும்

" மக்களே, நான் உங்கள் எல்லோரையும் விட மேலானவனாக இல்லாவிட்டாலும், எனக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நான் நல்லவனாக நடந்து கொண்டால் எனக்கு உதவி செய்யுங்கள். நான் தவறாகச் செய்வேன் என்று தெரிந்தால், நல்ல வழியைக் காட்டுங்கள். உங்களிடையே தளர்ச்சியுள்ளவன் என் கண்முன் பலசாலியாகத் தெரிகிறான்; கடவுளின் சம்மதம் இருக்குமேயானால் அவனுடைய உரிமையை அவனுக்குச் செலுத்துவேன். உங்களிடையே பலசாலியாகவுள்ளவன் என் கண்முன் தளர்ச்சியுள்ளவனாகத் தெரிகிறான். கடவுளின் சம்மதம் இருக்குமானால் அவனிடமிருந்து கிடைக்கவேண்டியதை நான் கட்டாயமாக எடுத்துக்கொள்ளுவேன். நான் இறைவனுடைய கட்டளைகளுக்கும், நபி அவர்களின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் காலம்வரை எனக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். நான் இவற்றிற்கு விரோதமாக நடந்தேனேயானால் எனக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இல்லை" (ஆமீர் அலியின் சாரசன் வரலாற்றுச் சுருக்கம் பக். 21-29). சை. அ. வா. பு.

அரசிலி தென்னார்க்காடு ஜில்லாவில் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் 5 மைலில் இருக்கும் இரும்பை மாகாளம் சென்று, அங்கிருந்து ஒட்டன்பாளயம் வழியாகப் போனால் வடகிழக்கே 3 மைலில் இருக்கிறது. வாமதேவ முனிவர் பூசித்த தலம். சுவாமி அரசிலிநாதர். அம்மன் பெரிய நாயகி. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. இவ்வூர் இப்போது ஒழுந்தியாப்பட்டு என வழங்குகிறது.

அரணிடுதலும் முற்றுகையும் (Fortification and Siegecraft) : "அரணிடுதல் என்பது எந்திரவியற் சாதனங்களால் ஓரிடத்தில் உள்ள துருப்புக்கள் தமது போர்த்திறனைப் பெருக்கிக் கொள்ளுதல்" என்று மேனாட்டு இராணுவ நூலொன்று வரையறுக்கிறது. இவ்வாறு செய்வதால் அந்த இடத்தைப் பாதுகாக்கத் தேவையாகும் துருப்புக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதுமட்டுமன்றி எதிரிகளின் முன்னேற்றத்திற்கு அது தடையாகவும் அமைகிறது. ஆகையால் தற்காப்பும், தடையும் அரணிடுதலின் முக்கிய நோக்கங்களாக இருந்து வந்துள்ளன. அரண்கள் இருவகைப்படும். ஒரு நாட்டின் எல்லைகளையும், தலைநகரையும், போருக்கு இன்றியமையாத தொழிற்சாலைகள் முதலியன உள்ள பகுதிகளையும் நிலையான அரணிட்டுப் பாதுகாப்பதுண்டு. போரை மேற்கொண்டு நடத்தத் தேவையான அரண்களையும், மற்றத் தற்காப்புச் சாதனங்களையும் அவ்வப்போது அமைத்துக்கொள்வது தாற்காலிக அரண் எனப்படும். போர்க்களத்தின் அருகில் இத்தகைய அரண்கள் அமைக்கப்படலாம். அல்லது ஆயுதக் கிடங்குகளையும், போக்குவரத்து வழிகளையும், துருப்புக்கள் பின்வாங்கும்போது அவைகள் செல்லும் வழிகளையும் இவ்வாறு பாதுகாக்கலாம்.

அரணிடுதலின் வரலாறு போரின் வரலாறே ஆகும். பழங்காலத்திலிருந்தே மானிடன் தனக்குச் சாதகமாகவும், எதிரிக்குப் பாதகமாகவும் உள்ளவாறு ஓர் இடத்தின் இயற்கை அமைப்பைச் செயற்கை முறைகளால் மாற்றியமைக்கும் உபாயங்களைக் கையாண்டு வந்திருக்கிறான். பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மானிடன் இவ்வாறு அரண்களை அமைத்தனன் என்பது போர்க்கலையின் வரலாற்றிலிருந்து தெளிவாகிறது. பழங்கால மத்திய ஆசிய நாகரிகங்கள் தழைத்திருந்த காலத்தில் ஓரிடத்தில் வாழ்ந்த மக்களிற் பெரும்பான்மையானவர்களைப் பாதுகாக்க அந்நகரங்கள் வலிமைவாய்ந்த மதில்களால் சூழப்பட்டன. இடைக்கால ஐரோப்பாவில் வாழ்ந்த படைமானியப் பிரபுக்கள் (Feudal Lords) தாம் கப்பம் வசூலித்த நகரங்களைப் பாதுகாக்க இவ்வகை அரண்களை அமைத்தார்கள். பிற்காலத்தில் கட்டப்பட்ட தடைக் கோட்டைகள் எதிரியின் படைகள் நாட்டில் நுழைவதைத் தாமதப்படுத்தவும் தடுக்கவும் பயன்பட்டன. தற்காலத்தில் எதிரிகளின் படையெடுப்புக்கு ஆளாகத்தக்க எல்லைகளைக்கொண்ட நாடுகள் இந்த எல்லைகளில் அரணிட்டுத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்கின்றன.

பண்டை இந்திய அரண்கள் : பகைவரால் துன்பம் நேரும்போது பாதுகாத்துக் கொள்ள அரணை அமைக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் ஆதியிலிருந்தே இருந்துவந்துள்ளது. தொல்காப்பிய உரையில் இத்தகைய அரணின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது பகைவர் அணுக அரியதாய், வஞ்சனை மிக்க உபாயங்களையும், ஆழமான அகழியையும், அதைச் சுற்றிலுமுள்ள காவற்காடு என்ற அடர்ந்த காட்டையும், தோட்டி முள் போன்ற தடைகளையும், பகைவருக்குத் தொல்லை விளைவிக்கும் பல பொறிகளையும், படைக்கலங்களையும் உணவுப்பொருள்களையும் பிறபொருள்களையும் சேமித்து வைக்கும் கிடங்குகளையும் கொண்டிருக்கும். இதில் அம்புகளை எய்யும் இடமும், எந்திரப் பொறிகளை அமைக்கும் இடமும், காவற் கோபுரங்களும் இருக்கும் என்பது கூறப்பட்டிருக்கிறது. பகைவர் ஏறி நின்று போர்செய்ய ஏற்றவாறு அகலமாகவும், பகைவர் அணுகுவதற்கு அருமையான தாகவும் உள்ளதே அரண் எனப்படுவது என்றும், ஏராளமான நீரும், பெருமலைகளும் நிழல் தரும் அடர்ந்த காடும் உடையதே அரண் என்றும்,அரணுக்குள் இருப்பவர்கள் நெடுநாளைய முற்றுகையும் தாங்குவதற்கு ஏற்றவாறு, அது எல்லா வகையான போர்த் தளவாடங்களையும், உணவுப் பொருள்களையும், குடி தண்ணீரையும் தன்னிடத்தே கொண்டிருக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். வேறு எத்தகைய பெருமை கொண்டிருந்தாலும், அரணிட்டுப் பாதுகாத்துக் கொள்ளாத அரசன் எப்பெருமையும் அடையமாட்டான் என்பதும் அவர் கருத்து.

சுக்கிரநீதி என்ற வடமொழி நூலில் ஒன்பதுவகை அரண்கள் விவரிக்கப்பட்டுள:(1) எதிரியின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் களர்நிலவரண் பள்ளம், முள், கல் ஆகியவற்றால் ஆனது. (2) கோட்டையைச் சுற்றியுள்ள அகழி ஆழமான நீரையும்,முள்ளையும், நச்சுக் செடிகளையும் கொண்டது. (3) கனத்த சுவர்களால் ஆன மதில் உயரமானது. (4) கோட்டைக்கு அப்பாலுள்ள காட்டரண் மனிதர் நுழைய இயலாதவாறு அடர்ந்தது. (5) பகைவர் முன்னேற உதவும் நீரும் நிழலும் இல்லாத பாழிடம் நிலவரண் எனப்படும். (6) கடல், ஏரி,ஆறுபோன்ற நீர்ப்பரப்பினால் ஓரிடத்தைச் சூழ்ந்திருக்கச் செய்வது நீர் அரண். (7) செங்குத்தான மலைகளால் பாதுகாப்புடையது மலையரண். (8) திறமை வாய்ந்த படைவீரரால் பாதுகாப்புடையது படையரண். (9) ஓர் அரசன் தனது சுற்றத்தாரால் பாதுகாக்கப்படுவது துணையரண்.

இருக்கு வேத காலத்திலேயே வடநாட்டில் அரணிடும் வழக்கம் இருந்தது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. மண்ணினால் ஆன மதிலையுடைய ஊரே புரம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌடிலியர் தமது அர்த்தசாஸ்திரத்தில் அரணின் இலக்கணத்தை மிக விரிவாகக் கூறுகிறார். சந்திரகுப்த அரசரது காலத்தில் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனிஸ் பாடலி-