பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரணிடுதலும் முற்றுகையும்

179

அரணிடுதலும் முற்றுகையும்

புத்திர நகரத்தின் அரண் 600 அடி அகலமும், 50 அடி ஆழமும் கொண்ட அகழியையும், 572 கோபுரங்களையும், 64 வாயில்களையும் கொண்ட பெரிய மதிற்சுவரையும் உடையது என்று கூறுகிறார்.

இடைக்காலத்தில் எழுதப்பட்ட கட்டடச் சிற்ப நூல்களிலும் கோட்டைகளின் அமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது. பத்மகக் கோட்டை என்பது வட்டமாகவோ, சதுரமாகவோ அமைக்கப்பட்டு, எட்டு அல்லது பதினாறு வாயில்களையும், ஒவ்வொரு வாயிலுக்கும் கனமான இரட்டைக் கதவுகளையும், சுற்றிலும் ஆழமான அகழியையும் உடையது. போஜ அரசர் எழுதிய கட்டடச் சிற்ப நூலில் தமிழ் நூல்களில் காணப்படுவதையொத்த நால்வகை அரண்கள் விவரிக்கப்படுகின்றன.

முற்றுகையை நடத்தும் வகையையும் அர்த்த சாஸ்திரம் விளக்குகிறது. பின் வாங்குவதுபோல் பாசாங்கு செய்தும், உள்ளிருக்கும் மக்களைச் சாகசத்தினால் தம் பக்கம் சேர்த்துக்கொண்டும், நீண்ட முற்றுகைக்குப் பின்னரும் எதிர்பாராது தாக்கியும் ஒரு கோட்டையைக் கைப்பற்றலாம். வஞ்சகத்தால் கோட்டைக்குள் புகும் முறைகளையும், கோட்டையிலுள்ளோருக்கு உணவும் நீரும் கிடைக்காமல் தடுத்து, அவர்களை அடிமைப்படுத்தும் வகைகளையும், கோட்டைக்குத் தீ வைத்து அதைக் கைப்பற்றும் முறையையும், யானைகளையும் கனமான எந்திரங்களையும் கொண்டு கோட்டை வாயில்களைத் தகர்க்கும் வழிகளையும் கௌடிலியர் விவரிக்கிறார்.

பழங்கால ஐரோப்பா : ஆப்பிரிக்காவை யொத்த நாடுகளில் வாழும் காட்டுமிராண்டி மக்கள் இக் காலத்திலும் முள்வேலியை அரணாகப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் முதன்முதல் பயன்பட்ட அரண் இதுவே என ஊகிக்கலாம். இதற்கடுத்தபடியாகச் செங்குத்தான மண் சுவர்களை எழுப்பிப் பகைவரது படையெடுப்பைத் தடை செய்யும் பழக்கம் தோன்றியது. முற்றுகையிடும் படைவீரர்கள் சுவரை அணுகும்போது உள்ளிருப்பவர்கள் அதன்மேல் ஏறி நின்று, அவர்கள்மேல் அம்புகளை எய்து, அவர்களைத் துரத்த ஏற்றவாறு இது அமைந்திருந்தது. இச் சுவர்களைக் கல்லையும் மண்ணையும் மரத்தையும் கொண்டு அமைப்பது வழக்கம்.

செங்கற்களைக் கொண்டு பெருஞ் சுவர்களை அமைக்கும் வழக்கம் கி.மு.2000-ல் தோன்றியது. அக்காலத்தில் கட்டப்பட்ட மதில்களுள் அசிரியத் தலைநகரான நினவாவில் அமைக்கப்பட்ட கோட்டை புகழ் வாய்ந்தது. இதன் சுவர்கள் 120 அடி உயரமும், 30 அடி அகலமும், 50 மைல் நீளமும் கொண்டிருந்தன. பிரமாண்டமான இந்த மதிற் சுவரில் 1,500 வாயில்கள் இருந்தன. பாறைகளையும், தீப்பந்தங்களையும் கோட்டைக்குள் எரியும் பொறிகளைக் கண்டுபிடிப்பதற்குமுன் இத்தகைய பெருமதில்களைக் கடப்பது இயலாத செயலாகவே இருந்தது. ஆகையால் நீண்ட ஏணிகளையும், கயிறுகளையும் கொண்டு சுவரின்மேல் ஏறும் பழக்கமே அக்காலத்தில் இருந்தது. சுவரைத்தாண்டி உள்ளே நுழைவதைவிட அதில் குடைந்து நுழைய முயல்வதும், சுவரின் அடிநிலையை இடித்து அதைத் தகர்க்க முயல்வதும் உண்டு. ஓர் உடும்பிற்குக் கயிற்றைக் கட்டி, அதை மதிற்சுவரின்மேல் வீசி எறிந்து, கயிற்றைப் பற்றிக் கொண்டு மதிலேறும் வழக்கம் சிவாஜியின் காலத்திலும் இந்தியாவில் இருந்தது என்பார்கள்.

ரோமானிய சாம்ராச்சியம் தழைத்திருந்த காலத்தில் பலவகையான எறி பொறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பெரும்பாறைகளையும் தீப்பந்தங்களையும் தீக் கோளங்களையும் கோட்டைக்குள் எறிந்து நாசம் விளைவித்தன. இடிக்கும் கட்டை (Battering Ram) என்ற பெரிய கட்டையின் உதவியால் மதிற்சுவரைத் தகர்க்கும் பழக்கமும் இப்போது தோன்றியது. மிக உயரமான மதிற்சுவர்களைக் கடக்க, அவர்கள் மரக் கட்டைகளால் பெரிய கோபுரங்களை அமைத்து, அவற்றை வண்டிகளில் பொருத்தி, மதிற்சுவரின் அருகே கொண்டுவந்து கோட்டைக்குள் நுழைய முயன்றனர். இந்தக் கோபுரங்கள் 150 அடி உயரம்வரை இருந்ததுண்டு. இக்கோபுரங்களையும், ஏணிகளையும் பகைவர்கள் சுவரின் அருகே கொண்டுவரும்போது உள்ளிருப்பவர்கள் பாறைகளை எறிந்தும், எரியும் பிசினையும், கொதிக்கும் எண்ணெயையும், உருகிய ஈயத்தையும் கொட்டியும் தடுக்க முயல்வார்கள். தமது தாய் நாட்டில் பகைவர்கள் படையெடுத்துச் சைரக்யூஸ் நகரை முற்றுகையிட்டபோது ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி பல பொறிகளை அமைத்துப் பகைவர்களுக்கு இடர் விளைவித்தார். பகைவர்களது கோபுரங்களும் ஏணிகளும் மதிலை அணுகும்போது நெம்புகோல்களால் இயங்கிய பெரிய தூக்கிகளால் அவற்றைத் தள்ளியும், கொக்கிகளால் அவற்றைப் பிடித்துக்கொண்டு தகர்த்தும் அவர் நாசம் விளைவித்தார்.

ரோமானிய சாம்ராச்சியத்தின் அழிவிற்குப்பின் அரண் கலையும் முற்றுகைக் கலையும் முன்னேற்றமடையவில்லை. பழங்காலக் கோட்டைகளை முற்றுகையிடும்போது உள்ளிருப்பவர்கள் வெளியேறாது தடுத்து, அவர்கள் உணவின்றித் தவித்து அடிபணியுமாறு செய்யும் முறையே வழக்கத்தில் இருந்தது. ஆனால் இதற்கு நெடுநாளைய முற்றுகை தேவையாக இருந்ததால் இம்முறை அவ்வளவாகப் பயன் தரவில்லை. இடைக்காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளில் மிக உயரமான கோபுரங்களும், கோபுரத்திலிருந்து பல திசைகளில் அம்பு எய்யும் இடங்களும், படிப்படியான தற்காப்பு அமைப்புக்களும் இருந்தன.

துறைமுகங்களைப் பாதுகாக்கும் அரண்களும் கோட்டைகளின் அமைப்பையே கொண்டிருந்தன. துறைமுக வாயிலில் மதிற்சுவர்களை எழுப்பிப் பாதுகாத்தார்கள். நீருக்குள் தெரியாதபடி மறைந்திருந்த சங்கிலிகள் பகைவரது கப்பல்கள் முன்னேறாதபடி தடுத்தன. ஆனால் நிலத்தில் பயனாக்கியதைப் போன்ற கனமான பொறிகளைப் பயன்படுத்த இயலாததால் கடல் முற்றுகை மிகவும் கடினமான தாக இருந்தது.

வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டு வெகுநாட்கள் வரை அரணிடுதலிலும், முற்றுகையிலும் மாறுதல் எதுவும் நிகழவில்லை. முதன்முதற் பயன்பட்ட பீரங்கிகள் சிறுகுண்டுகளைச் சிறிது தூரம் வரையிலுமே எறிந்தன. ஆனால் 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோட்டைச் சுவர்களைத் தகர்க்க வலிவான பீரங்கிகள் தோன்றியபின் பழங்காலக் கோட்டைகளின் அமைப்பை மாற்றியமைக்க நேர்ந்தது. தரைமட்டத்திலிருந்து அதிகமான உயரம். இருந்த நெடுஞ்சுவர்கள் பீரங்கிகளுக்குத் தக்க இலக்குக்களாக அமைந்ததால், அவற்றைத் தரைக்குக் கீழுள்ள குழியொன்றில் அமைக்கத் தொடங்கினார்கள். இதிலிருந்து கொத்தளங்கள் (Bastion) கொண்ட அரண்கள் தோன்றின. கோட்டைச் சுவருக்குப்பின் பல உதைசுவர்களைக் (Buttresses) கட்டி, அதை வலிவாக்கியதோடு சுவருக்குப்பின் ஒரு மணல் மேட்டை அமைத்து அதன்மேல் பீரங்கிகளை வைத்தார்கள். இந்த மேடு ராம்பர்ட் (Rampart) எனப்படும். இதற்கடுத்தபடியாக வெளிப்புறத்தில் இருந்த குழி கோட்டைச் சுவரைப் பாதுகாத்ததோடு, எதிரிகளின் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகவும் அமைந்தது. சுவருக்கு எதிர்ப்புறத்தில்