பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரதைப் பெரும்பாழி

183

அரபுமொழி


அரதைப் பெரும்பாழி அரித்துவார மங்கலமென்று வழங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலியமங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு வடக்கே 2½ மைல் சென்று கிழக்கே திரும்பி 4 மைல் போனால் அவளிவணல்லூர் சேரலாம். இன்னும் 1 மைல் கிழக்கே போனால் இந்தத் தலத்தை அடையலாம். கோயிலின் பெயர் பெரும்பாழி. சுவாமி பாதாளேசுவரர். அம்மன் அலங்கார நாயகி. இத்தலம் திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது.

அரபக்த நாவலர் (18-ஆம் நூ.) திருப்பெருந்துறை வேளாளர் ; தமிழில் பரதசாத்திரம் என்னும் இலக்கண நூல் செய்தவர்.

அரபிக் கடல் இந்திய சமுத்திரத்தின் வடமேற்குப் பகுதி ; இந்தியாவுக்கு மேற்கேயுள்ளது; ஏடன் வளைகுடாவும் ஓமன் வளைகுடாவும் இக்கடலின் பகுதிகள். ஏடன் வளைகுடா இதைச் செங்கடலோடு பாபெல்மான்டெப் ஜலசந்தியினால் இணைக்கிறது. ஓமன் வளைகுடா இதைப் பாரசீக வளைகுடாவுடன் சேர்க்கிறது. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடைபெறும் கடல் வாணிபம் இக்கடலின் வழியே செல்கிறது. இலட்சத் தீவுகள் இங்குள்ள முக்கியமான தீவுகள். சொகோட்டிரா தீவு ஆப்பிரிக்காவின் வடகிழக்கே இருக்கிறது. ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சின், கொழும்பு என்பவை இக்கடலை நோக்கியுள்ள முக்கியத் துறைமுகங்கள்.

அரபு சங்கம் சவுதி - அரேபியா, எகிப்து, ஈராக், டிரான்ஸ்ஜார்டன், யெமன், சிரியா, லெபனன் என்னும் அரபு நாடுகளின் மேற்போக்கான ஓர் அரசியல் சங்கம். 1945 மார்ச்சு 22-ல் ஏற்பட்டது. இதன் சபையில் இந்நாடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் அங்கத்தினர் உண்டு. பெரும்பாலும் இச்சங்கத்தின் தலைமைச் செயலகம் கைரோவிலிருந்தே அலுவல் ஆற்றி வருகிறது. அரபு நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும், அங்கத்தினர்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளை வலுக்கட்டாயமின்றித் தீர்த்துவைக்க முயலுவதையும் நோக்கங்களாகக்கொண்டு ஏற்பட்ட இச்சங்கம் முக்கியமாக யூதர்களை எதிர்த்து வருகிறது. புதிய இஸ்ரவேல் நாடு நிறுவப்பட்டபோது இச்சங்கம் அதை எதிர்த்தது. இச்சங்கத்திற்கு மதிப்புக் குறைவா யிருப்ப தற்கு, இதன் ராணுவ பலக்குறைவு முக்கியக் காரணம் என்று கூறலாம்.

அரபுமொழி என்பது அரபு நாட்டில் பிறந்து, இப்போது மத்தியக் கிழக்கு நாட்டு மக்களுடைய தாய் மொழியாக இருப்பதாகும். இது செமைட் மொழிக் குழுவில் சேர்ந்த மொழிகளுள் இறுதியில் தோன்றியது. ஆயினும் இதுவே பண்டை செமைட் மொழியியல்புகள் கெடாமல் இருந்துவருகிறது. இதன் சொல்வளம் மிகவும் அதிகம். பெரும்பாலான சொற்களில் தாதுக்களுடன் பகுதிகளோ விகுதிகளோ அல்லது உயிரெழுத்துக்களோ சேர்த்து, ஒவ்வொரு சொல்லையும் சுமார் எழுபது சொற்களாக ஆக்கிவிடலாம்.

அரபுமொழி ஆதியில் இரண்டு பிரிவினதா யிருந்தது. தென் அரபுமொழி யெமன் என்னும் தென் அரபு நாட்டில் கி.பி.600ஆம் ஆண்டுவரை பயிலப்பட்டு வந்தது. இஸ்லாம் தோன்றியதும் ஹெஜாஸ் பகுதியில் வழங்கிய வட அரபுமொழியில் குர்ஆன் பயிலப்பட்டபடியால், அதுவே தனி அரபுமொழியாக நிலைத்துப் பிறகு முஸ்லிம் இலக்கிய இலக்கணங்களுக்கு வரம்பாக ஆயிற்று. ஐரோப்பிய மக்கள் மத்தியக் காலத்தில் லத்தீன் மொழியைக் கற்று வந்ததுபோல, இஸ்லாம் வெளிநாடுகளில் பரவியபின், அந்த மதத்தைத் தழுவிய முஸ்லிம்கள் அனைவரும் அரபு மொழியைக் கற்று வந்தார்கள். இஸ்லாமியப் பண்பாடு முஸ்லிம்கள் மூலமாகவும் அராபிய யூதர் போன்ற பிறர் மூலமாகவும் ஐரோப்பாவில் பரவி, ஸ்பெயின், இங்கிலாந்து முதலிய நாடுகள் வரை எட்டிற்று. இங்கிலாந்திலிருந்த ரோஜர் பேக்கன் என்னும் அறிஞர் அரபு மொழியும் அரபு விஞ்ஞானமுமே ஆங்கில அறிவு வளர்ச்சிக்குக் காரணமா யிருந்ததாகக் கூறுகிறார்.

13ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஏகாதிபத்தியத்துக்கு மங்கோலியர்களால் கேடு உண்டாயிற்று. 15ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் ஸ்பெயினிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றின் காரணமாக ஏகாதிபத்திய ஒருமை குலைந்துபோகவே, பல முஸ்லிம் சிற்றரசுகள் எழுந்தன. அதனால் இதுகாறும் வளர்ந்துவந்த அரபுமொழியின் இலக்கியச் சிறப்புக் குன்றத் தொடங்கியது. ஆயினும் இஸ்லாமிய வேத நூலாகிய குர்ஆன் அரபுமொழியில் இயற்றப்பட்டிருப்பதால் அரபுமொழி எழுத்து வழக்கில் இன்றும் முன்போலவே இருந்து கொண்டிருக்கிறது.

அரபு இலக்கியம் : (1) இஸ்லாம் தோன்றும் முன்: இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னுள்ள காலத்தை ஜாகில்லியா அதாவது அறியாமைக் காலம் என்று கூறுவர். அக்காலத்தில் உரைநடை இலக்கியம் எதுவும் தோன்றவில்லை. செய்யுள் இலக்கியம் மட்டுமே இருந்துவந்தது.

அக்காலத்தில் அரபுக் கவிஞனே தன் இனத்திற்கு வழிகாட்டியாகவும் தீர்க்கதரிசியாகவும் ஆசிரியனாகவும் இருந்தபடியால், அவனே அவர்களுடைய வரலாற்றைப் பாடவும், அவர்களுடைய வீரச் செயல்களைப் புகழவும் உரிமையுடையவனா யிருந்தான். அவனுடைய உதவியைச் சாதித் தலைவர்களும் பிரபுக்களும் நாடினார்கள். அவர்கள் அவனைக் கண்டு அஞ்சினர். அவனே மக்களுடைய கருத்தை உருவாக்கிவந்தான். அக்காலத்துச் செய்யுள் இலக்கியங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை நீண்டநாள் வாய்மொழியாக இருந்து, பின் கி. பி. 750-900 காலப்பகுதியில் எழுத்துருப் பெற்றன.

(2) இஸ்லாம் தோன்றியதன் பின்: இஸ்லாத்துடன் தோன்றிய குர்ஆனே ஆதி அரபு இலக்கியம். குர் ஆன் மொழியைச் சிதையாமல் பாதுகாக்கவேண்டியேற்பட்டதிலிருந்தே, அரபுமொழியியலும், அரபு அகராதி யியலும் தோன்றின. நபி நாயகத்தின் பொன் மொழிகளின் தொகுதியை ஹதீது என்று கூறுவர். அதுவும் குர்ஆனும் சேர்ந்தே இஸ்லாமிய மதத்துக்கும் சட்டத்துக்கும் ஆதாரமாக இருக்கின்றன. கவிதையும் இசையும் முதலில் திமிஷ்கு நகரத்திலும், பின்னர்ப் பாக்தாது நகரத்திலும் அரச அவைகளில் செழித்து வளர்ந்து வந்தன. அரபு விஞ்ஞானமானது கிரேக்க, பாரசீக, இந்திய நூல்களை அரபுமொழியில் பெயர்ப்பதின் வாயிலாக வளர்க்கப்படலாயிற்று. இப்பணியை முதலில் தனிப்பட்டவர்களே செய்துவந்தனர். பின்னர் அது கலிபாக்கள் ஆதரவில் நடந்துவந்தது. அவர்களுள் ஒருவரான அல்மாமூன் என்பவர் பாக்தாதில் தாருல் ஹிக்மத் என்னும் விஞ்ஞான நிலையம் ஒன்றை நிறுவி, அரபுப் புலவர்களை மட்டுமன்றி, யூத, கிறிஸ்தவ, இந்தியப் புலவர்களையும் அங்கே சேர்த்து வைத்து ஆதரித்துவந்தார்.

இவ்வாறு மொழிபெயர்ப்புப் பணி நீண்ட நாள் நடைபெற்ற பின்னர்ச் சொந்தமாக நூல் இயற்றும் வேலை நடைபெற்றது. இந்தியா, பாரசீகம், கிரீஸ் நாடுகளின் கலைகளில் தேர்ச்சிபெற்ற அரபுப் புலவர்கள் சொந்த-