பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசி

191

அரிசி

என்னும் தானியச் சாதியில் 23 இனங்கள் உள்ளன. அவற்றுள் இரண்டே பயிர் செய்யப்படுவன. எஞ்சியவை காட்டுப் புற்களாகவே இருந்து வருவன. பயிர் செய்யப்படும் இனங்களுள் ஒரைசா சதைவா (Oryza sativa) என்பது நெற்பயிராகும் நாடுகளில் எல்லாம்

நெல்

1. கிளை. 2. கதிர். 3. சிறு கதிர் = ஒரு நெல்

4. சிறு கதிரின் பாகங்கள்: அடியிலிருந்து முறையே முதல் உமி (மலடு). இரண்டாம் உமி (மலடு). மூன்றாம் உமி (பூவுள்ளது) இம் மூன்றும் பூக்காம்பிலைகள். நான்காவது. பூவின் உறுப்புக்களை மூடியிருக்கும் பதர். இதனைச் சிலர் பூக்காம்புச் சிற்றிலை யென்பர். சிலர் பூவின் புறவிதழ் என்பர். நடுவில் இரண்டு செதில்கள். இவற்றைச் சிலர் மற்றொரு பூக்காம்புச் சிற்றிலை யென்பர், சிலர் அகவிதழ்கள் என்பர். இவற்றிற்குமேல் ஆறு மகரந்தக் கேசரங்கள். உச்சியில் சூலகம். ஒரே விதையுள்ள சூலறையும் இறகு போன்ற இரண்டு சூல் முடிகளும்.

5. விதையின் பாகங்கள் : a. முளை வேர், b. முளைக் குருத்து. c. கேடகம் போன்ற முளையிலை. d. முளைசூழ் தசை. இவற்றை முற்றிலும் சூழ்ந்திருக்கும் கரிய கோடு விதையின் வெளியுறையையும் கனியின் தோலையும் குறிப்பது. அதற்குப் புறம்பே பூவின் உமியும் பதரும்; கீழே மலட்டுமிகளும் சிறு கதிரின் மஞ்சரித் தண்டும் தெரிகின்றன.

6. தானிய மணியின் நெடுக்கு வெட்டின் சிறு பகுதி. சுமார் நூறு மடங்கு பெரிதாகக் காட்டுவது. (பிளைத்து பிளைத்து. காக்ஸ் என்பவர்களது 'உணவுகள்' என்னும் நூலைத் தழுவியது). a. கனித்தோல். b. விதையின் வெளியுறையும். முளைசூழ் தசையின் ஊன் மணியடுக்கும். a, b இரண்டும் தவிட்டில் வந்துவிடும். c. முளை சூழ்தசையின் பெரும்பகுதியாகிய மாவணுக்கள்.

காணப்படும். ஒரைசா கிளாபெரிமா (O. glaberrima) என்னும் இனம் மேற்கு வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் மட்டும் பயிராகின்றது. ஒரைசா சதைவாவில் இடம், பருமன், முதிரும் பருவம் முதலியவற்றைப் பொறுத்துப் பல வகைகள் உள்ளன.

நெல் முதன் முதல் எங்கே தோன்றியது என்பதைப் பற்றி உறுதியாக உரைக்க முடியாதெனினும், ஒரைசாசதைவா முதன்முதல் தோன்றியது இந்தியாவிலும் இந்தோ சீனாவிலுந்தான் என்பதில் ஐயமில்லை. இந்தியாவிலேயே அதன் காட்டுவகை காணப்படுகிறது. அதனுடன் அதன் பலவகைகள் இந்தியாவில் காணப்படுவனபோல வேறெங்கும் காணப்படவில்லை. இந்தியாவிலுள்ள காட்டுவகை அங்குள்ள பயிராகும் வகையை ஒத்திருக்கிறது. இக் காட்டுவகை காணப்படும் நிலப்பரப்பிலேயே பண்டைக்கால முதல் நெற்பயிர் செய்யப்பட்டு வருகிறது. இக்காட்டுவகையிலிருந்தே பயிர் செய்யும் வகை (ஒரைசா சதைவா) தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலுங்கூட சென்னை இராச்சியத்திலும், ஒரிஸ்ஸா இராச்சியத்திலுமே ஏராளமான வகைகள் காணப்படுவதால் இவ்விராச்சியங்களே அரிசியின் பிறப்பிடம் என்று கூறலாம்.

ஒரைசா சதைவாவில் இந்திக்கா என்றும் ஜப்பானிக்கா என்றும் இரண்டு வகைகள் உண்டு. இந்திக்கா இந்தியா முதலிய அயன் நாடுகளிலும், ஜப்பானிக்கா ஜப்பான் முதலிய உப அயன் நாடுகளிலும் பயிராகின்றன. இந்திக்கா குறைந்த விளைவு தரும். ஆனால், தண்ணீர்த் தட்டு முதலிய வசதிக் குறைவுகள் ஏற்பட்டாலும் தாங்கும் ஆற்றலுடையது. ஜப்பானிக்கா மிகுந்த விளைவு தரும் ; உரமிட்ட அளவுக்கு விளையும்; உமியின் நிறை குறைவாயிருக்கும். ஜப்பானிக்காவை இந்திக்கா விளையும் இடங்களில் பயிரிட்டால் தக்க பயன் தருவதில்லை.

நெற்பயிர் செய்தல்: நெல் அயனமண்டலப் பயிராதலால் அதற்கு மிகுந்த வெப்பநிலையும் நீரும் தேவை. அது வளரும்போது 70-100° பா. வெப்பம் வேண்டும். மேட்டுப் பூமியில் 25-30 அங்குல மழையுள்ள விடத்தில் புன்செய்ப் பயிராகவும், பள்ளத்தாக்கானதும் 200 அங்குலம் மழை அல்லது அதற்கு மேற்பட்ட மழையுள்ளதுமான இடத்தில் நன்செய்ப் பயிராகவும் இது விளையும். இது மணல் சேர்ந்த குறு மண், குறு மண், களி, ஆழங்குறைந்த சரளை ஆகிய மண்களிலும், அமில மண், கார மண் ஆகிய மண்களிலும் பயிர் செய்யப்படுகிறது. நிலவளம், நீர்வளத்தைப் பொறுத்து இரண்டு மூன்று ஆண்டுகட்கு ஒரு தடவையாகவோ, அல்லது ஆண்டுக்கு இரண்டு மூன்று தடவைகளாகவோ பயிராகலாம். கடல் மட்டத்திலும், கடல் மட்டத்துக்குக் கீழும், கடல் மட்டத்துக்குமேல் 3000-5000 அடி உயரத்திலும் பயிர் செய்யலாம். சில வகைகள் கோடையிலும், சில வகைகள் குளிர்காலத்திலும் பயிராகும். சில 80 நாளிலும் சில 200 நாளிலும் விளையும். இவ்வாறு பலவகையான வேறுபாடுகள் இருப்பதனாலே ஏறக்குறைய எண்ணாயிரம் நெல் வகைகள் காணப்படுகின்றன.

இந்தியாவில் நெற்பயிர் : இந்தியாவில் பயிராகும் மொத்த நிலப்பரப்பில் 30% ஆகிய ஏழரைக் கோடி ஏக்கரில் நெற்பயிர் நடந்து வருகிறது. இந்தியாவிலேயே நெற்பயிராகும் நில அளவு மிகுதி. இங்குச் சராசரி ஆண்டு விளைவு 2.2 கோடி டன் அரிசி. பெரும்பாலும் கிழக்குக் கங்கைப் பள்ளத்தாக்கிலும், தென்னிந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், கடற்கரைப் பகுதிகளிலுமே இது விசேஷமாகப் பயிராகின்றது. 80 அங்குல மழையுள்ள இடத்தில் இதுவே முதன்மையான பயிர். 30-80 அங்குல மழையுள்ள இடத்தில் முக்கியப் பயிர்களில் இதுவும் ஒன்று. 30 அங்குலத்துக்குக் குறைந்த மழையுள்ள இடத்தில் பாசன உதவிகொண்டும் குறைவாகவும் பயிரிடப்படுகிறது. சென்னை இராச்சியத்திலும், மேற்கு வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், பம்பாயிலும் சராசரி ஏக்கர் விளைவு 1000-1177