பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசியா

336

ஆசியா

இவற்றில் பெரும்பாலும் ஒற்றுமை உண்டு. இப்பகுதிகளின் பொருளாதாரம் நெற்பயிரை முக்கியமாகக் கொண்ட விவசாயத்தையும், அதற்குத் துணையாகவுள்ள ஆடுமாடு மேய்த்தல் மீன்பிடித்தல் ஆகியவற்றையும் பொறுத்ததாயிருக்கின்றது. கைத்தொழில் பல படிகளில் காணப்படுகிறது; இந்தியாவில் கையால் செய்யும் தொழிலாகவும், சீனாவிலும் ஜப்பானிலும் யந்திரத் தொழில் போன்றதாகவும் இருக்கின்றது. இவ்வாறு வேறுபடுவதற்குக் காரணம் இயற்கைப் பொருள்கள் கிடைப்பது, ஐரோப்பியக் கைத்தொழில் முறைகளை மேற்கொள்வது, அண்மையில் நடந்த போர்களின் தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். சீனாவிலும் ஜப்பானிலும் வேறு இடங்களிலுள்ள பெரிய நகரங்களிலும் நடைபெறும் எந்திரக் கைத்தொழில்கள் தவிர ஏனையவை சாதி முறைகளையும் மதக் கடமைகளையும் ஆதாரமாகக் கொண்டனவே யன்றிப் பொருள் இலாபத்தையோ அல்லது தொழிலாளர் தேவைகளையோ ஆதாரமாகக் கொண்டனவல்ல. அண்மைக்காலம் வரை. குடியரசு ஏற்படுவதற்கு முன்னர், சீனாவில் சாதிகளையும் குடும்பங்களையும் கொண்ட கிராமங்களே அடிப்படைச் சமூகங்களாக இருந்தன. இப்பகுதிகளில் ஆதியிலிருந்த மதங்கள் மனிதனுக்கு இயற்கையுடனும் இறந்த காலத்துடனும் தொடர்புண்டு என்பதை வற்புறுத்தின. அந்த மதங்களுடன் பகுதிக்கு ஏற்றவாறு பெளத்த மதமோ, ஷின்டோ மதமோ அல்லது இஸ்லாம் மதமோ இணைந்துகொண்டு, தினசரி வாழ்க்கையில் பெரும் பகுதியில் இடம் பெற்றுள்ளன. ஆயினும், இரண்டாவது உலகப்போரும், அதன்பின்னர் எழுந்த கம்யூனிஸ்டுக் கொள்கைகளும் தேசியக் கொள்கைகளும் தென்கிழக்கு ஆசியாவின் சமூக, பொருளாதார வாழ்க்கையிற் பெரிய மாறுதல்களை உண்டாக்கியிருக்கின்றன. இவற்றின் நன்மை தீமைகளை இப்பொழுது மதிப்பிடுவதற்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. எம். ஜே. மெ.

தென்மேற்கு ஆசியா: அறிஞர்கள் வெவ்வேறு மக்கள் வகைகள் வாழும் பகுதிகள் என்று உலகத்தில் குறிப்பிட்டுள்ளவற்றுள் தென்மேற்கு ஆசியா ஒன்று. ஆதிகாலந்தொட்டு மக்கள் வகைகள் அங்கு வருவதும் போவதுமாயிருந்திருக்கின்றன. பூகோள சாஸ்திர முறையில் பார்த்தால், அது மத்திய ஆசியாவின் புல்வெளிகளுக்கும் செங்கடற்கரையிலிருந்து தொடங்கும் ஆப்பிரிக்காவின் விசாலமான பாலைவனங்கட்குமிடையில் இருக்கின்றது. இப்பகுதியிலிருந்து மத்திய ஆசியாவுக்குச் செல்வதற்கான வழி கொராசான் கணவாயாகும். இந்தப் பகுதி மத்தியதரைக் கடற்கரையை ஒட்டியுமிருக்கிறது. 'செழும் பிறை நாடு' (The Fertile Crescent) என்பது தென் பாலஸ்தீனத்திற்கும் பாரசீக வளைகுடாவுக்கும் இடையிலிருக்கின்றது.

இவ்வாறு இப்பகுதி மத்திய ஆசியப் புல்வெளிக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருப்பதால் ஆதிமுதல் இப்பகுதி வழியாகவே மத்திய ஆசிய மக்கள் ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் வந்து போக வசதியாயிருந்தது. அதனால் புல்வெளியில் வாழ்ந்த நாடோடி மக்களுக்கும், ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் வாழ்ந்து வேளாண்மையும் வாணிபமும் செய்துகொண்டிருந்த மக்களுக்கும் தொடர்பு உண்டாவதற்கு வசதியாயிருந்தது. இப்பகுதி மக்கள் நைல் நதி தீரத்து மக்களுடனும் தொடர்புடையவர்களா யிருந்தார்கள். செழும்பிறைப் பகுதியில் அசிரியா, பாபிலோன், ஈலம் ஆகிய பண்டைய பெரிய நாகரிகங்கள் தோன்றின.

அநேகமாகப் பிற நாட்டிலிருந்தே நாடோடி மக்கள் தங்கள் கால்நடைகளுக்குத் தீவனமும் தண்ணீரும் தேடி இப்பகுதிக்கு வருவோராயிருந்தனர். பொதுவாக இப்பகுதி மக்கள் வெளிநாடுகளுக்குக் குடியேறிப் போனதில்லை. இதற்கு மிகவும் முக்கியமான விலக்கு, கி.பி.7ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றியதன் காரணமாக அரபு மக்கள் பிற நாடுகளுக்குச் சென்றதே யாகும்.

ஆசியாமைனர் என்னும் நிலப்பகுதி கிரீஸ் நாடுவரை கடலுக்குள் நீண்டு உட்சென்றிருப்பதால் கிரேக்கர்களே அப்பகுதிக்கு ஆசியாமைனர் என்ற பெயரை அளித்தார்கள். இப்போது அது ஆட்டமான் அல்லது ஊஸ்மானிய துருக்கியருடைய தாயகமாக இருந்து வருகிறது. ஆதியில் அந்த நாட்டில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த செல்ஜுக்குகள் வசித்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் துருக்கியர்கள். அவர்கள் வந்து சுமார் அறுநூறு ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் இப்போதுள்ள துருக்கியர்கள் காக்கேசிய, கிரேக்க, லெவான்டைன் மக்களுடன் கலந்தவர்கள். இப்போது அவர்களுக்கும் இப்பகுதியிலுள்ள மற்றவர் களுக்கும் தோற்றத்தில் எவ்வித வேறுபாடும் காணமுடியாது.

துருக்கியை அடுத்துக் கிழக்கேயுள்ள பாரசீகம் உயர்ந்த பீடபூமி, அங்கே ஐரேனியர்கள் வாழ்கிறார்.கள். ஆதிகால முதல் அது சக்கராதிபத்தியமுள்ள ஒரு முடியாட்சி நாடாகும். அங்கே ஒரே அரசரின் ஆதிக்கத்தில் பல இன மக்கள் வாழ்கிறார்கள். ஆயினும் அவர்கள் அனைவரும் தங்களை ஐரேனியர்கள் என்று அழைத்துக்கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். வடக்கே வாழும் அசர்பைஜனிகளும் காஷ்கேர்களும் துருக்கி மொழியையும், மேற்கேயுள்ள குர்துக்கள் ஓர் ஆரிய மொழியையும், அசிரோ கால்தேயர்கள் செமிட்டிக் அராமிக் மொழியையும், லூர்களும் பக்தியாரிகளும் பாரசீக மொழியையும், கொராசானிலுள்ள துர்க்கோமர்கள் வேறு மொழியையும் பேசுகிறார்கள். நாட்டின் எல்லைப்புற நகரங்களில் யூதர்களும் சார தூஷ்டிர மதத்தினரும் சிறுபான்மையோராக இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கும் பாரசீகத்திற்குமிடையிலுள்ள ஆப்கானிஸ்தானத்தைச் சூழ்ந்து இந்துகுஷ் என்ற உன்னதமான மலைகள் இருக்கின்றன. இங்குள்ளவர்களும் ஐரேனிய வகுப்பில் ஒருவகையினரே. அவர்கள் பேசும் மொழி வார்சி (Farsi) என்பது. அங்கே பலவிதமான மக்கள் வாழ்கிறார்கள். மங்கோலிய ஹஜார்கள் மலைச்சரிவுகளிலும், உஜ்பெக்குகளும் துர்க்கேமான்களும் வடபகுதியிலும், பலுச்சியர்கள் தென்பகுதியிலும், பாக்தூன்கள் கீழ்ப்பகுதியிலும், பழுப்பு மயிரும் நீலக்கண்களுமுடைய ஷெக்னர்களும் பாஷாய்களும் உண்மையிலேயே ஆப்கானிஸ்தான் ஆட்சிக்குட்பட்ட வாக்கன் என்னுமிடத்திலும் வாழ்கிறார்கள். காபிர்ஸ்தானம் என்று முன்னால் வழங்கிவந்த பகுதியிலுள்ள நூரிஸ்தானியர் என்போர் அலெக்சாந்தருடன் வந்த மாசிடோனியர்களுடைய வழியினராவர்.

இந்தப் பகுதியில் தென்பாகத்தில் கடலுக்குள் சென்றிருக்கும் அராபிய தீபகற்பம் பெரும்பாலும் பாலைவனங்களால் ஆனதே. அரசியல் விஷயமாக அது சவுதி அரேபியா, யெமென், ஜார்டன் என்று பல பகுதிகளாகப் பிரிக்கப்பெற்றிருக்கிறது. சவுதி அரேபியாவிலுள்ள ஹெட்ஜாஸ் என்னும் கடற்கரை மாகாணத்தில்தான் முஸ்லிம்களுடைய புண்ணியத்தலமாகிய மக்கா நகரம் இருக்கின்றது.

மக்கள் வகையை வைத்துப் பார்த்தால் சிரியாவும் ஈராக்கும் அராபியாவுடன் சேர்ந்தனவாகும். அராபியாவிலுள்ள மக்களும் பாலைவன நாடோடிகளான பெடூயின்களும் அரபு மொழி பேசுகின்றனர். இஸ்லாம்தான்