பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதிவராக கவி

374

ஆந்திரர்


ஆதிவராக கவி (18ஆம் நூ.) வடமொழியிலுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர்.

ஆதிவாயிலார் பரதசேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழுதப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை.

ஆதொண்டை முள்ளுள்ள கொடி. இந்தியா, இலங்கை, பர்மா முதலிய தேசங்களில் வளர்வது. வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும். பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும். இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக்கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல்

ஆதொண்டை

1. கிளையும் பூக்கொத்துக்களும். 2.கனி. 3. பிஞ்சு. குறுக்குவெட்டு, 4. முதிர்ந்தகனி - குறுக்குவெட்டு.

போடுவார்கள். இலையை, வீக்கம், கட்டி, மூலவியாதி முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவதுண்டு. வேரின் பட்டை கசப்பானது. உபசமன மருந்தாகவும், அரோ சிக நிவிர்த்தி மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி பேதிக்கும் வேர்ப்பட்டை பயன்படுகிறது. குடும்பம்: கப்பாரிடேசீ ; இனம்: கப்பாரிஸ் சைலானிகா (Capparis zeylanica).

ஆதொண்டைச் சக்கரவர்த்தி: பார்க்க: தொண்டைமான் இளந்திரையன்.

ஆதோனி பல்லாரி மாவட்டத்தில் பல்லாரிக்கு அடுத்த பெரிய பட்டணம். அருகிலுள்ள குன்றின் மீது ஒரு பலமான கோட்டை உள்ளது. விஜயநகர அரசர்கட்குப் பெரிய அரணாக இருந்தது. ஒரு குன்றின் மீது கல்லால் செய்த பீரங்கியும் சில வெடி மருந்துச் சாலைகளும் காணப்படுகின்றன. ஜைன உருவங்கள் செதுக்கிய பாறைகளை ஜைனர்கள் பாதுகாத்து வருகிறார்கள். பருத்தி வியாபாரம் மிகுதி. இங்குச் செய்யும் சமக்காளங்கள் பேர் போனவை. இது ஒரு நகராட்சிப் பட்டணம்.

ஆந்த்ரசீன் (Anthracene) : குறியீடு இது ஒரு ஹைடிரோ கார்பன். கரித்தாரை வாலை வடிக்கும்போது 270°-லிருந்து 300°க்குள் வெளிவரும் கலவையிலிருந்து இதைப் பெறலாம். இதில் 5-10% ஆந்த்ரசீன் இருக்கும். இதைப் பின்னப் படிகமுறையில் (Fractional Crystallization) பிரித்தெடுத்துப் பிரிடீன் போன்ற திரவங்களிற் கரைத்துத் தூய்மையாக்கலாம். தூய ஆந்த்ரசீன் நிறமற்ற படிகங்களாகக் கிடைக்கும். இப் படிகங்கள் நீல நிறத்துடன் ஒளிரும். இதன் உருகுநிலை 218°. இது நீரில் மிகச் சிறு அளவே கரையும். சூடான பென்சீனில் இது அதிகமாகக் கரையும். குளோரினும் புரோமினும் ஆந்த்ரசீனுடன் கூடிக் கூட்டற் கூட்டுக்களையும், பிரதியீட்டுக் கூட்டுக்களையும் அளிக்கும். இது நைட்ரிக அமிலத்துடன் வினைப்பட்டு, நைட்ரோ ஆந்த்ரசீன்கள் என்ற கூட்டுக்களைத் தரும். கந்தகாமிலத்துடன் இது வினைப்பட்டு, ஆந்த்ரசீன் சல்போனிக அமிலங்களைத் தரும். ஆக்சீகரணப் பொருள்கள் ஆந்த்ரசீனுடன் வினைப்பட்டு, அதை ஆந்த்ரோகுவினோன் என்ற கூட்டாக மாற்றும். சாயத் தொழிலில் முக்கியமானது இக்கூட்டு.

ஆந்திரப் பல்கலைக் கழகம் 1926ஆம் ஆண்டில் அமைந்ததாகும். அது முதலில் கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்தும் கழகமாக பெஜவாடாவில் இருந்தது. அதன்பின் 1929-ல் அச்சட்டம் திருத்தப்பெற்று, மாணவர் உறையும் வசதியுள்ள பல்கலைக் கழகமாக ஆயிற்று. கடலுக்கு அருகில் குன்றின் மீதுள்ள வால்டேர் பட்டணத்தை அதன் தலைமைத் தலமாக்கினர்.

ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், பல்கலைக் கழகக் கலை வாணிபக் கல்லூரியும், ஜெய்ப்பூர் விக்கிரமதேவ் விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்லூரியும், எர்ஸ்கைன் இயற்கை விஞ்ஞானக் கல்லூரியும், பல்கலைக் கழகச் சட்டக் கல்லூரியும் இருக்கின்றன. பட்டம் பெற்ற பின் ஆராய்ச்சி செய்ய இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சர்க்கரை, மருந்து வகைகள், ரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்வதன் பயன்முறைப் பௌதிக வியல், வானிலையியல் ஆகியவை கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் தவிரக் கழகத்துடன் இணைந்தனவாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் ஒரு பொறியியற் கல்லூரியும், ஒரு விவசாயக் கல்லூரியும், நான்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஆகிய எட்டுத் தொழிற் கல்லூரிகள் இருக்கின்றன. கழகத்துடன் இணைந்த பதின்மூன்று முதல்தரக் கல்லூரிகளும், பத்து இரண்டாந்தரக் கல்லூரிகளும் இருக்கின்றன. கீழ்நாட்டுக் கலைக்குரிய பத்துப் பாடசாலைகள் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுப் பட்டப் பரீட்சைகளுக்குக் கல்வி போதிக்கின்றன.

ஆந்திர மொழி: பார்க்க: தெலுங்கு.

ஆந்திரர்: தெலுங்குமொழி பேசும் மக்கள் தம்மை ஆந்திரர்களென்றும், தாம் மிகுதியாக வசிக்கும் தக்கிணப் பகுதியை ஆந்திர நாடென்றும் வழங்குவர்.