பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆம்பூர்

392

ஆமணக்கு

கப்பட்ட ஜெனிவா உடன்படிக்கையானது ஆம்புலன்ஸ் வண்டியை ஓட்டுபவரும் அதில் வேலை செய்பவரும் நடுநிலைமையினராகக் கருதப்பட வேண்டும் என்று கூறுகின்றது.

ஆம்பூர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூர் தாலுகாவில் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. புகைவண்டி நிலையம் உண்டு. இங்கு எண்ணெய், நெய் வியாபாரம் மிகுதி. எளிதில் ஏறமுடியாத கோட்டை உண்டு. இங்குத்தான் முதன் முதல் ஐரோப்பியத் துருப்புக்கள் தங்கள் திறமையைக்காட்டினவாம்.

ஆம்ஸ்டர்டாம் ஹாலந்தின் தலைநகரம்; இது ஒரு முக்கிய வாணிப, கைத்தொழில் நகரம். வட கடலோடு இந் நகரத்தை வடகடல் கால்வாய் இணைக்கிறது. இக் கால்வாயின் வழியே மிகப் பெரிய கப்பல்களும் செல்லக்கூடும். இங்குள்ள கப்பல் துறை ராட்டர்டாமிற்கு அடுத்தாற்போல மிகப் பெரியது. இங்கே கரி, தானியம், பெட்ரோலியம், புகையிலை, தேயிலை, காப்பி முதலியன இறக்குமதியாகின்றன; பால் பண்ணைப் பொருள்கள், காகிதம் முதலியன ஏற்றுமதியாகின்றன. இங்கு நடக்கும் வைரம் பட்டை தீர்க்கும் தொழில் உலகப் புகழ் பெற்றது. ஆம்ஸ்டர்டாம் ரைன் கால்வாய் உள்நாட்டோடு இந் நகரத்தை யிணைக்கிறது. வெனிஸ் நகரத்திற்போல நகருக்குள்ளே பல கால்வாய்கள் குறுக்கும் நெடுக்கும் செல்லுகின்றன. இங்குள்ள மிருகக் காட்சிச்சாலை மிகவும் புகழ் பெற்றது. இங்கு இரண்டு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. வாணிபம் செழித்தோங்கும் நகரம். இந்நகரம் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் இத்துறைமுகத்தின் ஒரு பெரும் பகுதியை ஜெர்மானியர்கள் அழித்து விட்டனர். ஆயினும் யுத்தத்திற்குப் பிறகு சீர் செய்யப்பட்டுவிட்டது. மக் : 8,32,583 (1949).

ஆம்ஹர்ஸ்ட் பிரபு (1773-1857) : வில்லியம் பிட் என்னும் பெயருடைய ஆம்ஹர்ஸ்ட் பிரபு சீனாவிற்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாகச் சென்று வந்தவர். 1824-ல் இவர் இந்திய கவர்னர் ஜெனரலாக நியமனம் பெற்றார். இவர் காலத்தில் முதல் பர்மிய யுத்தம் (1824-26) நடைபெற்றது. அந்த யுத்தத்தின் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றியடைந்தனராயினும், ஆம்ஹர்ஸ்ட்டின் திறமைக் குறைவால் ஆங்கிலேயர்கள் மிகுந்த நஷ்டமும் துன்பமும் அடைந்தனர். 1824-ல் வங்காள சிப்பாய்களிடையே ஏற்பட்ட பரக்பூர் கலகத்தை ஆங்கிலேயர்கள் கடுமையாக அடக்கினர். 1826-ல் பரத்பூர் இளவரசனை ஏமாற்ற நினைத்த துர்ஜனசால் என்பவனை எதிர்த்துப் பரத்பூரில் நடந்த போரில் ஆங்கிலேயர் வெற்றியடைந்தனர். முதன் முதலில் கோடைக்காலத்தில் சிம்லாவில் வந்து தங்கிய கவர்னர் ஜெனரல் இவரே. ஆம்ஹர்ஸ்ட் பிரபு 1828 மார்ச்சில் கவர்னர் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்குச் சென்றார். இவர் 1857-ல் இறந்தார். தே. வெ. ம.

ஆமணக்கு: இந்தியாவின் எண்ணெய் வித்துக்களில் ஆமணக்கு முக்கியமானது. இச்செடி இந்தியாவில்தான் ஆதியில் தோன்றியது எனச் சிலர் கருதுகிறார்கள்; வட ஆப்பிரிக்காவில் தோன்றியது என்று கூறுவோரும் உண்டு. சென்னை இராச்சியத்தில் இது 25 இலட்சம் ஏக்கர் பயிரிடப்படுகிறது. 1948-1949ல் இந்தியாவின் ஆமணக்கு உற்பத்தி சுமார் 1,10,000 டன். இதில் ஏறக்குறைய பாதி ஐதராபாத் இராச்சியத்தில் விளைகிறது. உலகில் ஆமணக்கு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தையும், இந்தியா அதற்கடுத்த இடத்தையும் வகிக்கின்றன.

ஆமணக்குச் செடியின் விஞ்ஞானப்பெயர் ரிசினஸ் கம்யூனிஸ் (Ricinus communis). இதில் ஓராண்டு வகையும், பல ஆண்டு வகையும் உண்டு. இது நேரான, உட்டுளையுள்ள தண்டுள்ளது. இலை அங்கை வடிவமும், ரம்பம் போன்ற விளிம்புமுள்ளது. இதன் இலைக் காம்புகளும் தண்டும் பச்சை முதல் நீலச் சிவப்புவரை

ஆமணக்கு
1. கிளை 2. பூக்கொத்து அடிப்பாகத்தில் ஆண் பூக்கள், நுனிப்பாகத்தில் பெண் பூக்கள், 3. இளங்காய்–நெடுக்கு வெட்டு.

பல நிறங்கள் கொண்டிருக்கலாம். பூக்கள் பெருங்கொத்தாகக் கிளைகளின் நுனியில் உண்டாகும். ஒரு பாலுள்ளவை. கொத்தின் அடியில் ஆண் பூக்களும் நுனியில் பெண் பூக்களும் இருக்கும். பூக்களில் அல்லி இல்லை. ஆண் பூவில் ஐந்து புல்லிகளும் பல கேசரங்களும் உண்டு. ஒவ்வொரு கேசரத்திலும் தாள்கள் பலவாகப் பிரிந்திருக்கும். ஒவ்வொரு பிரிவின் நுனியிலும் ஒரு மகரந்தப் பையுண்டு, பெண் பூக்களில் புல்லி விரைவில் உதிர்ந்து விடும். சூலறைமேல் முள் முள்ளாக இருக்கும். அது மூன்று பிரிவுள்ளது. ஒரு பிரிவில் ஒரு விதையிருக்கும். விதைக்கு வெளித்தோல் கடினமாகவும் உள்தோல் மெல்லியதாகவும் இருக்கும். விதையிலைகள் மெல்லியவை. அவற்றைச் சூழ்ந்திருக்கும் முளைசூழ்தசை (Endosperm) எண்ணெய் நிரம்பியது. விதையில் 46-57% எண்ணெய் இருக்கும். காய் மூன்று பாகமாக வெடிக்கும். பிறகு ஒவ்வொன்றும் திறக்கும். விதை அண்டவடிவ வண்டுபோலக் காணும். விதையின் ஒரு முனையில் விதைமுண்டு ((Caruncle) வெண்மையாக இருக்கும். இச்செடி உருண்டையான காய்கள் காய்க்கும். சிலவகைச் செடிகளில் காய் வெடித்து விதைகள் சிதறும்.

ஆமணக்குப் பலவகைப்பட்ட தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் விளைகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய பின் இது விதைக்கப்படுகிறது. மழை அதிகமாக உள்ள இடங்களில் இதைச் சிறிது தாமதமாக விதைப்பது