பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்னல்டு, ஜோசெப்

413

ஆர்னிதொரிங்க்கஸ்

(Essays in Criticism), பண்பாடும் அராஜகமும் (Culture and Anarchy), இலக்கியமும் கொள்கையும் (Literature and Dogma). கவிதைகளுள் சிறந்தவற்றில் சில ஷோரப்-ரூஸ்தும், டிரிஸ்டிரம்த் இசால்ட் என்பனவாம்.

ஆர்னல்டு, ஜோசெப் (1782-1818) எடின் பரோவில் மருத்துவக் கல்வி பெற்றவர். கப்பலில் மருத்துவராக இருந்தவர். பிறகு ராபில்ஸ் (Raffles) என்பவருடன் இயற்கை விஞ்ஞானியாகப் பிரயாணம் செய்த காலத்தில் உலகத்திலுள்ள பூக்களிலெல்லாம் மிகப் பெரியதான பூவைச் சுமாத்திரா தீவில் கண்டுபிடித் இவ்விருவர் நினைவாக ராப்லிசியா ஆர்னல்டை (Rafflesia Arnoldi) என்று பெயரிடப்பட்டது. அந்தப் பூவின் குறுக்களவு ஒரு கஜம் வரை இருக்கும். ஒவ்வொரு இதழும் ஓரடி நீளமிருக்கும். அதன் நிறை பதினைந்து ராத்தல். அதில் பன்னிரண்டு புட்டி அதாவது ஒன்றரை காலன் பூந்தேன் இருக்கும். செடிக்கு இலையுமில்லை. கிளையுமில்லை. ஓர் ஒட்டுண்ணி அதன் உடற்பாகங்கள் காளான்வேர் (மைசீலியம்) போன்று, ஒருவிதப் பிரண்டை அல்லது திராட்சைச் சாதிச் செடியின் வேர்த் திசுக்களுள்ளே புகுந்து வளரும். பூ அழுகிய புலால் நாற்றமடிக்கும்; புலாலுண் ஈக்கள் பூந்தேனுண்ண வரும்.

ஆர்னிதொரிங்க்கஸ் ஒரு விசித்திரமான பாலூட்டி விலங்கு. பாலூட்டி வகுப்பில் மிகத் தாழ்ந்த மானோட்ரிமேட்டா (த.க.) என்னும் வரிசையைச் சேர்ந்தது. இவ்வரிசை விலங்குகளுக்குப் பாலூட்டிகளுக்கே உரிய மயிர்ப்போர்வையும் பால் சுரப்பிகளும் உண்டு. ஆயின் மற்றப் பாலூட்டிகளைப் போல் இவை குட்டி போடுவதில்லை; பறவை, ஊர்வன போல முட்டையிடும். மற்றப் பாலூட்டிகளில் மலவாய் ஒன்று; சிறுநீரும், ஆணில் விந்தும், பெண்ணில் முட்டையும் வெளிவரும் வழி ஒன்று. ஆயின் இவற்றில் இவையெல்லாம் ஒரே வாயிலில் வெளிப்படும். இந்தப் பண்பும் பறவை, ஊர்வனவற்றில் காணப்படுவதே. மானோட்ரி மேட்டா என்னும் கிரேக்க மொழி ஒரு வாயில் உள்ளவை எனப் பொருள்படும். பால் சுரப்பிகள் இருப்பினும் தனித்த மடியாவது, காம்பாவது கிடையாது. வயிற்றுப்புறத்தில் தோலில் சில இடங்களில், பல நுண்மையான தொளைகள் வழியாக, வேர்வை தோன்றுகிறமாதிரி, பால் வெளிவரும். அதைக் குட்டிகள் நக்கிக் குடிக்கும். இந்த வரிசை விலங்குகள் ஆஸ்திரேலியப் பிராந்தியத்தில் மட்டுமே உண்டு. ஆர்னிதொரிங்க்கஸ் தென் கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் டாஸ்மேனியாவிலும் இருக்கிறது.

ஆர்னிதொரிங்க்கஸ்

இது ஆற்றங்கரைகளில் நீண்ட வளை தோண்டி அதில் வசிக்கும். இரவில் சஞ்சரிக்கும். இது ஒரு சிறு பிராணி. 20 அங்குல நீளமிருக்கும். வால் குட்டையாகவும் தட்டையாகவும் 4-5 அங்குலமிருக்கும். உடம்பில் நீண்டு சுருண்ட மயிரும், அதற்கு அடியில் அடர்த்தியாக வளரும் குட்டையான நுண்மயிரும் இருக்கும். மயிர் கரும் பழுப்பு நிறமானது. வயிற்றுப்புறம் சற்று வெளுத்துத் தோன்றும். பட்டுப்போல மெதுவாக இருக்கும். இதன் கண்கள் சிறியவை. காதுக்குப் புறச்செவி வெளியே நீண்டில்லை. இதன் வாயில் வாத்துக்கு இருப்பது போன்ற தட்டையான அகன்ற அலகு உண்டு. இந்த அலகு காரணமாக இதற்கு ஆர்னிதொரிங்க்கஸ் (பறவை மூக்கு) என்னும் விஞ்ஞானப் பெயர் வந்திருக்கிறது. அலகு 2½; அங்குல நீளமும் 2 அங்குல அகலமும் உள்ளது. இந்தப் பிராணிக்கு மற்றப் பாலூட்டிகளுக்கு இருப்பது போன்ற பற்கள் இளமையில் மட்டுமே உண்டு. அப்போது கடைவாய்ப் பற்கள் போன்றவை 10-12 இருக்கும். நடுப்பிராயத்தில் அவை விழுந்துவிடும். அவற்றிற்குப் பதிலாகக் கொம்புப் பொருளாலான பல்போன்ற எடுப்புக்கள் தாடைகளில் உண்டாகும். அவை உணவை மெல்ல உதவுகின்றன. அலகினாலே, நீருக்கு அடியிலுள்ள சேற்றைத் துழாவி, அதிலுள்ள பூச்சி, புழு, சிறிய ஓட்டு மீன்கள், நத்தை முதலியவற்றைப் பிடிக்கும். இதன் கன்னத்தில் விசாலமான பைகளுண்டு. இந்தக் கன்னப்பைகளுக்குள் இந்த இரையைச் சேர்த்து வைத்துக்கொண்டு உண்ணும்.

இதன் கால்கள் குட்டையானவை, வலுவானவை. ஐந்து விரல்களும், அவற்றிற்குப் பலமான உகிர்களும் உண்டு. விரல்களுக்கு இடையே அகலமான சவ்வு உண்டு. முன்கால்களில் இந்தச் சவ்வு உகிர்களின் முனைக்கு அப்பாலும் சென்றிருக்கும். நீரில் நீந்தும் போது சவ்வு முழுவதும் அகன்று பெரிய துடுப்புப் போல உதவும். தரைக்கு வரும்போது சவ்வின் முன் பாகம் பின்னுக்கு உள்ளங்காலில் மடிந்துகொள்ளும். இவ்வளவு அகலமான பாதம் இருப்பதால் இந்தப் பிராணிக்கு பிளாட்டிப்பஸ் (அகலடி) என்றும் பெயருண்டு. பின் குதிகாலில் ஆணுக்கு ஒரு முள் உண்டு. அதன் வழியாக அருகிலுள்ள சுரப்பியிலுண்டாகும் நஞ்சு வெளிவரும்.

பெண்தான் வளை தோண்டுவது எனத் தெரிகிறது. வளை சுமார் 30 அடி நீளமிருக்கும். தரைமட்டத்திற்குச் சுமார் ஓரடி கீழே தோண்டிக் கொண்டு போகும். வளை பல கோணலாக இருக்கும். அதில் ஓரிடத்தில் ஓரடி விட்டமுள்ள அறை ஒன்றிருக்கும். அதில் இலை, புல், பாசி முதலியவற்றைக்கொண்டு ஒரு கூடு அமைக்கும். வளைக்கு இரண்டு வழிகளுண்டு. ஒன்று நீருக்கு வெளியே இருக்கும். இன்னொன்று நீருக்குள்ளே திறக்கும். மற்றப் பிராணிகளின் கண்ணிற் படாமல் நீருக்குள்ளிருந்தே தன் வளைக்குள் இது போக வர முடியும். மேலும் வளையில் அங்காங்கே சேற்றை வைத்து வழியடைத்திருக்கும். இது பகை விலங்குகள் வராமல் காக்கும் உபாயம்.

ஆர்னிதொரிங்க்கஸ்
குட்டிகளுக்குப் பாலூட்டுதல்

ஆர்னிதொரிங்க்கஸ் சாதாரணமாக இரண்டு முட்டையிடும். முட்டை ¾ அங்குல நீளமும் ½ அங்குல அகலமும் இருக்கும். மேலே நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய ஓடு உண்டு. முட்டையிலிருந்து பொரிக்கும் குஞ்சுக்குமயிர் முளைத்திராது. மானோட்ரிமேட்டாவில் பால் மடிக்குக் காம்பு கிடையாது; பால் பல தொளைகள் வழியாக வயிற்றுப்புறத்தில் சில இடங்களில் வெளிவரும் என்று மேலே சொல்லப்பெற்றது.