பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகப்பொருள்

12

அகம்

கனாலறிந்து சென்று கூடுதல். தோழியிற் கூட்டமாவது, இக்களவொழுக்கத்தை நீட்டித்து நடத்த விரும்பிய தலைவன், தலைவியினுடைய உயிர்த்தோழியாவாள் இன்னாளெனக் குறிப்பாலறிந்து கொண்டு, அவள் தனித்திருக்குமிடத்தும் தலைவியோடு கூடியிருக்குமிடத்தும் சென்று தன் குறையிரந்து கூறி அத்தோழி வாயிலாகக் கூடுதல். இஃது ஒருவகை.

இனி, இந்நான்கும் இம்முறையே நிகழாது இடையீடுபட்டும் வரும். எவ்வாறெனில், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவிடத்து அவ்விருவரும் ஒத்த காதலராயினும் அப்பொழுதே இயற்கைப் புணர்ச்சி முட்டுப் பாடின்றி நடைபெறுமென்பது உலகியலிற் பெரும்பாலும் அரிது. அது நிகழாதபோது, காதற் குறிப்பு உணர்ந்து பிரிந்த அவ்விருவரும் மீட்டும் ஒருவரையொருவர் காணலாமென்னும் வேட்கையால் அடுத்த நாளில் அவ்விடம் வந்து கூடலாம். அப்பொழுதும் தடை நேர்ந்தால் பாங்கன் உதவியாற் கூட்டம் பெறலாம். அதற்கும் இடையீடு உண்டாயின் தோழிவாயிலாக முயன்று தலைவன் கூடுவன். ஆகவே, முதல்முறை கண்டபோதே இயற்கைப் புணர்ச்சி நடைபெறும் என்ற நியதியில்லை. இவ்வாறன்றி, ஒவ்வொன்று இடையிட்டும் கூட்டம் நடைபெறலாம். இது மற்றொரு வகை,

இனி, ஒரு கூட்டமும் நிகழாமலே, இருவரும் எதிர்ப்பட்ட காலத்து உண்டான வேட்கை தணியாமல் நின்று மணஞ் செய்த பின்னர்க் கூடுதலும் உண்டு. இவ்வாற்றாற் களவொழுக்கம் மூன்று வகைப்படும் என்பர். (தொல். பொரு. களவி. சூ-1. இளம்பூ-உரை)

இனி, கற்பாவது, குலம் முதலியவற்றால் ஒத்தவனாகிய தலைவனுக்குத் தலைவியின் பெற்றோர் வதுவைச் சடங்குகள் நடத்தி அவளைக் கொடுப்ப அவன் கொள்ளுதல். செய்தவொன்றைச் செய்யவில்லையென்று கூறுதலும் தொடக்கத்தில் அன்பினால் மேற்கொண்ட ஒழுக்கத்திலிருந்து தவறுதலும் உலகியலிற் காணப்பட்டமையால், மக்கள் வாழ்க்கை மாசடையாதிருத்தற் பொருட்டுப் பெரியவர்கள் கரணங்களை (சடங்குகளை) வகுத்தனர். களவொழுக்கம் நடத்தி உடன்போக்கை மேற்கொண்ட தலைமக்கள், தாம் சென்றிருந்த வேற்றிடத்திலே மணஞ்செய்து கொள்ளுதலும் அல்லது திரும்பி வந்தபின் தலைவன் இல்லத்திலாவது தலைவியில்லத்திலாவது மணஞ் செய்து கொண்டு கற்பொழுக்கத்தை நடத்துதலும் உண்டு. ஆகவே, மணம் எவ்விடத்து நடைபெறினும் மணச்சடங்குகள் நிகழவேண்டும். முன்பே காதல் கொண்ட இருவர் பின்பு மணந்து கொள்ளுதல் களவின் வழிவந்த கற்பென்றும், மணஞ் செய்யப் பெற்றபின் காதல் வாழ்க்கை மேற்கொள்ளுதல் களவின் வழிவாராக் கற்பென்றுங் கூறப்படும்.

இக்கற்புக் காலத்தில் ஊடியும் கூடியும் இன்பம் நுகர்தலும், விருந்தோம்பல் முதலிய அறஞ் செய்தலும், கல்வி பகை தூது காவல் பொருள் பரத்தை என்னும் இவைபற்றிப் பிரிதலும் நிகழும். மேலும், முதல் மனைவியிருக்கும்போதே தலைவன் மற்றொருத்தியை மணஞ்செய்து கொள்ளுதல் உண்டு. அல்லாமலும், காமக்கிழத்தி காதற்பரத்தை சேரிப்பரத்தை என்னும் பல மாதருடைய தொடர்பும் தலைவர்கள் பெற்றிருப்பர். ஆடவர் நிலை எவ்வாறாயினும், குலமகள் ஒருத்தி, ஒருவனையன்றி மற்றொருவனைக் காதலித்தாள் என்னும் செய்தி அகப்பொருளில் யாண்டும் கூறப்படுதல் இல்லை.

இவ்வாறு, களவின் வழிவந்தும், களவின் வழிவாராமலும், கற்பொழுக்கத்தை மேற்கொண்ட கணவன் மனைவி என்பார் இருவரும், மக்களொடு மகிழ்ந்து மனையறங் காத்து மிக்க காமவேட்கை தீர்ந்தபின் சிறந்த நிலையை அடைய முயலவேண்டும். துறவு மேற்கொண்டு வீட்டின்பம் பெற முயல வேண்டும் என இதற்குப் பொருள் கூறுவர் உரையாளர். இதுவே இல்லறத்தின் முடிந்த பயன் என்று அகப்பொருள் நூல்கள் - அறிவிக்கின்றன. இதனால், பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களால் இடர்ப்பட்டு, அத்துன்பங்களினின்றும் விடுதலை பெறும் வழி தெரியாமல் 2.மலும் மக்களை நோக்கி , அவர்கள் இயல்பாக விரும்பும் இன்பத் துறையில் சிறந் ததோர் இன்பம் இதுவெனக் காட்டி, அதனை நுகர்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழச் செய்து அதுவும் நிலை யில்லாததேயென அவர்கள் உணர்ந்தபின், ' என்றும் நிலையானதொரு பேரின்பம் உள்ளது, அதனைப் பெற முயலுங்கள்' எனத் தூண்டுவதே அகப்பொருளின் உட்கோள் என அறியலாம்.

அகப்பொருளைக் கூறும் இலக்கண நூல்களிற் சிறந்தவை தொல்காப்பியம், இறையனார் களவியல், நம்பியகப்பொருள் என்பவை.

அகப்பொருள் விளக்கம் 12-ஆம் நூற்றாண்டின் இறுதியிலே தொண்டை நாட்டிலே புளிங்கு என்னும் ஊரிலே பிறந்தவரான நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்டது. இவருடைய தந்தை உய்யவந்தார், சைனர்; குலசேகர பாண்டியன் காலத்தவர். இந்நூல் தொல்காப்பியம், பன்னிருபடலம் என்னும் நூல்களைப் பின்பற்றி எழுதப்பெற்ற சிறந்த அகப் பொருளிலக்கண நூல், இதற்கு இலக்கியமாக விளங்குவது தஞ்சைவாணன் கோவை.

அகம் (Ego) என்பதை அறிவதற்கும் விளக்குவதற்கும் பண்டைக்காலமுதல் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அனுபவத்துக்குக் களனாகவுள்ள தனிப்பட்ட அருவமான பொருள் ஒன்றைக் குறிப்பதற்கு ஆன்மா, அகம், தான் என்னும் சொற்களைத் தத்துவ சாஸ்திரிகள் வழங்கவந்துளர். இந்தியாவில் பண்டைக் காலத்திலிருந்த சாருவாகர்கள் மனமானது நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களாலாய ஒரு சிறப்பான சேர்க்கைப் பொருள் என்றும், ஆன்மா என்று உடம்புக்குப் புறம்பாக எதுவுமில்லை என்றும் சொன்னார்கள். அதன்பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த புத்தர், எதுவும் நிலையற்றது, நித்தியமில்லாதது என்று போதித்தார். யான பௌத்த சமயவகை மனமும் ஆன்மாவும் கருத்துத் தொடரே என்று கூறிற்று. ஆன்மா என்று ஒன்றில்லை என்றும், மனம் என்பது வேறு வேறான நுகர்ச்சிக் கூட்டமே என்றும் ஹியூம் என்னும் பிரிட்டிஷ் தத்துவ சாஸ்திரி 1740-இல் எழுதினார். ஆகவே ஆன்மா என்று ஒன்று தனியாக இருப்பதாகத் தத்துவ சாஸ்திரிகளுள் ஒரு சிலரும், இல்லாததாக ஒரு சிலரும் பண்டைக் காலமுதலே கூறிவந்துளர்.

ஆன்மாவின் தத்துவ விளக்கத்தை விட்டுவிட்டு உளவியல் விள்க்கத்தை முதன் முதலாகக் கூறியவர் 1781-இலிருந்த கான்ட் என்னும் ஜெர்மன் தத்துவ சாஸ்திரியாவார். அவர் புலனுடன் தொடர்புற்ற அகம் (Empirical Ego) என்றும், புலனுடன் தொடர்பில்லா அகம் (Pure Ego) என்றும் வேறுபடுத்திக் கூறினார். அதாவது நான் என்பது வேறு, என்னை என்பது வேறு என்றும், அறிபவனும், அடைபவனுமான அகம் வேறு; அறியப்படுவதும் அடையப்படுவதுமான அகம் வேறு என்றும் கூறினார்.

வில்லியம் ஜேம்ஸ் 1890-ல் உளவியல் முறையில் ஆளுமை (Personality) விளக்கம் செய்ய வழி-