பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆளுமை

462

ஆளுமை

இவை பொதுவாக அவனது மூதாதையர், பிறப்பு, வளர்ப்பு. வீட்டின் சூழ்நிலை, பொருளாதாரநிலை, பெற்றோர்கள், நண்பர்கள், உடல்நோய்,பாலைப் (Sex) பற்றி அனுபவம், படிப்பு, தொழில், நுண்ணறிவு முதலியவைகளைப் பற்றியனவாகும். இந்த முறை பெரும்பாலும் மனக்கோளாற்று மருத்துவர்களாலும்(Psychiatrisr), உளப்பகுப்பியலாராலும் (Psychoanalysts) பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலத்தில் குற்றவாளிகளை ஆராய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மதிப்பீட்டு முறை : ஒருவனது குணத்தையோ இயல்புகளையோ பற்றி விவரிக்கும்போது அவன் சுறுசுறுப்பு வாய்ந்தவன், அச்ச இயல்பு உடையவன் என்று கூறுவதைவிட, சுறுசுறுப்பு இயல்பு 50 விகிதம், அச்ச இயல்பு 36 சதவிகிதம் என்று கூறுவது சிறந்தது அல்லவா? இங்ஙனம் அளவிட்டுக் கூறுவது ஒருவனது ஆளுமையில் எந்த இயல்பு முக்கியமானது என்று அறிவதற்கும், அவனை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து வேற்றுமை அளவை அறிவதற்கும் பயன்படும். இவ்வாறு அளவிடுவதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சதவிகிதத்தில் ஏறக்குறைய ஒற்றுமைப்பட்டால் அளவின் மதிப்பு இன்னும் அதிகமான பயன் தருவதாகிறது. மதிப்பீட்டு முறை ஒருவனது இபல்புகளையோ நடத்தையையோ, போக்கையோ ஒரு குறித்த திட்டத்தின்படி குறிப்பதாகும். சாதாரணமாக உளவியலார் பயன்படுத்துவது அளவை (Scale) முறை. அந்த அளவை பூச்சியத்திலிருந்து மூன்றுவரையோ அல்லது ஐந்துவரையோ இருக்கும். ஒருவனது கோபத் தன்மையை அளவிடும்போது 0 என்று குறித்தால் கோபமின்மையையும், 3 என்று குறித்தால் சாதாரண கோபத்தையும், 5 என்று குறித்தால் அதிக கோபத்தையும் குறிக்கும்.

மதிப்பீட்டு முறை தானாக மதிப்பிடும் முறை (Self- Rating) என்றும், பிறர் மதிப்பிடும் முறை என்றும் இருவகைப்படும். 1. மதிப்பிடப்படுவோரின் உருவத்தின் காரணமாகவோ, 2. அல்லது மதிப்பிடும் இயல்புகளைத்தவிர அவருடைய வேறு இயல்புகளையும் அறிந்திருப்பதன் காரணமாகவோ, 3. அல்லது ஒரு இயல்பின் நல்ல மதிப்பை மற்றொரு இயல்பினிடமும் எதிர்பார்ப்பதன் காரணமாகவோ தவறுகள் ஏற்படுவதுண்டு. சான்றாக, ஒருவன் அறிவாளியாக இருப்பதைக் கொண்டு, அவனிடம் உண்மையையும் விடாமுயற்சியையும் எதிர்பார்ப்பதோ அல்லது உண்மையும் விடாமுயற்சியும் உடையவர்களிடம் உயர்ந்த நுண்ணறிவை எதிர்பார்ப்பதோ தவறாகும். இதன் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மதிப்பிடும் எண்ணின் மொத்தத்தைக் கொண்டோ அல்லது சராசரியைக் கொண்டோ தீர்மானிப்பதே சரியான முறையாகும்.

வினா அறிக்கை முறை உளவியலார் சாதாரணமாகப்பயன்படுத்தும் அளுமைச் சோதனையாகும். வினா அறிக்கை முறையில் வினாக்கள் அமைக்கும் வகை மிகவும் முக்கியமாகும். ஒருவரிடம் வினாக்களைத் தந்து, உண்டு அல்லது இல்லை என்று விடை மட்டும் கூறும்படி சொல்லுவார்கள்; அல்லது அவ்வினாக்களுக்குப் பல விடைகளை அளித்துத் தமக்குத் தகுந்ததாகத் தோன்றும் விடையை எழுதும்படியோ அல்லது விடைக்குக் கீழே கோடிடவோ அல்லது விடையைச் சுற்றி வட்டமிடவோ சொல்லுவார்கள்.

ஆளுமையின் பல்வேறு இயல்புகளையும் சோதிக்கப் பல்வேறு வினா அறிக்கை முறைகள் உண்டு. நரம்பு நோய்த் தன்மை அறிய ஒருவித வினாக்கள்; அகமுகத்தர் புறமுகத்தர் (Introvert. Extrovert) தன்மைகளை அறிய ஒருவித வினாக்கள் இருக்கின்றன.

நரம்புநோய் உடையவரைக் கேட்கும் வினாக்கள்: குழந்தையாயிருக்கும்போது மற்றப் பிள்ளைகளோடு விளையாடாமல் தனியாக விளையாட விரும்புவது உண்டா? தெற்றுவாய் எப்போதாவது இருந்தது உண்டா?அபாயமான சந்தர்ப்பங்களில் பிரமித்து நின்றுவிடுவது உண்டா? காரணம் இன்றி மகிழ்வதும் வருந்துவதும் உண்டா?

இவை போன்ற வினாக்களுக்குக் கூறும் விடைகளைக் கொண்டு அவருடைய நரம்புநோய்த் தன்மையைக் கண்டுகொள்ளலாம்.

அகமுகத்தர் புறமுகத்தரைக் கேட்கும் வினாக்கள்: கூட்டத்தில் எழுந்து பேசவிரும்புவது உண்டா? உம் கருத்தைப் பிறர் சம்மதிக்கும்படி செய்வதுண்டா? பிறரிடம் எளிதாக நட்புக் கொள்வதுண்டா? பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுவது உண்டா? தாழ்வு மனக்கோட்டத்தால் அவதியுறுவதுண்டா? எளிதாக உணர்ச்சி வசப்படுவதுண்டா?

இந்த வினாக்களுள் முதல் மூன்று வினாக்களுக்கு உண்டு என்ற விடை புறமுகத் தன்மையையும், பின் மூன்று வினாக்களுக்கு உண்டு என்ற விடை அகமுகத் தன்மையையும் காட்டும்.

உயர்வு-தாழ்வு (Ascendance-Submission) தன்மையைச் சோதிப்பதற்கு ஆல்போர்ட் (Allport) என்பவர் வகுத்த வினாமுறையும் பிரசித்தி வாய்ந்தது. நரம்புநோய்த் தன்மையை அறியும் வினாமுறை முதன் முதல் வுட்வொர்த் (R.S. Woodworth) என்பவரால் தயாரிக்கப்பட்டுப் பிறகு தர்ஸ்ட்டன், ஹைடுபிரடர் (Heidbreder) போன்றவர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அகமுகத்தர் புறமுகத்தர் வினாமுறையைப் பெரிதும் பயன்படுத்தியவர்களுள் நியூமன்-கோஹலஸ்ட் (Newman - Kohlstd) முக்கிமயமானவர்கள்.

சொல் - தொடர்பு சோதனை (Word-Associar tion) : இதை முதன் முதலில் வகுத்தவர் பிராய்டு என்பவரேயாயினும் அவர் அதை ஆளுமைச் சோதனையாகப் பயன்படுத்தவில்லை. முதன் முதலில் பயன்படுத்தியவர் யுங் என்பவரே. இந்தச் சோதனை பெரும்பாலும் நனவிலி நிலை (Unconscious) யிலுள்ள மனக்கோட்டங்களை (Complexes) அறியவே பயன் படுத்தப்படுகிறது.

சொல் - தொடர்புச் சோதனையில் 75 முதல் 100 வரை சொற்கள் பயன்படுத்தப்படும். இச்சொற்களுக்கு தூண்டற் சொற்கள் (Stimulus words) என்பது பெயர். இவை பொருள்களையும் (Objects), உணர்ச்சிகளையும் (Feelings), உள்ளக்கிளர்ச்சிகளையும் (Emotions) குறிப்பன. சோதனை செய்யவேண்டியவரை உட்காரவைத்தோ அல்லது படுக்கவைத்தோ, ஒவ்வொரு சொல்லாகச் சொல்லி, அதைக் கேட்டவுடன், எச்சொல் முதலில் மனத்தில் உதிக்கிறதோ அதைச் சொல்லச் செய்யவேண்டும். தூண்டற் சொல்லைத் தொடர்ந்து எழும் சொல்லிற்குத் துலங்கற் (Response) சொல் என்று பெயர். துலங்கற்சொற்களை எல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அவை சாதாரண உளநிலையைக் குறிக்கும் சொற்களா அல்லது பிறழ்வான உளநிலையைக் குறிக்கும் சொற்களா என்று பாகுபடுத்த வேண்டும். சான்றாக, நாற்காலி என்ற தூண்டற் சொல்லுக்கு மேசை என்ற துலங்கற்சொல் சாதாரணமானது. ஆனால் கடல், பூதம், எருமை போன்ற துலங்கற் சொற்கள் எழுமானால் அது மனக்கோட்டத்தைக் குறிக்கும். இந்தச் சோதனையில் துலங்கற் சொற்களைப்போலவே துலங்கற் சொற்களைக் கூறுவதற்கு ஏற்படும் காலமும் முக்கியமானதாகும். மேலும்