பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்ப்பேஷியா

494

ஆஸ்லோ


ஆஸ்ப்பேஷியா (கி. மு. 470-கி. மு. 410) பழங்காலக் கிரேக்க ராஜதந்திரியான பெரிக்ளீஸ் என்பாரின் காமக் கிழத்தி. அழகும் அறிவும் மிக்க இவள் பெரிக்ளீஸின் நிருவாகத்தில் கலந்துகொண்டாள். அக்காலத்தில் நேர்ந்த சில போர்களுக்கு இவள் காரணமாக இருந்தாள் என்று கருதுகிறார்கள்.


ஆஸ்பர்ன், ஹென்ரி, பேர்பீல்டு (1857-1935) அமெரிக்கத் தொல்லுயிர் விஞ்ஞானி. விலங்கியல் ஆராய்ச்சிப் பேராசிரியராக இருந்தார். பரிணாம்வாதம் பற்றிப் பல ஆராய்ச்சி நூல்கள் எழுதியிருக்கின்றார். கிரேக்கர் முதல் டார்வின்வரை, பாலூட்டிகளின் காலம், ஹக்ஸ்லியும் கல்வியும், பழங் கற்கால மனிதர், உயிரின் தோற்றமும் பரிணாமமும் என்பவை இவர் எழுதின நூல்கள். இவையெல்லாம் ஆங்கில மொழியின. இவர் அமெரிக்க இயற்கை விஞ்ஞானப் பொருட்காட்சிச் சாலைக்கு இருபத்தைந்து ஆண்டுகள் தலைவராக இருந்தார். இவரது ஆட்சியிலே அது உலகத்திலுள்ள மிகப் பெரிய பொருட்காட்சிச் சாலைகளில் ஒன்றாக வளர்ந்தது. அங்கு இவர் சேர்த்து வைத்திருக்கும் முதுகெலும்புப் பிராணிகளின் பாசில் தொகுதி மிகச்சிறந்தது.


ஆஸ்பொடெல் (Asphodel) லில்லி குடும்பத்தைக் சேர்ந்த பூ. இந்தியாவில் இது உண்டு. உரமான செடி. இதில் தண்டு வளர்வதில்லை. பூமியின் கீழ் வேர் தடித்து இருக்கும். இலைகள் மெல்லியவையாகக் குறுகி நீண்டிருக்கும். கொத்தாக வளரும். பூக்கள் எக்காளம் போல் வடிவுள்ளவை. நீண்ட பூங்கொத்துக்கள் உண்டு. பூக்கள் பொதுவாக மஞ்சளான நிறமுள்ளவை. இதை இறத்தல், இடுகாடு முதலியவற்றோடு சம்பந்தப்படுத்துவது கிரேக்கக் கவி மரபு. அமரில்லிடேசீ குடும்பத்தைச் சேர்ந்தது. நார்சிஸ்ஸஸ் என்னும் டாபொடில் செடியும் ஆஸ்பொடல் எனப்படும்.


ஆஸ்மியம் : பார்க்க: பிளாட்டின உலோகங்கள்.


ஆஸ்லோ நார்வேயின் தலைநகரம்; புதுமுறையில் கட்டப்பெற்ற கடற்கரை நகரம். நார்வே நகரங்களில் மிகப் பெரியது. 1624-ல் IV-ம் கிறிஸ்டியன் என்னும் அரசனால் புதுப்பிக்கப்பட்டது. 1925 வரை கிறிஸ்டியானியா என்று வழங்கி வந்தது. இப்போது நார்வே மக்கள் தங்கள் மொழிச் சொல்லாகிய ஆஸ்லோ என்னும் பெயரை அதற்கிட்டு வழங்குகின்றனர். நார்வேயிலுள்ள பழைய பல்கலைக் கழகம் இங்குள்ளது ; அதற்குப் பிரெடரிஷானாப் பல்கலைக் கழகம் என்று பெயர். இந்நகரம் 1940-1945 வரை ஜெர்மன் ஆதிக்கத்திலிருந்து இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுதலையடைந்தது. மக்: 4,17,238 (1946). கே. ஆர்.