பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து

502

இங்கிலாந்து


1846லிருந்து இங்கிலாந்தில் தானிய வரி அகற்றப்பட்டதாலும், அமெரிக்காவிலிருந்து வரும் தானியத்திற்குக் கப்பல் கட்டணங்கள் குறைவாக இருந்ததாலும், இங்கிலாந்தில் வெளிநாட்டுத் தானிய இறக்குமதி அதிகரித்தது. விவசாயி அதிக நஷ்டத்திற்கு ஆளானான். இக்காலத்தில் விவசாயி மிகுந்த தைரியத்தோடு தானிய உற்பத்தியிலிருந்து, ஆடு மாடு மேய்ப்பதிலும், அவைகளிலிருந்து மாமிசம், பால் முதலிய மிருகச் சத்துக்களை உற்பத்திசெய்து விற்பதிலும் கவனம் செலுத்தலானான். 1895-1914 வரையில் அதிக இலாபத்தைக் கொடுத்த பொருளை விவசாயி பயிரிட்டான். முதல் உலக யுத்த காலத்தில் (1914-18) உணவுப் பொருள் இறக்குமதி செய்வது தடைப்பட்டதால் உள்நாட்டிலேயே அதிக தானியம் உற்பத்தி செய்வதில் முனைந்தான். ஆனால் யுத்தத்திற்குப் பிறகு இறக்குமதி அதிகரித்து, விவசாயியின் தானிய உற்பத்தி சிறிது குறைந்தது. 1932லிருந்து அரசாங்கம் கோதுமை உற்பத்திக்குக் கொடுத்த மானியம், உணவு உற்பத்தி குறையாமல் காத்தது.

சிறுபான்மை விவசாயத்திற்கு உதவியளித்தல் : 1892லும், 1908லும் இரண்டு சிறு பண்ணைச் சட்டங்கள் (The Small Holdings Act) இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தன. இச்சட்டத்தின்படி ஒவ்வொரு கௌன்டி சபையும் (County Council) நிலங்களை வாங்கிச் சிறுபான்மை விவசாயிகளுக்கு விற்கவோ, குத்தகைக்கு விடவோ அனுமதிக்கப்பட்டது. முதல் சட்டம் அவ்வளவு அதிகமாகப் பயனளிக்காது போயினும், 1908ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் 18.000 புதிய சிறிய நிலக்கிழார்களை உண்டாக்கியது. முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு திரும்பி வரும் போர்வீரர்களுக்கு நிலங்கள் கொடுப்பதற்காக 1926ஆம் ஆண்டு புதியதொரு சிறு பண்ணைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினால் சிறிய பண்ணைகள் அதிகரிக்கவில்லை. 1919-1930-ல் சிறிய பண்ணைகள் குறைந்தன. இதிலிருந்து இங்கிலாந்தின் சிறு பண்ணை இயக்கம் அதிக ஆதரவு பெற்றிருக்கவில்லை என்றும், பெரும் பண்ணைகளே அதிக ஆதரவு பெற்றுள்ளன என்றும் திண்ணமாகக் கூறலாம்.

காடுகளைப் பெருக்கவும், விவசாய ஆராய்ச்சி செய்யவும், நாட்டுக் கைத்தொழில்களை வளர்க்கவும், போக்குவரவுச் சாதனங்களைப் பெருக்கவும் மானியம் கொடுப்பதற்காக 1909-ல் ஒரு நிதி ண்டாக்கப்பட்டது. 1914-ல் இங்கிலாந்து விவசாயத்துறையில் அனுபவம் உள்ள ஆலோசனையாளரின்கீழ் 12 கௌன்டிகளாகப் பிரிக்கப்பட்டது. விவசாயக் கல்வியை நாட்டில் பரப்புவதற்காக அரசாங்கம் அதிகமாக முயன்றது.

1947-ல் இயற்றப்பட்ட விவசாயச் சட்டத்தின் முக்கியமான கொள்கை நாட்டின் நன்மையைப் பாதிக்காமல் தேசத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எல்லாம் உற்பத்தி செய்ய வேண்டுமென்பதாகும். கால்நடைகளிலிருந்து கிடைக்கக்கூடிய உணவுப் பொருள்களை அபிவிருத்தி செய்வது மிகவும் முக்கியமென்று கூறப்பட்டது. 1948-ல் நடத்தப்பட்ட பொருளாதாரக் கணிப்பின்படி (Economic Survey), 1951-ல் இங்கிலாந்தின் விவசாயப் பொருள் உற்பத்தி 20% 1946-47-ல் உற்பத்தியைவிட அதிகரிக்க வேண்டுமென்பதாம். இது 1936-39 உற்பத்தியைவிட 50% அதிகமாக இருக்கும்.

வர்த்தகக் கொள்கைகள் : 16, 17ஆம் நூற்றாண்டுகளில் தலைசிறந்து விளங்கிய வாணிப முறை எவ்வாறு பல அடிப்படையான தவறுகளை உடையதாக இருந்தது என்பது விளங்கிற்று. டேவிட் ஹியூம், ஆடம் ஸ்மித் என்பவர்கள் இக்கொள்கை உபயோகமற்றது என்று எடுத்துரைத்தார்கள்.

1736-ல் இளைய பிட் (Younger Pitt) பிரான்ஸோடு செய்த வர்த்தக உடன்படிக்கையினால் இங்கிலாந்திலிருந்து கம்பளம், இரும்புச் சாமான்கள் முதலியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரான்ஸிலிருந்து பழ ரசமும், விவசாயப் பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன. 1823-27-ல், பிரிட்டிஷ் வர்த்தக இலாகாவின் தலைவர் ஹஸ்கிசன் கடல் வாணிபச் சட்டத்தைத் திருத்திப் பல வியாபாரக் கட்டுப்பாடுகளை அகற்றினார். பல பொருள்களின் இறக்குமதி வரியைக் குறைத்தார். 1841-ல் டோரிக் கட்சியைச் சார்ந்த பீல் மந்திரிசபையை அமைத்ததும், 750 பொருள்களின் இறக்குமதி வரியை அகற்றினார்.

1815-ல் ஏற்பட்ட தானியச் சட்டத்தினால் உள்நாட்டுக் கோதுமையின் விலை குறைவாக இருக்கும்போது அதிக வரியும், அதிகமாக இருக்கும்போது குறைந்த வரியுமாகப் பல விகிதத்தில் வரி விதிக்கப்பட்டு, விலை உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த அதிக விலையினால் தொழிலாளிகளும், குத்தகைக்குப் பயிரிடும் குடியானவர்களும் பல துன்பத்திற்காளானார்கள்.

1839-ல் தானிய வரி எதிர்ப்புச் சங்கம் நிறுவப்பட்டது. காப்டன் (Cobden) பிரைட் (Bright) என்ற இருவர் தானிய வரி அகற்றப்பட்டு, நாட்டின் வர்த்தகம் விரிவடைய வேண்டுமென்று பெரும் பிரசாரங்கள் செய்துவந்தனர். 1845-ல் ஏற்பட்ட கோதுமைப் பஞ்சத்தாலும், அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைக்கிழங்குப் பஞ்சத்தாலும், மக்கள் பெருந்துன்பதிற்கு ஆளானார்கள். 1846-ல் பீல் (Peel) பார்லிமென்டில் நிறைவேற்றிய சட்டத்தினால் 1849 முதல் தானிய வரி அகற்றப்பட்டது. வியாபாரக் கட்டுப்பாடுகளை அகற்ற, 1815லிருந்தே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1846-ல் இயற்றப்பட்ட தானியவரி நீக்கம் அந்தக் கொள்கைக்குச் சிகரம் வைத்ததுபோல் அமைந்தது.

தடையிலா வாணிபம் (Free trade) : தானியச் சட்டம் அகற்றப்பட்ட பிறகு மற்ற இறக்குமதிச் சட்டங்களும் சிறிது சிறிதாக அகற்றப்பட்டன. 1853லிருந்து சுமார் 70 ஆண்டுகள் இங்கிலாந்து தீவிர நம்பிக்கையுடன் தடையிலா வாணிப முறையைக் கையாண்டு வந்தது.

காப்புவரிக் கொள்கையின் மலர்ச்சி: 1903-ல், ஜோசப் சேம்பர்லேன் பிரிட்டிஷ் தொழில்களுக்குக் காப்புவரிகளின் அவசியத்தை எடுத்துரைக்க ஒரு பிரசாரம் நடத்தினார். ஆனால் பொதுமக்களின் மனம் காப்பு வரிகளில் ஈடுபடவில்லை. முதல் உலக யுத்த காலத்தில் இறக்குமதியாகும் கடிகாரம், மோட்டார்கள், மற்ற ஆடம்பர சாமான்களுக்கு 33% மெக் கன்னா வரிகள் (Mc Kenna Duties) விதிக்கப்பட்டன. இவை கப்பலில் உள்ள இடத்தைச் சிக்கனம் செய்ய ஏற்பட்டவையாகும். ஆனால் யுத்தம் முடிந்த பிறகும் இந்த வரிகள் நீக்கப்படவில்லை. 1921-ல் இயற்றப்பட்ட தொழில் பாதுகாப்புச் சட்டம் (Safeguarding Industries Act) பல ஆதாரக் கைத்தொழில்களுக்குக் காப்புவரி விதித்தது. 1925-ல் மேலும் பல காப்புவரிகள் விதிக்கப்பட்டன.

வியாபாரத்தில் பாதகமான நிலை ஏற்பட்டு இருந்ததால், 1932-ல் பாதுகாப்புச் சட்டம் ஒன்று இயற்றி, 10% இறக்குமதி வரி எல்லாப் பொருள்களின் மீதும் விதிக்கப்பட்டது. பிறகு அதை 20% ஆக உயர்த்தினார்கள். இறக்குமதி வரி விதிப்பதற்கு ஆலோசனை