பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசபெல்லா

506

இசை

விட்டன. இங்கிலாந்துக்கு அருகிலுள்ள வைட்தீவும், பிரான்ஸுக்கு அருகிலுள்ள கால்வாய்த் தீவுகளும் மிக முக்கியமானவை. இக் கால்வாய் வழியாக வியாபாரக் கப்பல்கள் ஸ்காண்டினேவியாவுக்கும் ஜெர்மனிக்கும் செல்லுகின்றன. பலர் இதன் குறுக்கே நீந்திக்கடக்கும் போட்டியில் வெற்றி பெற்றனர். இங்கிலாந்துக் கரையில் டோவரும் பிரான்ஸுக் கரையில் கலேயும் ஒன்றுக்கொன்று மிக அருகிலுள்ள முக்கியமான துறைமுகங்கள்.


இசபெல்லா (1451-1504) ஸ்பெயினிலுள்ள காஸ்டீல் பிரிவின் அரசி; காஸ்டீல் அரசனாயிருந்த II-ம் ஜானின் மகள்; அரகான் பிரிவின் அரசனான பெர்டினாண்டின் மனைவி. இவள் காஸ்டீலைத் தானே சுதந்திரமாகவும் மற்றப் பிரதேசங்களைத் தன் கணவனோடு கூட்டாகவும் ஆண்டுவந்தாள். இவள் கொலம்பஸை ஆதரித்தவள். பார்க்க: பெர்டினாண்டு 11. மு. ஆ.


இசாமி 1-ம் அலாவுதீன் பாமனியால் ஆதரிக்கப்பெற்று வந்த ஒரு முகம்மதிய வரலாற்றாசிரியர். இவர் 1349-ல் ஒரு வரலாற்று நூல் இயற்றினார். அந்நூல்முகம்மது பின் துக்ளக்கின் அரசியலைப்பற்றிக் குறைபாடாகக் கூறுகிறது. தே. வெ. ம.


இசை இன்னது என்று சொல்ல முயல்வது விளக்க முடியாததொன்றை விளக்க முயல்வதாகும். இசையே ஒரு தனி மொழி. இது உலகமெங்கும் எல்லாத் துறைகளிலும் புகுந்து வேலை செய்திருப்பதுபோல வேறொன்றும் செய்ததில்லை. இந்தியாவில் தோன்றிய எல்லாக் குருமார்களையும் ஞானிகளையும் இயக்கி வைத்தது இசையே. அவ்வாறே உலகின் மற்றெல்லா நாடுகளிலும் செய்திருக்கின்றது. உலகில் எழுந்த காவியங்கள், கவிதைகள் ஆகிய யாவும் இசையின் தூண்டுதலாலேயே பிறந்தவை. வடமொழி ஆதிகாவியமான இராமாயணத்தில் வால்மீகி முனிவர் ஸ்ரீராமசந்திரன் வரலாற்றைச் சுவைகள் எல்லாம் ததும்பவும், வேதக் கருத்துக்கள் யாவும் பொருந்தவும் அமைத்தது அழகிய கீத வடிவத்திலேதான். இசை மக்களின் உயிர். அது ஆன்மா தன்னை உலகத்துக்கு வெளியீடும் உயர்ந்த மொழி. கிருஷ்ணன் தன் அழகிய தோற்றத்தாலேயே உலகை வசீகரிக்கும் ஆற்றல் படைத்திருந்தான். இருந்தும், அவன் யாவருடைய உள்ளத்தையும் உருக்கத் தன் புல்லாங்குழலைக் கையாண்டான். இசையொன்றே இவ்வாறு கேட்பவர் உள்ளத்தை உருக்கவல்லது. இதனால் அவன் மனிதர்களை மட்டுமல்லாமல் இயற்கை முழுமையுமே தன் பால் ஈர்த்து வந்தான்.

ஆர்பியஸின் (Orpheus) யாழுக்குச் சிங்கங்கள் வசப்பட்டன. ஆனாய நாயனாருடைய குழலிசை வெளிப்பட்டபோது நிற்பனவும் சரிப்பனவும் அதன் வயப்பட்டு அசைவற்றுக் கிடந்தன. இசையின் வலிமையைக் குறித்து இப்படிப்பட்ட கதைகள் எல்லா நாடுகளிலும் வழங்குகின்றன.

இசை ஒரு சக்தி. மகா முனிவராகிய பரதர் நாட்டியத்தின் சாரம் இசை என்று கூறுகிறார். இசையில்லாத நாட்டியம் வெறும் உடற்பயிற்சி வேலையாகும். இந்தியத் தத்துவ ஞானிகளும், கவிஞர்களும், மந்திரவாதிகளும், ஆசாரியர்களும், குருமார்களும், சங்கீதத்தைச் சிறந்த கருவியாகக் கையாண்டு வந்திருக்கிறார்கள். தேவார திருவாசகங்கள், திவ்வியப் பிரபந்தங்கள் பத்திச் சுவை நிறைந்த இனிய பாடல்கள். தியாகராஜர், முத்துத்தாண்டவர் முதலாயினோர் பாடல்களும் இத்தகைய சங்கீதமே. கபீர் என்ற இஸ்லாமியர் இசையிலே தம் உணர்ச்சிகளை வெளியிட்டார். மீராபாய் கிருஷ்ணபகவானிடம் தான் கொண்ட பிரேமையைப் பாடியே தெரிவித்தாள். மனிதன் தன் உள்ளத்திலே உணரும் ஆழ்ந்த உணர்ச்சிகளைப் பரம்பொருளுக்கு அறிவிக்க இசை ஒன்றினால்தான் இயலும். கவிதைக்கும் இசைக்கும் வேற்றுமையே இல்லை. ஏனெனில் கவிதையானது இசையின் ஒரு சாயையே.

நாட்டியத்தில் வாசிகாபிநயம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. நாட்டியத்தின் பொருளை இசையிற் பாடுவதே அது. ஆகவே நாட்டியம், கவிதை போன்ற பலகலைகளின் விளக்கங்களுக்கு இசையே வேர் என்பது தெளிவாகின்றது. மொழி புகாத இடங்களிலெல்லாம் இசை புகும். இக் காரணம் பற்றி இசையென்பது ஆன்மாவின் பேச்சு எனப்படுகிறது.

இந்தியா இவ்வுண்மையை அறிந்து, படைப்பின் உயர்பொருளையும் தாழ்பொருளையும் ஒன்றுபடுத்தியிருக்கிறது. அன்றியும், எந்த வேலையைச் செய்வதற்கும் இசை ஆச்சரியமான அமிருதமாக இருக்கிறது. குடியானவன் வயலை உழும்போதும். கிணற்றிலிருந்து நீர் இறைக்கும்போதும், பெருஞ்சுமைகளைச் சுமக்கும்போதும் பாடுகிறான். இசையால் ஊக்கப்படாத தொழில் துறை ஒன்றுமேயில்லை. ஒரு பக்கத்தில் அது ஊக்குகிறது; மற்றொரு பக்கத்தில் நோயாளியையும்குழந்தையையும் அது உறங்கச் செய்கிறது. இசையின் ஊக்க சக்தியைப் போர்க்களங்களிலும் காண்கிறோம். இம்மாதிரிச் செயல்களை இந்தியாவில் மட்டுமன்றி உலகெங்கும் காணலாம்.

இசை ஆன்மாவோடு இயைந்து நம் சுவை உணர்ச்சிகளை நன்றாக எழுப்பி விடுகிறது. இவ்வாறு உணர்ச்சிகளை எழுப்புவதால்தான் உள்ளம் ஊக்கமும் அறிவும் பெற்று உடலுக்கும் சுறுசுறுப்பை ஊட்டுகிறது.

இசையே ஸ்ரீ தியாகராஜருடைய உயர்ந்த பக்தி புலப்படுவதற்குக் கருவியாயிற்று. வீடு அடைய இசையே எளியதும், மகிழ்ச்சியுள்ளதும், பயனுள்ளதுமான உயர்ந்த வழி என்று அவர் பாடுகிறார். இந்தியாவிலும் மேனாடுகளிலும் எல்லா இசைவாணர்களும் பிற கலைஞர்களும் இசையே மானிடப் பொதுமொழி, ஒவ்வோர் உள்ளத்தையும் உருக்கும் மொழி என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்திய இசையானது உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளைப்பற்றிய அறிவின்மீது எழுப்பப்பட்டுள்ளது. அவ்வுணர்ச்சிகளை அறிந்தால் மட்டுமே இசையின் வழியாய் மானிடவர்க்கத்திற்கு உதவிபுரிய முடியும். இந்தியா உலகுக்குக் கொடுக்கும் பெருங்கொடை இந்த ஆன்மிக நோக்கே; இந்த நோக்குக்கும் படைப்பின் பல தோற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவற்றால் இசை, நாட்டியம், இவற்றைப்பற்றிய மூலஅறிவு என்பது மானிட உணர்ச்சிக் கலையாக அமைகிறது. இக்காரணத்தினால்தான் இந்திய இசையின் உயிராக இராகம் விளங்குவதும் ஆகும். மேல்நாடுகள் ஒத்திசையை (Harmony) நாடுகின்றன. இந்தியா இன்னிசையை (Melody) முக்கியமாகக் கருதுகிறது. சிலர் இன்னிசையானது சுவையற்றதாகவும் விருப்பப்படி மாற்ற முடியாததாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள். மக்களின் உயிர் கலையாதலால், இந்திய இசை இந்திய ஞானத்தின் ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்திய ஞானம் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டது; ஆகவே தனி மனிதனது விளக்கமாயுள்ள இன்னிசை இங்கு மிக மேன்மையாக வளர்க்கப்பட்டுள்ளது. தனிமனிதன் கொள்ளும் ஆர்வத்தைப் புலப்படுத்துவது இன்-