பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

610

இந்தியா

கம் ஆன்மாவின் நல்ல குணங்களை வளர்த்துத் தீயவைகளைத் தாழ்த்துவதேயாம். அஹிம்சையிலும் துறவிலும் மிக ஈடுபட்ட இச் சமணர்கள் பௌத்தர்களைப் பேராசையிலும் போகத்திலும் ஈடுபட்டவர்கள் என்று கருதி வந்தார்கள். கோசாலனுடைய மதம் மகாவீரருடைய மதத்தினின்று மிகுதியாக வேறுபட்டதில்லை. அதனாலேயே அவர்களுக்குள் விவாதம் அதிகரித்தது. சிராவஸ்தியில் ஒரு வாதத்தில் கோசாலன் பெருந்தோல்வியுற்று ஏழு நாளில் உயிர் துறந்தான். அதற்குப் பின் மகாவீரர் 16 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் காலத்திற்குப் பிறகு சமண சமயத்தின் வரலாற்றை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள இடமில்லை. மகாவீரருடைய சீடர்களில் சுதர்மன் என்பவன் மட்டுமே அவருக்குப் பின் இருபது ஆண்டுகள் சமணருக்குத் தலைவனாக இருந்தான். மௌரிய அரசன் சந்திரகுப்தன் காலத்தில் ஏற்பட்ட பன்னிரண்டு ஆண்டுப்பஞ்சத்தால் பத்திரபாகு என்னும் சமணமுனிவரும், சந்திர குப்தன் உட்பட அவருடைய சிஷ்யர்கள் பலரும் கருநாடக தேசத்திற்குச் சென்றனர் என்றும், அங்கே சந்திரகுப்தன் இறந்தான் என்றும் ஓர் ஐதிகம் உண்டு.

மகாவீரரைப்போலப் புத்தரும் க்ஷத்திரிய குலத்தவரே. அவர் தந்தை கபிலவாஸ்துவிலிருந்த சாக்கிய அரசர் சுத்தோதனர். புத்தர் பிறந்த இடம் அவ்வூருக்கருகிலுள்ள லும்பினித் தோட்டம் என்பதை அவ்விடத்தில் அசோகரால் நிறுத்தப்பட்ட கல்தூணிலுள்ள ஒரு சாசனத்தால் அறிகிறோம். புத்தர் தமது எண்பதாவது வயதில் குசிநகரம் என்னும் கிராமத்தில், அதாவது இப்போது கோரக்பூர் ஜில்லாவில் காச்ய எனப்படும் ஊரில் உயிர்துறந்தார். அதற்கு முன்பே அவருடைய சீடர்கள் ஒரு முதியோர் சங்கமாக ஏற்பட்டு, மக்களுக்கு அவரவர்கள் மொழியிலேயே கதைகள் மூலமாகவும், வேறுவிதமாகவும் புத்தர் உபதேசித்த தருமங்களைக் கற்பிக்கும் முறைகளில் கைதேர்ந்து விட்டார்கள். நாளடைவில் அரசரும் வணிகரும் சங்கத்திற்கு ஆங்காங்கே ஏராளமான நிலங்கள், வீடுகள், மலைக்குகைகள் எல்லாம் கொடுத்து உதவினர். சங்கத்தார் பௌத்த மதத்தை இந்தியா முழுவது மட்டுமன்றி இலங்கை, பர்மா, சீயம், திபெத்து, சீனா, ஜப்பான் முதலிய நாடுகளிலும் பரவச் செய்தனர். புத்தர் இறந்த ஆண்டில் ராஜக்கிருகத்தில் ஒரு சபை கூடிச் சமய நூல்களைச் சேகரித்துத் தொகுத்தது என்று கூறுவர். அதற்கு நூறு ஆண்டிற்குப் பின் மற்றுமொருமுறை வைசாலி நகரத்தில் கூடினதாகவும், அச்சமயத்தில் பௌத்தமதம் பல கிளைகளாகப் பிரிய ஆரம்பித்தது என்றும் கூறுவர்.

புத்தர் காலத்திற்குப் பிறகு மகத நாட்டு வரலாறு தெளிவாக விளங்கவில்லை. அவருக்கு ஐந்து வயது இளையவனான பிம்பிசாரன் பதினைந்தாவது வயதில் அதாவது கி.மு 543-ல் பட்டத்திற்கு வந்தான். அவன் மகன் அஜாதசத்துரு அவனைக் கொன்று கி.மு. 491-ல் அரசுபுரியத் தொடங்கினான் என்பதை முன் அறிந்தோம். அஜாதசத்துருவுக்குப் பின் ஆண்ட அரசர்கள் பின்வருமாறு புராணங்களில் குறிப்பிடப்படுகிறார்கள் : 1. தர்சகன் (25-35 ஆண்டுகள்). 2. உதாயி (33 ஆண்டு கள்). 3. நந்திவர்த்தனன் (40-42 ஆண்டுகள்). 4. மகாநந்தி (43 ஆண்டுகள்). 5. மகாபத்மனும் அவனுடைய குமாரர்கள் எண்மரும் சேர்ந்த ஒன்பது நந்தர்கள் (100 ஆண்டுகள்).

இலங்கையில் எழுதப்பட்ட மகாவமிசம் என்னும் வரலாற்று நூலில் வேறு ஒரு பட்டி காணப்படுகிறது. அதில் தர்சகன் பெயரில்லை. ஆனால் வத்ச நாட்டு அரசன் உதயணனுடைய இரண்டாவது ராணியான பத்மாவதியின் சகோதரன் தர்சகன் மகத நாட்டை ஆண்டதைப் பாச கவியினுடைய 'சொப்பன வாசவதத்தம்' என்னும் நாடகத்திலிருந்து அறிகிறோம். தர்சகன் கட்டின பௌத்த சன்னியாசிகள் விடுதியை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கண்டதாகச் சீன யாத்திரிகன் ஹியூன்சாங் கூறுகிறான். ஆயினும் பௌத்தரும் சமணரும் அஜாதசத்துருவின் குமாரன் உதாயியே அவன் பின் ஆண்டான் என்று கூறுகிறார்கள். அவனே பாடலிபுத்திரத்தைப் பெரிதாக்கிக் கட்டினவன். மகத நாடு தனக்குச் சமீபத்திலுள்ள இராச்சியங்களையும் குடியரசுகளையும் தன்வயமாக்கிக் கொண்டு, அவந்தி நாட்டுடன் போருக்குத் தயாரானது. அவந்திநாடு கோசாம்பியை வென்றபோதிலும் மகதத்தை ஆண்ட அரசர்கள் (சிசுநாக வமிசத்தைச் சார்ந்த முதல் மகாபத்மன் முதலியவர்கள்) க்ஷத்திரியர்கள் என்பது புராணங்களின் கூற்று. அவர்களில் கடைசியான மகாநந்திக்குப் பின் ஆண்ட ஒன்பது நந்தர்களும் உலகிற்குத் தனிச் சக்கரவர்த்திகளானதாகப் புராணங்கள் கூறுகின்றன. கோசல நாட்டில் நந்தன் பாசறை ஒன்றிருந்ததாகக் கதாசரித்சாகரத்தில் படிக்கிறோம். கலிங்க அரசனான காரவேலனை வென்றதும் இவனே என்று ஊகிக்கலாம். தட்சிணத்தில் குந்தலநாடுவரை நந்தருடைய ஆட்சி நிலவி இருந்ததாகப் பிற்காலத்துக் கன்னட சாசனங்களால் அறிகிறோம். நந்தர்களில் கடைசியானவன் வரிகள் அதிகம் வாங்கியும், வேறு விதமாகவும் பணம் ஏராளமாகச் சேகரித்து, அதைத் தங்கக்கட்டிகளாக மாற்றிக் கங்கைநீரில் ஒளித்து வைத்திருந்ததால் தன நந்தன் என்று பெயர் பெற்றான். நந்தர்கள் காலத்திலே அளவு கருவிகள் ஏற்பட்டன என்று கூறுவர். நந்தர்களுடைய படை இருபதாயிரம் குதிரைகளும், இரண்டு இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் இரதங்களும். நாலாயிரம் யானைகளும் கொண்டது என்று கிரேக்க ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். அவர்களே கடைசி நந்தன் குணம் கெட்டது என்றும், அவன் தனக்கு முந்தி ஆண்ட அரசனைக் கொன்று அவன் இராணியை மணந்து கொண்ட ஒரு நாவிதன் மகன் என்றும் கூறுகிறார்கள்.

இந்தியாவிற்கும் பாரசீகம், அரேபியா முதலிய மேல் நாடுகளுக்கும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் வியாபாரம் தொன்றுதொட்டு நடந்து வந்தது. எகிப்திலும் பாலஸ்தீனத்திலும் சுமார் கி. மு. 800 முதல் இந்தியாவிலிருந்து பல சரக்குகள் வரவழைக்கப்பட்டன என்று தெரிகிறது. பாபிலோனுக்குச் சில இந்திய வியாபாரிகள் மயிலை முதன்முதலாகக் கொண்டு போனதை ஜாதகக் கதையில் படிக்கிறோம். அகெமானிய அரசர்களால் பாரசீகம் ஒரு சாம்ராச்சியமாக ஆக்கப்பட்ட பிறகு இவ் வியாபாரத் தொடர்பு வலிவடைந்திருக்க வேண்டும். சைரஸ் (கி. மு. 588-530) என்னும் அகெமானிய சக்கரவர்த்தி பாரசீக ஆதிக்கத்தை இந்திய சமுத்திரம் வரைக்கும், இந்துகுஷ் மலை வரைக்கும் நிலை நிறுத்தினதாகக் கிரேக்க நூல்களில் காண்கிறோம். சைரசின் பேரன் முதலாம் டரையஸ் கி. மு. 522 முதல் 488 வரை சிந்து நதிக் கரையிலுள்ள நாடுகளை வென்று தன் இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டான். இந்தியாவிலிருந்து ஆண்டு ஒன்றுக்குப் பத்து இலட்சம் பவுன் மதிப்புள்ள தங்கம் அவனுக்குக் கப்பமாகக் கொடுக்கப்பட்டது என்கிறார் ஹிராடோட்டஸ் என்னும் கிரேக்க ஆசிரியர். டரையஸினுடைய கிரேக்க மாலுமி ஸ்கைலேஸ் என்பவன் சிந்து நதி வழியாக அரபிக் கடலை அடைந்து, அதன் வழியே முப்பது