பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

638

இந்தியா

யைக் கம்பெனிக்கு அளித்தார். அதற்குப் பதிலாகக் கோரா, அலகாபாத் ஜில்லாக்களும் ஆண்டொன்றுக்கு 26 இலட்சம் ரூபாயும் கம்பெனி சக்கரவர்த்திக்கு அளித்தது. அயோத்தி நவாபு 50 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்தபின் தனது நாட்டைத் திரும்பவும் பெற்றான். ஆங்கிலேயர் அதற்குமுன் தென்னிந்தியாவில் அடைந்திருந்த இலாபங்களையும் செய்திருந்த செயல்களையும் சக்கரவர்த்தி உறுதிசெய்தார். இந்த உடன்படிக்ககளால் ஆங்கிலேயரின் பலம் மேலும் வளர்ந்தது. கிளைவ் வெற்றி பெற்ற நிலையில் மிகவும் நிதானத்தோடு நடந்து கொண்டான். ஆட்சி முறையில் பல சீர்திருத்தங்களையும் செய்தான். அவற்றில் இரட்டையாட்சி முறை முக்கியமானதாகும். 1767-ல் அவன் இங்கிலாந்துககுத் திரும்பினான். இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் தாபித்தவன் என அவனை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வாரன் ஹேஸ்டிங்ஸ் (ப. கா. 1772-1785) முதலில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (1773) படி கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தான். தனது கவுன்சில் அங்கத்தினர்களால் மிகவும் துன்புற்றான். முதலாவது மகாராஷ்டிரப் போரில் மகத்ஜி சிந்தியா ஆங்கிலேயர் நண்பனாயினான். வாரன் ஹேஸ்டிங்ஸ் தனது திறமையாலும் ஊக்கத்தாலும் அப்போரில் இங்கிலீஷ் கம்பெனியின் செல்வாக்கை நிலை நிறுத்தினான். நிருவாகத்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்து, இரட்டையாட்சி முறையை ஒழித்து, வங்காள நவாபுக்கு உபகாரச் சம்பளம் கொடுத்து ஒதுக்கிவிட்டு நிருவாகததைத் தானே ஏற்றுக்கொண்டான். காசி மன்னனையும் அயோத்தி நவாபையும் அடிக்கடி பெருநதொகைகள் தருமாறு கட்டாயப்படுத்தினான். அயோத்தி இராணிகளின் செல்வத்தை அவன் பறித்துக் கொண்டதும் காசி அரசனைக் கொடுமையாக நடத்தியதும் அவன்மீது தொடரப்பட்ட வழக்கில் முக்கியமான குற்றங்கள்.

கார்ன்வாலிஸ் பிரபு (ப. கா. 1786-1793) செய்து முடித்த காரியம் சாசுவத நிலவரி ஏற்பாடாகும். இதன்படி வங்காளத்தில் பல பகுதிகளிலும் வரி வசூலிப்பதற்குப் பலர் நியமிக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு உரிய வரியை வசூலித்துத் தங்களுக்கென ஒரு பகுதியை வைத்துக்கொண்டு, மீதியை அரசாங்கத்துக்கு அனுப்பும்படி அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் நிலையான வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்து வந்தது. ஜமீன்தார்கள் என்னும் ஒரு புதிய வகுப்பினர் ஏற்பட்டார்கள்.

வெல்லெஸ்லி பிரபு (ப. கா. 1798-1805) பதவியேற்ற காலத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் நிலை நெருக்கடியாயிருந்தது. உள்நாட்டு மன்னர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை ஒழிக்கத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சுக்காரர் பலர் அவர்கள் ஆதரவைப் பெற்றுச் சேனைகளுக்குத் தக்க பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்கள். வெல்லெஸ்லி நிலையைக் கூர்ந்தறிந்து, தன்னுடைய துணிவான திட்டங்கள் மூலம் அந்நிலையை மாற்றி, ஆங்கிலேயக் கம்பெனியின் அந்தஸ்தை நாட்டில் உயர்த்தினான். படைத்துணை உடன்படிக்கை (Subsidiary alliances) மூலம் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் அவன் சுதேச மன்னர் செலவிலேயே ஆங்கிலேயப் படைகளை அவர்கள் நாடுகளில் வைத்து, அவர்கள் வெளிநாட்டு விவகாரம் முதலியவற்றில் கம்பெனிக்கு அடங்குமாறு செய்துவிட்டான். ஆண்டுதோறும் பணம் கொடுப்பதற்குப் பதிலாகச் சில குறிப்பிட்ட நாடுகளை ஒப்படைக்கும்படி செய்து, அதன்மூலம் இந்தியாவில் ஆங்கில அரசை விரிவாக்கினான். அயோத்தி நவாபு முதலில் தயங்கியபோதிலும், வெல்லெஸ்லி கட்டாயப்படுத்திப் படைத்துணை உடன்படிக்கை ஒன்றை அவனோடு செய்துகொண்டான். அயோத்தி நவாபின் வெளி நாட்டு விவகாரங்கள் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. செழிப்பான ஜில்லாக்கள் அடங்கிய யமுனைக்கும் கங்கைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும் ரோகில்கண்டையும் அவன் கம்பெனிக்குக் கொடுத்துவிட்டான். இதனால் அயோத்தியைச் சுற்றிலும் கம்பெனியின் அரசு ஏற்பட்டது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமைக் கொள்கையை வெல்லெஸ்லியும் மற்றும் பல கவர்னர் ஜெனரல்களும் பின்பற்றியதால், சுதேச மன்னர்களின் ஆட்சி கெட்டு விட்டது. பிற்காலத்தில் பல நாடுகளை டால்ஹௌசி வசப்படுத்தியபோது பொதுமக்கள் அதை வரவேற்றார்கள். படைத்துணை உடன்படிக்கை செய்து கொள்ள மறுத்த ஹோல்கர், சிந்தியா, போன்சலே ஆகிய மூவரும் கம்பெனியோடு போராடத் துவங்கினார்கள். முதலில் போன்சலே, சிந்தியா இருவரும் இரண்டாவது மராட்டியப் போரில் (1803-1805) தோல்வியுற்றுப் படைத் துணை உடன்படிக்கை செய்து கொண்டனர். சூர்ஜி அர்ஜுங்கயான் என்னுமிடத்தில் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி குவாலியரில் ஆங்கிலேயப் படையொன்றை ஏற்றுக்கொண்டு, அதன் செலவுக்காக உத்தரப் பிரதேசத்தில் மேற்கு ஜில்லாக்களையும், டெல்லியைச் சூழ்ந்த பகுதிகளையும், தென்னிந்தியாவில் வேறு சில பகுதிகளையும் சிந்தியா கொடுத்துவிட்டான். இதனால் கம்பெனியின் அரசு மேலும் இந்தியாவில் பரவியது. சிந்தியா கம்பெனியின் தலைமைக்குக் கீழ்ப்படிந்தான். ஹோல்கார் கம்பெனியோடு நிகழ்த்திய போரில் சில வெற்றிகள் பெற்றதால் வெல்லெஸ்லியின் திட்டங்கள் தடைப்பட்டன. வெல்லெஸ்லி மற்றொரு முறையிலும் கம்பெனியின் அதிகாரத்தை வலுப்படுத்தினான். மேஜராகாத சுதேச மன்னர்களின் நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்களுக்கு உபகாரச் சம்பளம் அளித்து, வட இந்தியாவிலும் தென்னாட்டிலும் கம்பெனியின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தினான். அயோத்திக்கருகிலுள்ள பருக்கபாத் என்னும் சிறு நாடும் இவ்வாறு கம்பெனியின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. மேற்கண்ட முறைகளால் வெல்லெஸ்லி பிரெஞ்சுக்காரர்களால் நேரவிருந்த அபாயத்தைத் தவிர்த்துக் கம்பெனியின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்தான்.

ஹேஸ்டிங்ஸ் பிரபுவும் (ப. கா. 1813-1823) வெல்லெஸ்லியின் முறைகளைப் பின்பற்றியே இந்தியாவில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளின் பரப்பை அதிகப்படுத்தினான். அவன் கையாண்ட முறைக்குக் கீழ்ப்பட்ட ஒத்துழைப்பு முறை (Subordinate co-operation)என்று பெயர். இம் முறை வெல்லெஸ்லியின் படைத்துணை உடன்படிக்கை முறையை விடச் சற்றுத் தீவிரமானதாகும். இம் முறையினால் பல இந்திய மன்னர் கம்பெனிக்குக் கீழ்ப்படிந்து தத்தம் தலைநகர்களில் ஆங்கிலப் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்ளவும், தமக்குள் உள்ள சச்சரவுகளைக் கம்பெனியின் தீர்ப்புக்குட்பட்டுத் தீர்த்துக் கொள்ளவும் ஒப்புக் கொண்டனர்.

பிண்டாரிகள் என்ற கொள்ளைக் கூட்டத்தினரை வட இந்தியாவிலும் தக்கணத்திலும் மிகக் குறைந்த காலத்திற்குள் (1817-1818) ஹேஸ்டிங்ஸ் ஆங்கிலேயப் படைகளைக் கொண்டு அழித்துவிட்டான். பிண்டாரி-