பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

651

இந்தியா

மகன் மிருகேசவர்மன் பல்லவருடனும் கங்கருடனும் செய்த போர்களில் வெற்றி பெற்றான். அவன் புலமை வாய்ந்தவன்; யானை, குதிரை முதலியவற்றை நன்றாக வளர்க்கும் திறமை பெற்றவன். பாலாசிகா (ஹால்சி)வில் ஒரு சமணக்கோயில் கட்டித் தன் தகப்பன் பெயரை நிலைநாட்டினவன். சாந்திவர்மனுடைய மகன் ரவிவர்மன் போரில் மடிந்தான்; பல்லவ அரசன் சண்ட தண்டன் விரட்டியடிக்கப்பட்டான். ரவிவர் மன் மகன் ஹரிவர்மன் காலத்தில் (538) சாளுக்கிய அரசன் முதல் புலகேசியால் கதம்ப ஆதிக்கம் குறைந்தது. கதம்ப வமிசத்து இரு கிளையினரும் மறுபடியும் போர் தொடங்கினர்; ΙΙ-ம் கிருஷ்ணவர்மன் வனவாசியின்மீது படையெடுத்து, ஹரிவர்மன் ஆட்சியையும் வமிசத்தில் மூத்த கிளையையும் ஒருங்கே முடியச் செய்தான்.

மேற்கே கதம்ப இராச்சியத்திற்கும் கிழக்கே பல்லவ இராச்சியத்திற்கும் நடுவில் மைசூர் கங்க. அரசருடைய நாடு இருந்தது. இதற்குக் கங்கவாடி என்று பெயர். கங்க வமிசத்தின் மூலபுருஷன் கொங்கணிவர்மன். அவன் காண்வாயனக் கோத்திரத்தவன் , அவனுக்குத் தர்ம மகாராஜன் என்ற பட்டம் உண்டு. அவனுக்குக் காஞ்சிப் பல்லவ அரசர்கள் பாண வமிசத்து அரசை வெல்வதற்காகப் பட்டம் கட்டினார்களென்று பிற் காலச் சாசனங்கள் கூறுகின்றன. பாண இராச்சியம் கங்க நாட்டிற்கு வடகிழக்கிலுள்ளது. கொங்கணி வர்மன் காலம் சுமார் கி. பி. 400. அவன் தலைநகர் கோலார். பிற்காலத்தில் அவன் சந்ததியார் காவேரிக் கரையிலுள்ள தலைக்காட்டைத் தலைநகராக்கிக் கொண்டனர். அவர்களுடைய இலச்சினை யானை. கொங்கணிவர்மனுடைய மகன் முதல் மாதவ மகாராஜன் (கி. பி. 425) நீதி சாஸ்திரத்திலும் காம சாஸ்திரத்திலும் வல்லவன். மாதவன் மகன் ஆரியவர்மன் (450) ஒரு புலவனும் வீரனும் ஆவான். இவனுக்குக் காஞ்சி அரசன் Ι-ம் சிம்மவர்மன் பட்டங்கட்டினதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் இவனுக்கும் இவன் தம்பி கிருஷ்ணவர்மனுக்கும் ஏதோ பகை ஏற்பட்டுப் பல்லவ அரசன் அவர்களைச் சமாதானம் செய்திருக்கலா மென்று எண்ண இடமுண்டு. பிற்காலச் சாசனங்கள் ஆரியவர்மனை ஹரிவர்மன் என்று அழைப்பதோடு, அவன் தலைநகரைத் தலைக்காட்டுக்கு மாற்றினானென் றும் கூறுகின்றன. இவ்விரு சகோதரரும் தங்கள் மக்களுக்களுக்குச் சிம்மவர்மனென்று பெயரிட்டனர். இராச்சியம் இரண்டு பிரிவுகளாக அவர்கள் காலத்தி லும் அவர்கள் மக்கள் காலத்திலும் ஆளப்பட்டு வந் தது. ஆரியவர்மன் மகனுக்கு 11-ம் மாதவன் என்ற பெயரும் உண்டு; அவனுக்குப் பட்டங் கட்டியவன் பல்லவ ஸ்கந்தவர்மன், மாதவன் மகன் அவிநீதன் குழந்தைப் பருவத்திலேயே அரசு பெற்று (கி. பி. 500) நீண்டகாலம் ஆண்டான்.

பாதாமிச் சாளுக்கிய இராச்சியத்தைத் தாபித்தவன் புலகேசி Ι. இப்பெயருக்குப் பெரிய சிங்கம் எனப் பொருள் கொள்ளலாம். இவன் கி. பி. 543-4-ல் பாதாமி ஊரை ஒரு மலையரணாகக் கட்டிக் கதம்பரிட மிருந்து சில நாடுகளைத் தன் வயமாக்கிக் கொண்டான். அவன் மகன் Ι-ம் கீர்த்திவர்மன் (567-98) வனவாசிக் கதம்பருடனும், கொங்கணத்து மௌரியருடனும், மற்றும் நள வமிசத்து அரசருடனும் போர்கள் புரிந்து தன் இராச்சியத்தைப் பெருக்கினான். அவன் மகன் Ι-ம் புலகேசிக்கு வயது வராததால் அதுவரை புலகேசியின் தம்பி மங்கலேசன் அரசாண்டான். மங்கலேசன் காலசூரி அரசன் புத்தராஜனை வென்றான் ; ஆனால் புத்தராஜனுடைய இராச்சியம் (கூர்ஜரம் கான் தேசம், மாளவம்) இப்போரினால் குறைந்து போனதாகத் தெரியவில்லை. ரேவதி துவீபத்தில் ஏற்பட்ட ஒரு சச்சரவை மங்கலேசன் அடக்கினான். ஆனால் ΙΙ-ம் புலகேசிக்கு வயது வந்ததும் இராச்சியத்தை அவனிடம் ஒப்புவிக்காமல் தன் ஆட்சியை நீட்டித்துத் தன் மகனையே அரசனாக்க எண்ணினான். புலகேசி பாதாமியினின்றும் வெளியேறி, ஒரு சேனையைத் திரட்டித் தன் சிற்றப்பனுக்கு எதிராகப் போர் புரிந்து, அவனைப் போர்க்களத்தில் கொன்று வீழ்த்தும்படி நேரிட்டது. பிறகு தானே அரசனானான் (609-10). தனக்கும் சிற்றப்பனுக்கும் ஏற்பட்ட யுத்தத்தினால் சீர்குலைந்திருந்த இராச்சியத்தை நிலைநிறுத்தினான். வனவாசியைத் தாக்கிக் கதம்பர் ஆட்சியை முடித்தான். தென்கன்னட நாட்டு ஆளும் அரசரும் மைசூர் நாட்டுக் கங்கரும் இவனுக்குக் கீழ்ச் சிற்றரசரானார்கள். கங்க துர்வினீதன் மகளை இவன் மணந்தான். அவன் மகனே முதல் விக்கிரமாதித்தன், புலகேசி வடகொங்கணத்து அரசை வென்றான். அவன் இராசதானியாகிய (பம்பாய்க்கருகில் எலிபான்டா தீவிலுள்ள) புரீ என்னும் துறைமுகப் பட்டினத்தைத் தன் வயமாக்கிக் கொண்டான், இவ் வெற்றிகளால் வட இந்திய அரசனாகிய ஹர்ஷனுக்குப் பயந்த லாடர், மாளவர், கூர்ஜரர் முதலானோர் இவனுடைய நட்பை விரும்பி இவனுக்குக் கீழ்ப்பட்டனர். ஆகவே இவன் இராச்சியத்தின் வட எல்லை மகாநதி வரை அகன்றது. ஹர்ஷன் தக்காணத்தின்மேற் படையெடுக்க முயன்றபோது புலகேசி அவனை நருமதைக் கரையில் எதிர்த்து, வெற்றி பெற்று, அவனுடைய யானைகள் பலவற்றைக் கவர்ந்தான். இவை எல்லாம் இவன் ஆட்சியில் முதல் நாலைந்து ஆண்டு களில் நிகழ்ந்தவை.

பிறகு தன் தம்பி விஷ்ணுவர்த்தனனை இளவரசனாக இராசதானியில் இருத்திவிட்டுத் தான் கீழ்த்திசைத் திக்குவிசயத்திற்காகப் புறப்பட்டான். தென் கோசல நாடு, கலிங்கம், பிஷ்டபுரம் (பிட்டாபுரம்) எல்லாம் இவன் வசமாயின. கொல்லேறு ஏரி கரையில் ஒரு பெரும்போரில் விஷ்ணுகுண்டி அரசரைத் தோற் கடித்தபின், அவர்களுக்குத் தெற்கிலாண்டு வந்த பல்லவர்மீது படையெடுத்துச் சென்றான்.

புலகேசி பாதாமிக்குத் திரும்பிய பிறகு, தன் தம்பி விஷ்ணுவர்த்தனனைத் தன் பிரதிநிதியாக ஆந்திர நாட்டை ஆளுவதற்காக அனுப்பினான். அங்கே அவன் கீழைச் சாளுக்கியரென்றும் வேங்கிச் சாளுக்கியரென்றும் பெயர்போன அரச வமிசத்தைத் தாபித்தான். அவ் வரசர்கள் பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தனர். புலகேசிக்கும் பாரசீக அரசன் ΙΙ-ம் குஸ்ருவுக்கும் கி. பி. 625-6-ல் தூதுகளும் போக்குவரத்தும் நடந்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் சமண சாக்கிய மதங்களை அடக்கிச் சைவமும் வைணவமும் தமிழுலகில் பெருகச் செய்த காலமும் இதுவே.

பாண்டியாதிராஜன் கடுங்கோனும் பல்லவ அரசன் சிம்மவிஷ்ணுவும் ஒரே காலத்தில் களப்பிரரைத் தாக்கி அவர் ஆட்சியை முடித்தனர். அதன்பின் பாண்டியருக்கு மதுரையும், பல்லவருக்குக் காஞ்சியும் தலைநகர்களாயின. சிம்மவிஷ்ணு காவேரிவரை உள்ள நாடுகளை வென்று. பாண்டியனுடனும் இலங்கை வேந்தனுடனும் போர் புரிந்தான். இவன் ஆண்டகாலம் சுமார் கி. பி. 575 முதல் 600 வரை. இவன் மகன் Ι-ம் மகேந்திரவர்மன் (600-830) விசித்திரசித்தன், மத்தவிலாசன், குணபரன் முதலான பல விருதுகள் கொண்டவன், இவன் வடமொழிப் புலமை பெற்றவன் மத்தவிலாச-