பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

657

இந்தியா

வேங்கி நாட்டு விவகாரங்களில் தலையிட்டான். அங்குத் தானார்ணவன் மூன்று ஆண்டுகள் ஆண்டபின் தெலுங்குச் சோடன் ஜடாசோடபீமனால் கொல்லப்பட்டான் (973). சோடபீமன் II-ம் சாளுக்கிய பீமனுடைய பெண் வயிற்றுப் பேரன் ; II-ம் அம்மராஜனுக்கு மைத்துனன். இவன் வேங்கியை இருபத்தேழு ஆண்டுகள் ஆண்டான் (973-1000); இவன் ஆட்சி பிற்காலத்துச் சாளுக்கியச் செப்பேடுகளில் அராஜகம் எனக் குறிக்கப்படுகின்றது. இக் காலத்தில் தானார்ணவனுடைய மக்கள் சோழநாட்டையடைந்து இராசராசனால் ஆதரிக்கப்பட்டு வந்தனர். சோடபீமன் தொண்டைநாட்டின்மீது படையெடுத்து இராசராசனுடன் போர் தொடங்கினான். இதற்குக் காரணம் இராசராசன் தானார்ணவன் மக்களை ஆதரித்ததே. சோடபீமன் தோல்வியுற்றுச் சிறைப்பட்டான். தானார்ணவனுடைய மூத்தமகன் I-ம் சக்திதர்மன் வேங்கி அரசனானான்; ஆனால் சோழ ஆதிக்கத்தின் கீழ்ச் சாளுக்கியனான விமலாதித்தியன் இராசராசன் மகள் குந்தவையை மணந்தான். இவ்விதமாகச் சோழ ஆதிக்கம் வேங்கி நாட்டில் பரவிற்று. சத்தியாசிரயன் அந்நாட்டின்மீது படையெடுக்கத் தன் சேனைத் தலைவன் பாயல் நம்பியை அனுப்பினான் (1006). அவன் தரணிக் கோட்டை முதலான பல கோட்டைகளைப் பிடித்தான். இதற்கு எதிராக இராசராசன் மகன் இராசேந்திரன் சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்து (1007), பிஜாப்பூர் ஜில்லா தோனூர் வரை சென்று நாட்டை அழித்தான். வனவாசியையும் ராய்ச்சூரையும் பிடித்துக்கொண்டு, சாளுக்கிய இராசதானியான மானியகேதம் என்னும் ஊரையும் தாக்கினான். அதே சமயத்தில் மற்றொரு சோழப்படை வேங்கியிலிருந்து கிளம்பி, ஐதராபாத்துக்கு 45 மைல் வடகிழக்காக உள்ள கொள்ளிப்பாக்கை என்னும் கோட்டையைப் பிடித்துக் கொண்டது. சத்தியாசிரயன் படைகள் வேங்கியை விட்டுப் பின்வாங்கிச் சென்றன. சோழசேனையும் மிகுந்த கொள்ளைப் பொருள்களுடன் துங்கபத்திரையின் தென்கரையை அடைந்தது.

இராசராசன் தன் ஆட்சியின் கடைசியில் ‘பல் பழங்தீவு பன்னீராயம்’ எனப்பட்ட மாலதீவுகளைப் பிடித்துத் தன் இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டான். 1012-ல் இராசேந்திரனை இளவரசனாக்கினான். தஞ்சையில் இராசராசேச்சுரமென்னும் பெரிய கோயிலை நிருமித்தான். கோயில் கட்டி முடிந்த ஆண்டு சு. 1010. நாகபட்டினத்தில் சைலேந்திர வமிசத்தைச் சார்ந்த ஸ்ரீ விஜய நாட்டு அரசன் மாரவிஜயோத்துங்கவர்மனுக்கு ஒரு பெரும் பௌத்த விஹாரம் கட்ட அனுமதி கொடுத்தான். அதன் பெயர் சூடாமணி விஹாரம். சூடாமணர்வர்மன் மாரவிஜயோத்துங்கவர்மனுடைய தகப்பன். இராசராசன் ஆட்சி 1014-ல் முடிவு பெற்றது.

முதல் இராசேந்திரன் காலத்தில் (ஆ. கா. 1014 1044) சோழ சாம்ராச்சியம் இன்னும் பிரபலமாக வளர்ந்தது. இலங்கை முற்றிலும் வெல்லப்பட்டது. அதன் அரசன் V-ம் மகிந்தன் சிறைப்பட்டுச் சோழநாட்டில் இறந்தான். ஆனால் மகிந்தன் மகன் கஸ்ஸபன் தென்னிலங்கையில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி, I-ம் விக்கிரமபாகு என்னும் பட்டத்துடன் 1029-1041 வரை ஆண்டுவந்தான். பாண்டிய, கேரள நாடுகளை ஆளுவதற்காகத் தன் புதல்வரில் ஒருவனை இராசேந்திரன் சோழபாண்டியன் என்னும் பட்டங்கட்டித் தன் பிரதிநிதியாக மதுரையில் அமர்த்தினான்.

சாளுக்கிய நாட்டில் 1008-ல் சத்தியாசிரயனுக்குப் பின் அவன் தம்பி மகன் V-ம் விக்கிரமாதித்தன் பட்டமேற்று ஏழாண்டுகள் ஆண்டான். 1015 முதல் விக்கிரமாதித்தன் தம்பி II-ம் ஜயசிம்மன் (1015-42) ஆட்சி புரிந்தான். ஜயசிம்மனுக்குப் பகைவர் பலர். மாளவநாட்டரசன் பரமாரபோஜன், முன் முஞ்சனடைந்த தோல்விக்குப் பதிலாக லாட தேசத்தையும் வட கொங்கணத்தின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்தான்; கடும்போர் புரிந்து, பின்னரே ஜயசிம்மன் தன் நாட்டை மீட்டுக்கொண்டான். ஆனால் இராசேந்திரனே அவனுக்கு முக்கியப் பகைவன். சோழன் தென்னாடுகளில் போர் புரிந்துகொண்டிருந்த காலத்தில் ஜயசிம்மன் வேங்கி நாட்டில் கலகம் ஆரம்பித்தான். அங்கே I-ம் சக்திவர்மனுக்குப் பின் அவன் தம்பி விமலாதித்தன் ஏழாண்டுகள் (1011-18) ஆண்டான். அவனுக்குச் சோழராணி குந்தவையிடம் பிறந்த இராசராசன் பட்டத்துக்கு வராமல் தடுப்பதற்காக ஜயசிம்மன் விமலாதித்தனுடைய மற்றொரு மகன் VII-ம் விஜயாதித்தனைக் கிளப்பிவிட்டான். மேலும் துங்க பத்திரையைக் கடந்து பல்லாரியையும், கங்கவாடியின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்தான். இச் செய்திகளைக் கேட்டதும் இராசேந்திரன் இரண்டு சேனைகளை வடக்கே அனுப்பினான். ஒன்று துங்கபத்திரையைத் தாண்டி, முசங்கி (தற்கால மாஸ்கி)ப் போரில் ஜயசிம்மனைத் தோல்வியுறச் செய்தது. மற்றது வேங்கி நாட்டில் புகுந்து, விஜயாதித்தனைப் பலமுறை தாக்கி, வேங்கியை இராசராசன் வசமாக்கி, ஜயசிம்மனுடன் சேர்ந்த கலிங்க அரசன் மதுகாமார்ணவனைத் (ஆ. கா. 1019 1038) தண்டித்த பின் வெற்றிகரமாகக் கங்கையை நோக்கிச் சென்றது. இப்படையெழுச்சியினால் இராசேந்திரனுக்குக் கங்கைகொண்ட சோழன் என்ற பட்டம் வந்தது. ஆனால் அப்படை வடநாட்டிலிருக்கும் போது அதற்குத் திரும்பமுடியாத விபத்துக்கள் நேராமலிருப்பதற்காக இராசேந்திரனே நேராகக் கோதாவரிக்கரை சென்று, மீளும் வழியில் தன் மருமகன் இராசராசனுடைய பட்டாபிஷேகத்தைச் செவ்வனே நடத்திவைத்தான் (1022). பிறகு கங்கையைக்கொண்டு திரும்பிய படையுடன் தன் புதிய தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்திற்குத் திரும்பினான்.

இராசேந்திரன் ஆட்சியில் அடுத்த பெருநிகழ்ச்சி ஸ்ரீ விஜய இராச்சியத்தின்மீது படையெடுப்பு. இந்நாட்டிற்கும் சோழருக்கும் ஏற்பட்டிருந்த நட்பு ஏதோ காரணம்பற்றி மாறியது. ஒரு வேளை சோழநாட்டார் சீன தேசத்தோடு செய்துவந்த வியாபாரத்திற்கு ஸ்ரீ விஜய அரசரால் இடையூறுகள் ஏற்பட்டிருக்கலாம். ஏனென்றால், சீனாவிற்குப் போகும் வழிகளெல்லாம் அவர்களுடைய பரந்த கடல் இராச்சியத்தின் வழியே அமைந்தவை. அல்லது இராசேந்திரன் தன் திக்குவிசயத்தில் சமுத்திர இராச்சியமான ஸ்ரீ விஜயத்தையும் வெல்ல வேண்டியது அவசியமென்று கருதியிருக்கலாம். அது எப்படியாயினும் சுமார் கி. பி. 1025-ல் அலைகடல் “நடுவுட் பலகலஞ் செலுத்தி” இராசேந்திரன் கடாரம், ஸ்ரீ விஜயம் முதலிய பல பட்டணங்களைத் தாக்கி, மார விஜயோத்துங்கவர்மனுக்குப் பின் ஆண்ட சங்கிராம விஜயோத்துங்கனைச் சிலகாலம் சிறையிலிட்டான். கடைசியாக அவன் நாட்டை அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டுச் சோழக் கடற்படை மீண்டது. சுமாத்திரா தீவில் கி. பி. 1088-ல் வரையப்பட்ட தமிழ்ச் சாசனப்பகுதி ஒன்று தமிழ்நாட்டிற்கும் ஸ்ரீவிஜயத்திற்கும் உள்ள நீடித்தவாணிகத் தொடர்பைக் குறிக்கிறது. சோழ நாட்டிலிருந்து சீனதேசத்திற்கு